டெல்லி, டிச. 21–
இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரம், ஊடுருவல் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தினர்.
இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரம், சீன ஊடுருவல் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், ஆளும் பாரதீய ஜனதா அரசு அதனை ஏற்க மறுத்துவிட்டது.
12 கட்சிகள் போராட்டம்
அதன் அடிப்படையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் காலை 10:15 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒத்த கருத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களையும் எழுப்பின. டிசம்பர் 7- ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இந்தியா-சீனா எல்லை விவகாரம் மற்றும் அண்மை கால சீன அத்துமீறல்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இரு அவைகளிலும் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.