செய்திகள்

சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து: கர்ப்பிணி, தாயார், சிசு உயிரிழந்த பரிதாபம்

சிவகங்கை, அக். 21–

சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண், அவரது தாயார், வயிற்றில் இருந்த குழந்தை ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்துள்ள நெஞ்சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் குமரேசன்-நிவேதா தம்பதி. நிவேதா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இன்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிவேதா, அவரது தாயார் விஜயலெட்சுமி, மற்றும் நிவேதாவின் சகோதரி திருச்செல்வி ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

3 உயிர்கள் பலி

108 வாகனத்தை மலையரசன் என்கிற ஓட்டுநர் மற்றும் டெக்னிசியன் சத்யா ஆகியோர் ஓட்டிவந்த நிலையில், ஊத்திகுளம் அருகே வரும்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் அனைவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக மற்றோரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பிணி பெண் நிவேதா, அவரது தாயார் விஜயலெட்சுமி ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். நிவேதாவின் வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தையும் உயிரிழந்தது.

மேலும் படுகாயமடைந்த நிவேதாவின் சகோதரி திருச்செல்வி, ஓட்டுநர் மலையரசன், டெக்னிசியன் சத்யா ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் கரப்பிணி பெண், அவரது தாயார், மற்றும் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *