பீஜிங், பிப்.22–
சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு விரைவில் பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஊடகங்கள், “சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ரஷ்யப் பயணம் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தின் துவக்கத்தில் இருக்கும்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. சீன அரசின் தலைமை பிரதிநிதி வாங் யீ தற்போது மாஸ்கோவில் இருக்கிறார், இன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாங் யீயின் ஐரோப்பிய பயணத்தில் ரஷ்யா – உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறும் அவர் வலியுறுத்தினார். புதின் – ஜி ஜின்பிங்கின் சந்திப்பு கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்தது. இந்த நிலையில் ஒருவருடத்திற்கு பிறகு மீண்டும் சந்திக்க உள்ளனர்.
முன்னதாக, ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, ”நமது நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்திற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உக்ரைன் உடன் போர் ஏற்பட்டுவிடக் கூடாது என நாம் மிகுந்த பொறுமையுடன் இருந்தோம். இதற்காக சாத்தியமான அனைத்தையும் செய்தோம். பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண முயன்றோம். அமைதியான முறையில் விட்டுக் கொடுத்துச் செல்வதற்கே முயன்றோம்.
ஆனால், நமது முதுகில் குத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டன என்று பேசியிருந்தார்.