பீஜிங், மார்ச் 9–
சீன பெண்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சீன மக்கள் தொகையில் கடந்த 60 ஆண்டுகளில் தற்போது பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் பெரும்பாலான பெண்கள் ஒரு குழந்தையை பெறவோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளவே விரும்பவில்லை என்றுதான் புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கு குழந்தை இல்லாத பெண்களின் எண்ணிக்கை 2015 இல் இருந்த 6 சதத்திலிருந்து 2020 இல் 10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று சீனாவின் மக்கள்தொகை மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை, பெண்களிடையே குறைந்து வருகிறது என்று இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2017 ஆம் ஆண்டில் சீனப் பெண்களின் குழந்தைகளைப் பெறுவதற்கான சராசரி விருப்ப எண்ணிக்கை 1.76 ஆக இருந்தது, இது 2021 இல் 1.64 ஆகக் குறைந்துள்ளது. சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளில் பெரும்பாலானோர் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புவதாகக் கூறுகின்றனர். ஆனாலும் கூட, அங்கும் கருவுறுதல் விகிதம் 2 க்கும் குறைவாகவே உள்ளது.
செலவு அதிகமாகும்
ஆனால், இந்த விஷயத்தில் சீனா வேறுபட்டுள்ளது. உண்மையான கருவுறுதல் விகிதம் இங்கு குறைவாக உள்ளது. அதனுடன் கூடவே இனப்பெருக்கம் செய்யும் விருப்பமும் இல்லை என்று, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸின் சர்வதேச மற்றும் சமூகக் கொள்கையின் உதவிப் பேராசிரியர் ஷுவாங் சென் கூறியுள்ளார்.
சீனாவில் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததற்கு முக்கிய காரணம் குழந்தை வளர்ப்புச் செலவு அதிகமாக இருப்பதுதான். ஒரு குழந்தை பிறந்தவுடன், அது மற்றவர்களுடன் போட்டியிடத் தொடங்குகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்கிறார்கள். இதற்காக அவர்கள் நல்ல பள்ளிகளுக்கு அருகில் வீடுகளை வாங்க முயற்சிக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பல்வேறு கலாச்சார மற்றும் பிற நடவடிக்கைகளில் சேர்க்கிறார்கள்.
தான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால், தற்போதைய செலவுகளுடன் கூடுதலாக ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் (2500 டாலர்கள்) குழந்தைக்காக செலவிட வேண்டியிருக்கும் என்று கருதுகின்றனர். இவ்வளவு கடுமையான போட்டி இருக்கும் சூழலில் குழந்தைகளை பெற்று வளர்க்க விரும்பவில்லை என்பது அவர்களின் கூற்று. மேலும் தங்கள் தொழில் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்பதும் கூடுதல் காரணமாக கூறுகிறார்கள்.