புதுடெல்லி, செப். 13–
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் உதவியுடன் அவருக்கு தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி நேற்று பிற்பகல் 3.05 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 72.
அவரது உடலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். கற்பித்தல், ஆய்வு நோக்கத்துக்காக அவரது உடல் தானமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார நிபுணர், எழுத்தாளர்
ஆந்திராவின் காக்கிநாடாவை பூர்வீகமாக கொண்ட சீதாராம் யெச்சூரி, கடந்த 1952-ம் ஆண்டு சென்னையில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். ஐதராபாத் மற்றும் டெல்லியில் கல்வியை முடித்தார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே இந்திய மாணவர் கூட்டமைப்பில் (எஸ்.எப்.ஐ.) இணைந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார்.
கடந்த 1984-ல் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், 1992-ல் பொலிட்பீரோ உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் அலங்கரித்தார்.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியில் பல்வேறு பதவிகளை பெற்ற யெச்சூரி, கடந்த 2015-ம் ஆண்டு முதல் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் யெச்சூரியின் பங்கு முக்கியமாக இருந்தது. பொருளாதார நிபுணர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் யெச்சூரி.
சீதாராம் யெச்சூரியின் மனைவி பெயர் சீமா சிஸ்டி. இவர் பிரபல பத்திரிகையாளர் ஆவார்.
முன்னதாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்திராணி மஜூம்தாரை சீதாராம் யெச்சூரி திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஆசிஷ் யெச்சூரி என்ற மகனும், அகிலா யெச்சூரி என்ற மகளும் இருந்தனர். இதில் ஆசிஷ் யெச்சூரி, கொரோனா தொற்று காரணமாக தனது 34 வயதில் இறந்து விட்டார். அகிலா, ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.
சீதாராம் யெச்சூரியின் மறைவு மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமின்றி பிற கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஜனாதிபதி, பிரதமர்
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். முதலில் மாணவர் தலைவராகவும், பின்னர் தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்துவம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர். உறுதியான சித்தாந்தவாதியாக இருந்தாலும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நண்பர்களை பெற்றிருந்தார்’ என குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘சீதாராம் யெச்சூரியின் மறைவால் வருந்துகிறேன். இடதுசாரி களை வழிநடத்தும் ஒளியாக இருந்த அவர், அரசியல் அலைவரிசை முழுவதும் இணைக்கும் திறனுக்காக அறியப்பட்டார். திறமையான நாடாளுமன்றவாதியாகவும் முத்திரை பதித்தார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அனைத்தும் அவரது குடும்பத்தினருடனும் தொண்டர்களுடனும் உள்ளன’ என கூறியுள்ளார்.
ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, ‘சீதாராம் யெச்சூரி ஒரு நண்பராக இருந்தார். நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலுடன் இந்தியா என்ற கருத்தியலின் பாதுகாவலராகவும் இருந்தார். அவரது மறைவால், நாங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் நீண்ட விவாதத்தை நான் இழக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதர வாளர் களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என வருத்தத்தை பகிர்ந்து உள்ளார்.
இதைப்போல அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், சந்திரபாபு நாயுடு, ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட மாநில முதலமைச்சர் என பல்வேறு தலைவர்களும் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.