பெய்ஜிங், டிச. 19–
சீனாவில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவிதை அடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பதிவான இறப்புகளுடன் அந்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,237 ஆக உயர்ந்தது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு, இதய நோய் பாதிப்பு உள்பட பிற நோயாளிகளின் இறப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இறப்புகளை, சீன சுகாதாரத்துறை, கொரோனா இறப்பு கணக்கில் சேரப்பதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றால், அடுத்த மாதம் முதல் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஜனவரி மாதம் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட பயணங்களை அந்நாட்டு மக்கள் மேற்கொள்வார்கள் என்பதால், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஊழியர்களின் பற்றாக்குறையுடன் மருத்துவமனைகள் இயக்கி வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.