செய்திகள்

சீன தலைநகரான பீஜிங்கில் இனி முக கவசம் அணிய தேவையில்லை

பீஜிங், மே.18-

சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் இனி பொதுவெளியில் முக கவசம் அணிய தேவையில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

சீனாவின் மத்திய நகரமான உகானில் டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் ஏற்பட்டு, 200 நாடுகளில் பரவியது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுகள் வலியுறுத்தி வரும் 2 அம்சங்களில் முதல் அம்சம், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். இரண்டாவது அம்சம் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும்.சீன தலைநகரான பீஜிங்கில் இனி வீட்டை விட்டு வெளியே பொதுவெளியில் செல்வோர் முக கவசம் அணியத்தேவையில்லை. அவர்கள் சுதந்திர காற்றை சுகமாக இனி அனுபவிக்கலாம். இதற்கான அறிவிப்பை பீஜிங் நகர நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இது குறித்து அந்த மையம் கூறும்போது, “பொதுமக்கள் இனி முக கவசம் அணிய தேவையில்லை. ஆனால் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத்தவிர்க்க வேண்டும். அதாவது தனிமனித இடைவெளியை தொடர வேண்டும்” என தெரிவித்தது.

இதற்கிடையே சீனாவில் 17 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உள்ளது. அவர்களில் 12 பேருக்கு அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என சீன தேசிய சுகாதார கமிஷன் கூறி உள்ளது. மேலும் இந்த வைரஸ் தோன்றிய உகான் நகரில் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்து 947 ஆகவும், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 227 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 4,634 ஆகவும் இருந்தது. தலைநகர் பீஜிங்கில் இந்த நோய் தொற்றிலிருந்து இருந்து 570-க்கும் மேற்பட்டோர் மீண்டு வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *