செய்திகள்

‘‘சீதா நவரசம்’’: 10 விரல் தட்ட வைத்த லட்சுமி கண்ணனின் 8 சிஷ்யைகள்!

சென்னை , டிச 27

சென்னை மயிலாப்பூரில் உள்ளது ஜதீஸ்வராலயா அகாடமி நாட்டிய பள்ளி (கதக் நிருத்யம்–பரதநாட்டிய மையம்). லட்சுமி கண்ணன் நிறுவனர், குரு. இவரது சிஷ்யைகள் ‘‘நவரசங்களில் சீதா’’ என்னும் தலைப்பில் அருமையான நாட்டிய நாடகத்தை கீழ்ப்பாக்கம் பாரதிய வித்யா பவனில் உள்ள அரங்கில் மேடை ஏற்றினார்கள்.

சீதையின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை வர்ணிக்கும் பாடலில், ஒவ்வொரு சம்பவத்திலும் அவரது உணர்வுகளின் வெளிப்பாட்டையே மையப் பொருளாக எடுத்துக்கொண்டு நாட்டிய நாடகத்தை வடிவமைத்திருந்தார் குரு லட்சுமி கண்ணன்.

ஒவ்வொரு பாடலையும் எழுதி அதற்கு மேடையில் இசையமைத்து (கீ போர்டு) இருந்தார் முனைவர் வேங்கட சுப்பிரமணியன். இவரோடு மிருந்தங்கமும் (பாலாஜி) துணை சேர பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்கள் குருவும் சிஷ்யைகளும். நவரசங்களும் 90 நிமிடத்தில் மின்னல் வேகத்தில்.

ஹாஸ்யம், சிருங்காரம், சாந்தம், வெறுப்பு, பயம் , வீரம், அதிசயம், மகிழ்ச்சி இப்படி நவரசங்களும் லட்சுமி கண்ணனின் நாட்டிய வடிவமைப்பில்.

சாய் அபர்ணா லட்சுமணனாக, அக்னிப்பிரவேச காட்சியில் சீதையாக.

ஸ்வேதா சூர்ப்பனையாக, சாம்பவிகா அனுமனாக, சுருதி சுயம்வரத்திலும், சீதா ராவணன அபகரிப்பிலும் சீதையாக (ராவணன் கடத்தல்),

சர்ஜனா ஸ்ரீ அசோக வனத்து சீதையாக, இருப்பிடம் அமைப்பதிலும் சித்திரக்கூடத்தில் சீதைக்கு ஆறுதல் சொல்லி தேற்றுவதிலும் குகனாக,

கீர்த்தனா சீதை அபகரிப்பில் ராவணனாக, மனஸ்வினி சூர்ப்பனகை மோகம் கொள்ளும் ராமனாக, சீதை சுயம்வரத்தில் ராவணனாக…

கைக்கு அடக்கமான எட்டு இளம் கலைஞர்களை வைத்துக் கொண்டு ராமாயணக் கதையில் முக்கிய பதிவுகளை சீதையின் நவரசமாக நாட்டிய நாடகமாக வடிவமைத்ததில் லட்சுமி எட்டடி எடுத்து வைத்தார் என்றால் சிஷ்யைகள் 16 அடி பாய்ந்திருக்கிறார்கள். ஆசானின் முயற்சியும், சிஷ்யைகளின் பயிற்சியும் பார்வையாளர்களை அருமையாய்ப் பேச வைத்தது.

சூர்ப்பனகை – சூப்பர், ராவணன் மனஸ்வினி – மார்வெலஸ் என்று எதிர்மறை கதாபாத்திரங்கள் ஆனந்தக் கூத்தாட வைக்கும் என்றால் சீதையின் நவரசத்தில் மற்ற அறுவரும்…? குரு லட்சுமி தொடுத்திருக்கும் அழகான கதம்ப மாலையில் கண்களைப் பறிக்கும், மணம் வீசி, மனம் ஒட்டும் நாயகிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *