செய்திகள்

சீனாவில் இந்திய ஊடகங்களுக்குத் தடை: நடவடிக்கை எடுக்க ஐஎன்எஸ் கோரிக்கை

டெல்லி, ஜூலை 3-

இந்திய ஊடகம் மற்றும் வலைதளங்களை சீனா தடை செய்துள்ளதற்கு, நடவடிக்கை எடுக்குமாறு இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சீன நிறுவனங்களைச் சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. சீனாவின் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ ஆதரவளித்துள்ளார்.

சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘மத்திய அரசின் நடவடிக்கை இந்தியாவின் சந்தை போட்டிக்கும், நுகர்வோர் நலனுக்கும் உகந்ததல்ல’ எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களை சீனா தடை செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) ஓர் அறிக்கையை வெளியிட்டது.

இந்த அறிக்கை குறித்து ஐஎன்எஸ் உறுப்பினர்கள் சார்பாக ஐஎன்எஸ் தலைவர் ஷைலேஷ் குப்தா, “இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடக வலைதளங்களின் அணுகலை அரசாங்கத்தின் நடவடிக்கை கட்டுப்படுத்த முடியாது. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஃபயர்வாலை உருவாக்குவதன் மூலம் விபிஎன் சேவையகம் வழியாக அணுகல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் இந்தியாவில் சீன ஊடகங்களுக்கான அனைத்து வகையான அணுகல்களையும் தடைசெய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ஊடக நிறுவனங்களில் சீனர்கள் மேற்கொண்ட ஒத்துழைப்புகள், முதலீடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *