டெல்லி, பிப். 6–
சீனாவின் கடன் மற்றும் சூதாட்டம் (பெட்டிங்) தொடர்பான 232 மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேச பாதுகாப்பு கருதி சீன நாட்டின் மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. ஏற்கனவே டிக்-டாக் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது. இதுமட்டுமின்றி, சில சீன தயாரிப்பு மொபைல்கள், சீனாவின் நட்பு நாடுகளை சேர்ந்த செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளன.
232 செயலிகளுக்கு தடை
இந்த நிலையில், தற்போது, 200 க்கும் மேற்பட்ட கடன் மற்றும் சூதாட்டம் தொடர்பான மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி சூதாட்டம் மற்றும் பண மோசடிகளில் தொடர்புடைய 138 செல்போன் செயலிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத 94 கடன் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கடன் செயலிகள் மூலம், நமது நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாகவும், மேலும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவதாகவும் ஏராளமான புகார்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அதற்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.