செய்திகள் நாடும் நடப்பும்

சீனாவின் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்த இருக்கும் சிக்கல்கள்


ஆர் முத்துக்குமார்


சீனாவின் பொருளாதாரம் சரியில்லாமல் இருக்கும்போது உலக அளவில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகயை கொண்ட சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடாகத் திகழ்கிறது.

ஆனால் மெதுவான வளர்ச்சி அதிகரிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி என்று பொருளாதாரரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளைச் சீனா தற்போது சந்தித்து வருகிறது.

மேலும் நாட்டின் பெரும் கடனாளியான எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர், காவல் துறை கண்காணிப்பின் கீழ் உள்ளார். அத்துடன் பங்குச் சந்தையில் இருந்து இந்நிறுவனம் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய தனியார் சொத்து உருவாக்குநர்களில் ஒருவரான சைனா எவர்கிராண்டே குழுமத்தின் கடல்கடந்த கடன் மறுசீரமைப்புத் திட்டம் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது,மேலும் இந்நிறுவனம் கலைக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது என்று தொழில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பொருளாதார ரீதியிலான இதுபோன்ற சிக்கல்கள் சீனாவுக்கு பெரும் தலைவலியாக இருக்கின்றன. இத்தகைய சூழலில் உலகின் பிற நாடுகள் சீனாவின் இந்தப் பாதிப்பு குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியம் உள்ளதா?

சீனா சந்தித்து வரும் பாதிப்புகளால் பிற உலக நாடுகள் சந்திக்க உள்ள நெருக்கடிகள் பற்றிய கவலைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள், அவற்றின் பணியாளர்கள் மற்றும் சீனாவுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள்கூட அந்நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார ரீதியான பாதிப்பின் எதிரொலியாக சில எதிர்மறை விளைவுகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

ஆப்பிள், வோல்க்ஸ்வேகன், பர்பெர்ரி போன்ற நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவின் பரந்த நுகர்வோர் சந்தையில் இருந்து தங்கள் வருவாயைப் பெறுகின்றன.

இந்த நிலையில் சீன நுகர்வோர் இந்நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் அல்லது தயாரிப்புகளை வாங்குவதற்கான தங்களின் செலவினங்களைக் குறைத்துக் கொண்டுள்ளது.இது இந்த நிறுவனங்களின் வருவாயில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) 2013 இல் தொடங்கப்பட்டது, இது உலக அரங்கில் பாகிஸ்தானின் அடையாளத்தை முற்றிலுமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் தெற்காசியாவின் முக்கிய சக்திகளில் ஒன்றாக பாகிஸ்தான் மாற வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடனும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் ஒரு பத்தாண்டுக்குப் பிறகு தற்போது இந்தத் திட்டத்தின் காரணமாக எப்போதும் நண்பர்களாகக் கருதப்படும் சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊகங்கள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலான வளர்ச்சிக்கு சீனாதான் காரணம். இதை நாம் கருத்தில் கொண்டால் சீனாவில் ஏற்படும் பொருளாதார மந்த நிலை, அதன் எல்லைகளுக்கு அப்பால் பாதகத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் என்பதும் புரியும்.

சீனாவின் பொருளாதார வீழ்ச்சி இந்தியாவில் சிக்கல்களை ஏற்படுத்திவிடாமல் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்பதை உணர வேண்டிய தருணம் இது .


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *