செய்திகள் வர்த்தகம்

சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வுக்கு மனிதநேய மையம் இணையவழி இலவச பயிற்சி

நிறுவனர் சைதை துரைசாமி தகவல்

சென்னை, ஜூன்.20-

சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் சார்பில் சிவில் சர்வீசஸ் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ–மாணவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

அதேபோல், அகில இந்திய அளவில் இதுவரை எந்த கல்வி நிறுவனமும் செய்யாத, ஒரு சாதனையாக பொதிகை தொலைக்காட்சி மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலை தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வழிக்கல்வி இலவசமாக ஒளிபரப்பப்பட்டது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது.

மேலும் முதன்மைத் தேர்வில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகளுக்கு மனிதநேய இலவச பயிற்சி மையம் சார்பில் இலவச பயிற்சியும் வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவர்கள் தங்குவதற்கு விடுதி, உணவு உள்பட அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்பட்டது.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கு நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி மனிதநேய இலவச பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட இருக்கிறது. மனிதநேயத்தில் நேர்முகத்தேர்வுக்கு பயிற்சி பெற்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்முகத்தேர்வுக்கு செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் புதிய உடை, டெல்லி செல்ல விமான பயணச்சீட்டு, தங்கும் வசதி, உணவு மற்றும் திரும்பிவர பயணச்சீட்டு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

தொடர்ந்து 7 ஆண்டுகளாக மனிதநேய மாணவர்கள்தான் நேர்முகத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ–மாணவிகள் சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் வருகிற 25ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) manidhanaeyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 044–24358373, 24330095, 8428431107 என்ற எண்ணிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்யும் அனைவருக்கும் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) முதல் நேர்முகத் தேர்வு பயிற்சியில் உங்களுடன் உரையாட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற அரசு உயர் அதிகாரிகளை கொண்டு ‘ஜூம் மீட்டிங்’ நடத்தப்படும்.

மேற்கண்ட தகவல்களை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *