அமுல்படுத்திய 24 மணி நேரத்திலேயே வாபஸ்
வாஷிங்டன், ஏப். 10–
உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே விகிதத்தில் பரஸ்பரமாக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த 2-ந்தேதி எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை சதவீதம் வரி என்று டிரம்ப் அறிவித்தார். இந்த வரிவிதிப்பு 9-ந்தேதி (நேற்று) அமலுக்கு வரும் என்று அறிவித்தார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்தார்.சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைய அமெரிக்க பொருட்களுக்கான வரி இன்று (10–ந்தேதி) முதல் 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் என்ற அச்சம் எழுந்த நிலையில்,
பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய 24 மணி நேரத்திலேயே திடீரென வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனா எதிர்த்ததால்
125% வரி விதிப்பு
வரி நிறுத்தம் பற்றி அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “பரஸ்பர வரி விதிப்பை அடுத்து உலகளவில் பல்வேறு நாடுகளும் இது தொடர்பாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவே விருப்பம் தெரிவித்தன, சீனாவைப் போல வரிக்கு வரி விதிக்கவில்லை. உலக நாடுகளின் விருப்பங்களை மதித்து நாங்கள் புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். ஆனால் சீனா எங்களை மதிக்கவில்லை. எங்களின் பரஸ்பர வரிக்கு மேலும் மேலும் வரி விதிக்கிறது. இதனால் நாங்கள் சீனாவுக்கான வரியை 104 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்துள்ளோம். நாங்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தோம். எங்கள் வரிக்கு வரி விதிக்க வேண்டாம் என்று. சீனா அதை கேட்கவில்லை. நாங்கள் இப்போது அதன் மீதான வரியை 125 சதவீதமாக அதிகரித்துள்ளோம். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் பேச்சுவார்த்தை நடத்துங்கள் பலன் பெறுங்கள்; எதிர்த்துப் பாருங்கள் எகிறும் வரியை அனுபவியுங்கள்.
ஆனாலும் பரஸ்பர வரி விதிப்பில் பேஸ்லைன் வரியாக 10% வரி விதிப்பு மட்டும் எல்லா நாடுகளுக்குமே தொடரும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன தயாரிப்புகள் அமெரிக்க சந்தைக்கு பதிலாக இந்திய சந்தையை குறிவைக்கலாம். இதனால் இங்கு உள்நாட்டில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.