சென்னை, மார்ச் 06–
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி 19ஆம் தேதி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
19 ந்தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு
அதில், 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதம் மற்றும் விசாரணையின் அடிப்படையில், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
கடந்த முறை வழக்கு விசாரணையின்போது, காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக, நடிகை விஜயலட்சுமி செப்டம்பர் 29ல் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்படவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 19ஆம் தேதி பிற்பகல் 2:15 மணிக்கு நடிகை விஜயலட்சுமி ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.