2 பேர் கைது
சிவகாசி, மே 10–
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று நடந்த பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்த சரவணன்(55), செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில், 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினர். இந்த ஆலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து நேரிட்டது. இதில் 7 அறைகள் தரைமட்டமாகின. மேலும், 7 அறைகள் சேதமடைந்தன.
தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், தீயைஅணைத்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஜனா, மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி, விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, தனி வட்டாட்சியர் திருப்பதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
10 பேர் பலி
விபத்தில் ரமேஷ் (31), வீரலட்சுமி (48), காளீஸ்வரன் (47), ஆவுடையம்மாள் (75), முத்து (52), வசந்தி (38), பேச்சியம்மாள் (எ) ஜெயலட்சுமி (22), லட்சுமி (43), விஜயகுமார் (30) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களில் ஆவுடையம்மாள், முத்து, பேச்சியம்மாள் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்கிடையில் நேற்று இரவு மத்திய சேனையைச் சேர்ந்த அழகர்சாமி(35) என்பவரது உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 -ஆக உயர்ந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கூறுகையில், விதிகளை மீறி ஒப்பந்த தாரர் மூலம் பட்டாசு ஆலை செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.
2 பேர் கைது
வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சரவணன் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலை யில், ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் நள்ளிரவில் கைதான நிலையில் ஆலை ஒப்பந்ததாரார் முத்து கிருஷ்ணனை இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ெஜயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
ஜனாதிபதி, கவர்னர் இரங்கல்
ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாட்டின் சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்தது குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, எக்ஸ் வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-– சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-–
தேர்தல் ஆணையத்தின்
அனுமதி பெற்று நிவாரணம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழ திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயர மான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. தி.மு.க. ஆட்சியில் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாதது, அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.