விசாரணைக்கு இனி முன் அனுமதி பெறவேண்டும்
சென்னை, ஜூன் 15–-
சி.பி.ஐ.க்கு வழங்கிய சிறப்பு அதிகாரத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. விசாரணைக்கு இனிமேல் தமிழக அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. தன்னுடைய அதிகார வரம்பை மீறி, அரசியலமைப்பு ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி இல்லாத மாநிலங்களின் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது. சி.பி.ஐ. போலீசாருக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு அனுமதி அமலில் உள்ளது.
இதன்படி, மாநிலங்களில் மத்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட புகார்களில் சி.பி.ஐ. நேரடியாக விசாரித்து வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் மாநில போலீஸ், மாநில அரசு ஊழியர்கள், நிறுவனங்கள் தொடர்புடைய வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட மாநில அரசு கோரிக்கை வைக்கவேண்டும் அல்லது கோர்ட் உத்தரவிடவேண்டும். இதுதான் பொதுவான நிலையாக உள்ளது.
இந்த நிலையில், சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியை தமிழ்நாடு அரசு நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, இனிமேல் சி.பி.ஐ. போலீசார் மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் தொடர்புடைய புகார்கள் மீது தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-–
மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியை பெறவேண்டும் என டெல்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டம் 1946–-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1989 மற்றும் 1992-ம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கு என வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று (நேற்று) தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத்துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ளவேண்டும்.
இதுபோன்ற ஆணையினை ஏற்கனவே மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.