புதுடெல்லி, செப். 14–
டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சீதாராம் யெச்சூரி உடலுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் கடந்த 12ம் தேதி காலமானார். அவரது உடல், வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் இன்று டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவரை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான், ராஜீவ் சுக்லா, ப.சிதம்பரம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, தி.மு.க. எம்.பி கனிமொழி ஆகியோரும் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதி அஞ்சலிக்கு பிறகு மருத்துவ மாணவர்களின் ஆராயச்சி காரணங்களுக்காக சீதாராம் யெச்சூரியின் உடலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.