நாடும் நடப்பும்
கடந்த வாரம் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் நம் எல்லைக்குள் நுழைய முற்பட்ட போது நமது வீரர்கள் தடுத்து நிறுத்தி பின் வாங்க வைத்ததை ஊடகங்களில் தலைப்புச் செய்தியாய் இருந்ததை பார்த்தோம்.
பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியிருப்பது:– பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவின் ஓர் அங்குல நிலத்தைக்கூட யாரும் அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இம்முறை சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தலாய் பகுதியில் ஆகும்.
இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒட்டுமொத்த அருணாச்சல பிரதேசத்தையும் கண்காணிக்க முடியும்.
அதோடு சீனா, பூடான் எல்லையில் தவாங் அமைந்திருக்கிறது. இங்கிருந்து ஒட்டுமொத்த திபெத்தையும் கண்காணிக்க முடியும். திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, தவாங் பகுதியில் தங்கிச் சென்றுள்ளார். அங்கு பிரம்மாண்ட புத்த மடாலயமும் அமைந்துள்ளது. இது சீனாவுக்கு கவுரவ பிரச்சினையாக உள்ளது.
மேலும் அமெரிக்காவின் நயாகராவுக்கு இணையான நீர்வீழ்ச்சிகள் தவாங்கில் அமைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 108 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இவை புனித நீர்வீழ்ச்சிகள் என்றழைக்கப் படுகின்றன. இவற்றை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்து அப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட அழகிய மலைப்பகுதிக்கு வடஇந்தியர்களும் மிக அதிகமாக சுற்றுலா செல்வது கிடையாது, தென் இந்தியர்களும் அங்கு சென்று இயற்கை அழகை ரசிக்க செல்வது மிக மிக குறைவே!
இந்நிலை மாறி கோடை காலத்தில் ஊட்டி, கொடைக்கானலில் ஏற்படும் நெரிசலை போல் நமது அழகிய வடகிழக்கு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்று ரசிக்க ஆரம்பித்தால் வர்த்தகமும் சுற்றுலா கட்டுமானமும் மேம்பட இது நமது தேசம், நம் மண் என்ற எண்ணத்தில் அண்டை நாடான சீனா இப்பகுதியில் ஊடுருவத் தயங்கும்.
அப்பகுதி மக்களுக்கு பெரிய வருமானம் ஏதும் கிடையாது, அப்பகுதியில் தொழில் கட்டுமானம் உருவாகவும் கூடாது! ஆக சுற்றுலா துறை வளர வளர சர்வதேச பயணியர்களும் இப்பகுதிக்கு வர துவங்கி விட்டால் ஏழ்மை நிலை மாறி பணத்திற்கு எதையும் செய்யலாம் என்று இல்லாமல் நிம்மதியாக வாழ வழி காண்பர், தவறுகள் நடக்க ஆள் நடமாட்டமில்லா பிரதேசமாக இருப்பதாலும் இருக்கலாம் அல்லவா?