போஸ்டர் செய்தி

சீனா, பாக். சிக்கலுக்கு மோடியின் புதிய தீர்வு

Spread the love

புதுடெல்லி, ஜூன்.2–
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர், வெளிநாடுகளில் துாதராக பணியாற்றியவரான ஜெய்சங்கர் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான சிக்கலுக்கு தீர்வு காண மோடி வழி கண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசுடன், எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் பிரச்னை, காஷ்மீர் பிரச்னை, சமீபத்தில் நடந்த புல்வாமா பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பாலக்கோட்டில் இந்தியா பதிலடி அபிநந்தன் கைது, விடுதலை போன்ற முக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன.
அதேபோல, சீன, அமெரிக்கா இடையில் வர்த்தகப்போரும் தீவிரமடைந்துள்ளது. தெற்கு ஆசியக்கடலில் சீனாவின் பட்டுப்பாதை, தென்சீனக்கடலில் சீனாவின் ஆதிக்கம் போன்ற முக்கிய பிரச்னைகள் இருக்கின்றன.
இந்நிலையில் ஜெய்சங்கர் புதிய வெளியுறவு துறை அமைச்சராகி இருப்பதால், சீனா மற்றும் பாகிஸ்தான் பிரச்னைகளில் இந்தியாவின் போர்த்தந்திர நடவடிக்கைளில் பெரிதும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலான திறனோடு இந்தியா செயல்படும்; புதிய போர் தந்திரத்தை கையில் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுஷ்மா சுவராஜ் அடிச்சுவட்டில்…
இதுவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் சுஷ்மா சுவராஜ். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், அதை சுமூகமாக தீர்த்து வைப்பதில் சுஷ்மா சுவராஜ் முனைப்பு காட்டுவாரோ, அதே ஸ்டைலில் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஜெய்சங்கர்.
புதிய வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்ற அடுத்த நாளே ஜெய்சங்கர், தன் ட்விட்டர் மூலம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் கோரிக்கை என்ன என்பது குறித்து கேட்க ஆரம்பித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் (குவைத்) கோர்ட் சம்மன்கள் அனுப்பியும், கணவன் எங்கே இருக்கிறார் என்று தெரியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று வேதனையை வெளிகாட்ட இளம் பெண்ணுக்கு ‘கவலை வேண்டாம், குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அது சம்பந்தமாக செயல்பட்டு வருகிறது. தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்’ என்று பதில் கொடுத்துள்ளார்.
சீன அதிகாரிகள் வாழ்த்து
மத்திய வெளியுறவுச் செயலாளராக இருந்து, அதே துறையில் முதல் நபர் ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்சங்கருக்கு சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பாராட்டையும், வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.
சீனாவைப் பற்றி நன்கறிந்தவர் ஜெய்சங்கர். இந்திய தூதராக 2009– முதல் 2013 வரை நீண்ட நாள் பொறுப்பில் இருந்தவர்.
அதேபோல அமெரிக்காவிலும் தூதராக இருந்திருப்பவர். ஆகவே மோடி காட்டும் வழியில் இந்திய – சீன உறவுகள் மேம்படும் என்று சீனா– தெற்காசிய ஒத்துழைப்பு ஆய்வுகளுக்கான மையத்தின் பொதுச் செயலாளர் லியு சோங்காய் நம்பிக்கை தெரிவித்தார்.
திறமைசாலி சாதூர்ய பேச்சு
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஜெய்சங்கர், 1955 ல், புதுடில்லியில் பிறந்தவர். விமானப்படை பள்ளியில் பயின்றவர். 1977 ஐ.எப்.எஸ்., தேர்வில் வெற்றிபெற்று சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில், இந்தியாவின் துாதராக பணியாற்றி அனுபவம் பெற்றவர்.சீனாவுன் டோக்லாம் பிரச்னை மற்றும் பாக்., உடன் லடாக் மற்றும் தேப்சாங்., போன்ற விவகாரங்களை மிகவும் திறமையுடனும், சாதுரியத்துடனும் கையாண்டவர், ஜெய்சங்கர்.
ஏற்கனவே, இதுபோன்ற வெளியுறவுத்துறை விவகாரங்களில் அனுபவம் பெற்றவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகி இருப்பதால், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான, போர்த்தந்திர நடவடிக்கைகளில் பெரிதும் மாற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு புதுடெல்லி அரசுத்துறை வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *