இப்படி ஒரு பெயரைச் சந்திரன் கேட்டதே இல்லை.
சிவன் இணைந்த பெருமாள் சைவமும் வைணவமும் இணைந்த ஒரு பெயர்.
வைணவத்திற்குள்ளேயே வடகலை – தென்கலை என்று அடித்துக் கொள்ளும் இந்த உலகத்தில், சிவன் இணைந்த பெருமாள் என்ற பெயரைப் பார்த்ததும் சந்திரனுக்குத் தூக்கி வாரி போட்டது. அதுவும் ஒரு காவலரின் பெயர். காவல்த் துறையில் பணிபுரிந்து காெண்டிருப்பவரின் பெயராக இருந்தது
அவரின் சட்டைப் பைக்கு மேலே இருந்த சிவன் இணைந்த பெருமாள் என்ற பெயரைப் பார்த்ததும் அதை வாய்விட்டு வாசித்தான் சந்திரன்.
இதை கேட்கலாமா? வேண்டாமா? என்று சந்திரன் யோசித்தான்.கேட்டுத்தான் பார்க்கலாம் என்றால் அந்தக் காவலரின் உயரமும் கம்பீரமும் சந்திரனைக் கொஞ்சம் நிலைகுலைய வைத்தது.
நாம் ஒன்றும் தவறு செய்யவில்லையே? நாம் ஒன்றும் குற்றவாளி இல்லையே? பெயரைக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? கேட்டுப் பார்க்கலாம் என்று ஒரு கூட்டத்தில் நின்று கொண்டிருந்த அந்தக் காவலரிடம் மெல்ல கேட்டான் சந்திரன்.
சார் சிவன் இணைந்த பெருமாள் அப்படிங்கிறது உண்மையான பேர் தானா? என்று அவரிடம் கேட்க
சிரித்துக் கொண்டே அந்தக் காவலர்,
ஏன் சார் என்னோட சட்டை பேஜ்ல எழுதிக் குத்தியிருக்கேன்.அதுக்கப்புறமும் இது உங்க பேரு தானான்னு கேக்குறீங்க?உண்மையிலேயே அது என் பேர்தான் சார் என்று அந்த காவலர் சொன்னபோது,அந்தப் பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருந்தான் சந்திரன்.
ஏன் சார் சிவன் வேற பெருமாள் வேற; சிவனுக்கு திருநீருன்னா பெருமாளுக்கு நாமம். இப்படி இருக்கும் போது ரெண்டு பேரையும் எப்படி ஒண்ணா வச்சீங்க?
என்று சந்திரன் கேட்டபோது சிரித்துக் கொண்டே அதற்கு பதில் சொன்னார் சிவன் இணைந்த பெருமாள்:
சார் உங்கள மாதிரி தான் சார் எனக்கும் ஸ்கூல் காலேஜ்ல என்னுடைய பேர அட்டெண்ட்ஸ்ல வாத்தியார்கள் வாசிக்கும் போது,என் கூட படிச்ச எல்லாரும் சிரிப்பாங்க. எதுக்கு இவங்க சிரிக்கிறாங்க அப்படின்னு எனக்கு தெரியல. அந்தப் பேருக்குண்டான அர்த்தமும் எனக்கு தெரியல.
ஆனா வயதாக வயதாகத்தான் இந்த பேரோட அர்த்தம் எனக்கு தெரிஞ்சது.சைவமும் வைணவமும் நிறைய சண்டை போட்டு இருக்காங்க .நிறைய உயிர் பலிகள் ஆயிருக்கு .அப்படின்னு நான் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்.
ஆனா எங்க அப்பா உண்மையிலேயே ஒரு நல்ல விஷயத்தை தான் பண்ணி இருக்கார். சைவம் கும்பிடுற மனுசங்க வைணவத்தை கும்பிட மாட்டாங்க . வைணவத்த வணங்குறவங்க சைவத்துக்கு வர மாட்டாங்க . ஏன் மனுசங்க இவ்வளவு பிரிவினையா வாழ்ந்துகிட்டு இருக்காங்க. கடவுள் அப்படிங்கறது ஒன்னுதான்.
காற்று தண்ணீர் எப்படி ஒரே மாதிரி இருக்காே – கடவுளும் ஒன்னுதான்– அப்படிங்கறத இந்த மனுஷங்க ஏன் புரிஞ்சுக்கல. எதுக்கு எடுத்தாலும் மதச் சண்டை, சாதிச் சண்டை, மொழிச் சண்டைன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. அப்படின்னு நினைச்ச என் அப்பா எனக்கு அந்தப் பேர வச்சிருக்காருன்னு நினைக்கிறேன்.
இன்னொரு விஷயம் சொல்லட்டுமா சார்? நம்மள மாதிரி எங்க அப்பா மெத்த படிச்சவரோ இல்ல மேதாவித்தனமா பேசுறவரோ இல்ல.
ஒரு விவசாயி சார். பாமரன். எதுவும் தெரியாது. காது வழியா கேட்கிறதும் கண்ணு வழியா பார்க்கிறதும் பட்டு அறியிறது மட்டும்தான் அவருக்கு தெரியுமே ஒழிய ஒரு புத்தகத்தை வாசிக்கிற அளவுக்கு கூட அவருக்கு கல்வி அறிவு இல்லை.
ஆனா, அந்த மனுஷன் எனக்கு சிவன் இணைந்த பெருமாள் அப்படின்னு பெயர் வச்சிருக்காருன்னா அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருக்கும் சார்.
எங்க அப்பாவ நான் பார்க்கும் போதெல்லாம் நான் சந்திக்கிற எவ்வளவோ பெரிய அறிவாளிகளை விட எங்க அப்பா மேலானவர்ன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன் சார்.
யாரும் சொல்லி எனக்கு இந்த பேர அவர் வைக்கல . அவருக்காகத் தோனியிருக்கு வச்சிருக்கார்.
இன்னைக்குப் பாருங்க என்ன எல்லாரும் சிவன் இணைந்த பெருமாள் அப்படின்னு கூப்பிடும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா ?
என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது தூரத்தில் இருந்த இன்னொரு காவலர்
சிவன் இணைந்த பெருமாள் இங்க வாங்க .ஒரே பிரச்சினையா இருக்கு என்று கூப்பிட்டார்
சார் இந்தா வந்துடறேன் என்று சொல்லியவர் கிளம்பினார்
சார் அங்க என்ன பிரச்சனை தெரிஞ்சுக்கலாமா?
என்று சந்திரன் கேட்டபோது
சார், ஒரு சாமி கும்பிடு . அங்க கோயில்ல இருக்கிற சிவனுக்கு முதல்ல பூஜையா ? இல்ல பெருமாளுக்கு முதல்ல பூஜையா ? அப்படின்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. அதைத்தான் தீர்த்து வைக்க என்ன கூப்பிடுறாரு போல. நான் போயிட்டு வரேன் சார்
என்று சொல்லிய சிவன் இணைந்த பெருமாள் கிளம்பினார்.
சைவமும் வைணவமும் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. அதைத் தீர்ப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தார் –
சிவன்
இணைந்த
பெருமாள்