சென்னை, செப். 14–
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இரண்டாவது முறையாக போலீஸ் சம்மன் வழங்கியுள்ளது.
தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். சீமானை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீமானுக்கு மீண்டும் சம்மன்
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு செப்டம்பர் 9-ஆம் தேதி நேரில் ஆஜராக வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், வெளியூர் செல்வதால் செவ்வாய்க்கிழமை ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், விசாரணைக்கு சீமான் ஆஜராகமல் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி சீமானின் இரண்டு கடிதத்தை கொடுத்து விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற வளசரவாக்கம் போலீசார், சீமானை நேரில் சந்தித்து காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வரும் 18-ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.