சென்னை, ஜூலை.17-
சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்ற 340 தேர்வர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி வழங்கினார்.
மனிதநேய அறக்கட்டளை கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கிய மக்களுக்கு உதவும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சமூகப் பணிகளை செய்கிறது.
அதேபோல், மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்தவர்களில், கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., இந்திய வனத்துறை பதவிகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப்-1, 2, 2ஏ உள்ளிட்ட பதவிகளுக்கும் இதுவரை 4,420-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய அளவில் பணியாற்றுகிறார்கள்.
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் (ஜூன்) 11-ந் தேதி வெளியானது. இதன் தொடர்ச்சியாக முதன்மைத் தேர்வு அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முதன்மைத் தேர்வுக்கு மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் தொடர்ந்து படித்தவர்களுக்கு மற்றும் பிற தேர்வர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு சென்னையில் உள்ள மனிதநேய அலுவலகத்தில் நடந்தது.
இதில் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்ற 340-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு உதவித்தொகையாக தலா ரூ.15 ஆயிரத்தை ஓய்வுபெற்ற டி.ஜி.பி. அலெக்சாண்டர், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி ஆகியோர் வழங்கினர்.
மேலும் தேர்வர்களுடன் இருவரும் கலந்துரையாடி, முதன்மைத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து ஊக்கமளித்ததோடு, தேர்வு நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நேர மேலாண்மை, உடல்நலம், மனநலம் பேணுதல் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.
![]()





