ஆர். முத்துக்குமார்
மழை நின்ற பிறகும் தூறல் விட்டபாடில்லை. அதுபோன்று தான் உலகெங்கும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டாலும் சில நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை!
இப்பட்டியலில் முன்னணியில் சீனா இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் விட்டபாடாக தெரியவில்லை.
சீனாவில் தலைநகர் பெய்ஜிங்கிலும் சாங்காய் உட்பட பல நகரங்களில் கிட்டத்தட்ட முழு ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் பகுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது.
சீனாவில் தொடரும் கொரோனா பரவலை தடுக்க ‘ஜீரோ கோவிட்’ அணுகுமுறை செயல்பாட்டில் இருப்பதை அறிவோம். அதன்படி எங்கேனும் நான்குக்கும் மேல் கொரோனா பாதிப்பு உருவானால் அந்த நகரமே முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது.
மேலும் கட்டாய கோவிட்–19 சோதனைகளும் வீடுவீடாக எடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டால் குடும்பத்தாரும் பக்கத்து வீட்டுகாரர்களும் வெளியே செல்லாமல் தனிமைப்படுத்தப் பட்டு விடுகிறார்கள்.
2019–ல் முதல் பாதிப்பு சீனாவில் தான். 2020 மார்ச் மாதத்தில் சர்வதேச நாடுகள் தொற்றுப் பரவலில் இருந்து தப்பித்துக்கொள்ள முழு ஊரடங்கு அறிவித்தோம்.
ஆனால் 2021 ஆண்டு துவக்கத்திலேயே கொரோனாத் தடுப்பூசிகள் வர துவங்கியதும் நிம்மதி பெருமூச்சுவிட்டு ஊரடங்கு மெல்ல விலக்கப்பட்டது.
ஆனாலும் சர்வதேச விமான பயணங்கள் மிக கவனமாகவே சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.
ஆனால் சீனா உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்ட தடுப்பூசிகளை புறக்கணித்து தங்கள் நாட்டிலேயே உருவாகிய தடுப்பூசி மருந்துகளை மட்டும் அங்கீகரித்துள்ளது. அவை உலக சுகாதார மையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படாத நிலையில் அதன் வீரிய சக்தி பற்றிய அச்சம் நிலவுகிறது.
சீனாவில் தடுப்பூசி பற்றிய பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வழி காணாத நிலையும் தொடர்கிறது. மொத்தத்தில் சீனாவின் சுற்றுலா பொருளாதாரமும் தயாரிப்பு பொருளாதாரமும் படுமோசமாகவே இருக்கிறது. மேலும் அந்நாட்டு சுகாதார நிலைமை பொதுமக்களுக்கு பெரும் தலைவலியாகவே தொடர்கிறது.
ஆஸ்திரேலியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. தினமும் சுமார் 20 ஆயிரம் பேராவது பாதிப்படைந்து வருகிறார்கள். சென்ற வாரம் ஒரு உல்லாச பயணிகள் கப்பலில் இருந்தவர்களில் 800 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் பாதிப்பால் மரணம் ஏதும் கடந்த 6 மாதங்களில் கிடையாது.
சீனாவில் தான் கடந்த வாரம் 2 பேர் இறந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாதிப்பு மிகக் குறைந்து விட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் சர்வதேச விமான பயணிகளுக்கு இருந்த முக கவச கட்டுப்பாடுகள், ஆர்.டி.–பிசிஆர் கட்டாய பரிசோதனைகள் தேவை இல்லை என்று அறிவித்து விட்டது.
உலகமே பிரமிப்படைந்த மிகப்பெரிய கோவிட் 19 தடுப்பூசி செலுத்தல் நம்நாட்டில் 2021–ல் ஜனவரி 16 முதல் துவங்கியது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் உலக நாடுகள் பயத்துடன் முழு ஊரடங்கு நிலையை தளர்த்தி ஓரளவு எந்தவித அச்ச பயமின்றி சகஜ வாழ்க்கை தொடர ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் சீனாவில் மீண்டும் உண்மையில் தொற்று பரவலின் வீரியம் குறைந்து விடாமல் தொடர்வது ஏதேனும் புதிய அவதாரத்தை உருவாக்கி பூதாகரமாக உயர்ந்து தொல்லை கொடுக்குமோ? என்ற அச்சக் கேள்வியை எழுப்பி கொண்டு இருக்கிறது.
உலகம் முழுவதும் 65 கோடி பேர் பாதிப்படைந்து உள்ளனர். ஐரோப்பிய பகுதியில் 24 கோடி பேரும், ஆசியாவில் 20 கோடி பேரும் பாதிப்படைந்து உள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
நம் நாட்டில் 4 கோடியே 45 லட்சம் பேர் பாதிப்படைந்து 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் மரணமடைந்து விட்டனர்.
அமெரிக்காவில் தான் மிக அதிகமான பாதிப்பு!
இதுவரை 10 கோடிக்கு மேல் பாதிப்படைந்தோர் உள்ளனர். அதில் 11 லட்சம் பேர் மரணித்து விட்டனர்.
சீனாவில் 3 லட்சம் பேர் தான் பாதிப்படைந்து இருப்பதாக கூறுகிறார்கள், அதில் 5229 பேர் இறந்து உள்ளனராம். இதில் புதிய தொற்றினால் பாதிப்படைந்தவர்கள் 2365 பேர். இறந்தவர்கள் 2 பேர்.
இனி சற்று கவனமாகத் தான் இருக்கவேண்டும். இதை உலகம் மறந்து விடவில்லை. ஆகவே தடுப்பூசி செலுத்துதல் தீவிரமாகவே தொடர்கிறது.
இந்தியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான வரையறைகள் என்ன? சர்வதேச பயணிகள் வரும் முன் செய்ய வேண்டியவை என்ன? என்ன சரியாக, தெளிவாக அறிவிக்கப்படாத நிலையால் பல்வேறு குழப்பங்கள் தொடர்வதும் புது சிக்கல்கள் எழுந்துள்ளது.