சிறுகதை

சில வார்த்தைகள் வெல்லும்… ராஜா செல்லமுத்து

எதுவும் இல்லாதவர்கள் தான் யாசகம் கேட்பார்கள்.

யாசகம் கேட்பவர்கள் செய்கைகள் பலவிதமாக இருக்கும் .

சிலர் அம்மா தாயே பிச்ச போடுங்க என்று கேட்பார்கள். ஒரு சிலர் தங்கள் உடைகளை கிழித்து விட்டு பிச்சை கேட்பார்கள். ஒரு சிலர் தன் முகபாவனையைப் பாவமாக வைத்துக் கொண்டு பிச்சை கேட்பார்கள்.

ஒரு சிலர் அழுது கொண்டு தன் நிலையை சொல்லியும் பிச்சை கேட்பார்கள்.

ஆனால் ஒரு பிரதான சாலையில் அமர்ந்திருக்கும் பெரியவர் அவர் பிச்சை கேட்பது வித்தியாசமாக இருந்தது. ஓடிசலான தேகம். கண்ணில் கருப்புக் கண்ணாடி. தலையில் குல்லா. கையில் கம்பு என்று வைத்துக் கொண்டு தன் உள்ளங்கையை வானத்தை நோக்கி நீட்டிய படியே அமர்ந்து கொண்டு அமர்ந்திருப்பார் அந்தப் பெரியவர்.

அவர் யாரிடமும் வாய்விட்டு பிச்சை கேட்பதில்லை . அவர் யாருக்காகவும் தன்னுடைய நிலையை வரிந்து கட்டி சொல்வதும் இல்லை. அந்த வழியாக போகிறவர்கள் வருகிறவர்கள் அவரின் கைகளில் பணத்தை போட்டுப் போவது வழக்கம். பார்ப்பதற்கு ரொம்ப நாகரிகமாகவும் எதைப் பற்றியும் சொல்லாமல் பிச்சை கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர் .

கேசவன் அந்த வழியாக தான் தன் அலுவலகம் செல்வான்.அவன் செல்லும்போது அவர் அமர்ந்து பிச்சை கேட்கும் நிலையைப் பார்த்து வியந்து போவான்.

என்ன ஒரு வித்தியாசமான அணுகுமுறை . பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் குய்யாே முறையோ என்று அழுது கொண்டு பிச்சை எடுக்கும் போது இந்த மனிதர் மட்டும் இவ்வளவு நாகரீகமாக அமர்ந்திருக்கிறாரே. அழுது புலம்பி கேட்பவர்களுக்கு பிச்சை போடாத இந்த உலகம் இவருக்கு பிச்சை போடுமா ? என்று சந்தேகக் கண் கொண்டு தினமும் பார்த்துச் செல்வான் கேசவன் .

ஆனால் அவன் ஒருபோதும் அந்த பெரியவருக்குப் பிச்சை போட்டதில்லை .சில நேரங்களில் அந்தப் பெரியவரின் கையில் அந்த வழியாக போவார்கள் வருவாேர் பிச்சை போட்டு போவதுண்டு .காலையில் அமருபவர் இரவு வரை அதை மாதிரிதான் அமர்ந்திருப்பார்.

அவரைச் சுற்றி சில நண்பர்கள் அமர்ந்து கொண்டு அரசியல் சினிமா நாட்டு நடப்பு செய்திகளை பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கும் இந்த நாட்டைப் பற்றிய அக்கறை இருக்கிறது .இந்த அரசியல் பற்றிய விமர்சனம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு செல்வான் கேசவன்.

இந்த மாதிரியான வருமானத்தில் இவர்களால் எப்படி வாழ்க்கை நடத்த முடிகிறது? எந்த நம்பிக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு சின்ன வாய்ப்பு பறிபோனதற்கே வாழ்க்கையே பறிபோய் விட்டதாக புலம்பும் நாம் எங்கே? இங்கே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிச்சயம் யாராவது நமக்கு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அமர்ந்திருக்கும் இந்தப் பெரியவர் எங்கே?

இதுதான் நம்பிக்கைக்கான அடையாளம் என்று நினைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் அந்த வழியாகச் செல்வான் கேசவன்.

ஒரு நாள் இரவு மங்கும் நேரம் மாலை மயங்கும் நேரம் எப்போதும் தன் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு கேசவன் அந்த வழியாக வந்தான்.

அப்போதுதான் அந்த பெரியவரிடம் ஒருவன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எப்போதும் வேகமாக நடக்கும் கேசவன் கொஞ்சம் நடையைக் குறைத்து என்ன பேசுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டே சென்றான்.

பிச்சை வாங்கும் அந்த பெரியவரிடம் பிச்சை எடுக்கும் அந்தப் பெரியவரிடம் அருகில் அமர்ந்தவன் பிராந்திப் பாட்டிலை கையில் கொடுத்தான்.

அதைப் பட்டென்று வாங்கிய அந்த பெரியவர் தன் அருகில் இருந்த துணிப் பைக்குள் மறைத்துக் கொண்டார் .

மறுபடியும் தன் உள்ளங்கையை திறந்து வானத்தை நோக்கி அமர்ந்து கொண்டு இருந்தார் .

இதைப் பார்த்த கேசவனுக்கு என்னவோ போலானது. ஒரு மனிதன் அடுத்தவனிடம் பிச்சை எடுப்பது என்பது அவன் உயிர் பிழைக்க ,வயிற்றுக்கு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் இந்த மாதிரி தீய எண்ணங்களுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள். இது தவறு ; அவரைப் பார்த்தால் நாகரீகமாக இருக்கிறார். இதற்கு முன்னால் அவரை உயர்ந்த எண்ணத்தில் நாம் வைத்திருந்தோம். ஆனால் இவர் நடவடிக்கை தவறாக இருக்கிறதே? என்று நினைத்த கேசவன் அவரை கடந்து சென்றான்.

அவர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கையில் பிடித்திருக்கும் கம்பு அருகில் இருக்கும் துணிப்பை என்று எதைப் பற்றியும் சட்டை செய்யாமல் இருந்தார்.

அந்த வழியாகச் சென்ற ஒருவர் பெரியவர் பாவம்; பாவம் பெரியவர் என்று அவர் கையில் நூறு ரூபாயை வைத்து சென்றார் .

இதைப் பார்த்த கேசவனுக்கு கோபம் வந்தது.

நேரே அந்தப் பெரியவர் அருகில் அமர்ந்தான் .

ஐயா வணக்கம். என் பேரு கேசவன். நான் உங்களை தினந்தோறும் இந்த வழியாப் பாேகும் போதும் வரும்போதும் பாத்துட்டு தான் போவேன். உங்களை முதன் முதலா பார்க்கும்போது உங்க மேல எனக்கு உயர்ந்த எண்ணம் ஏற்பட்டது .இப்படி ஒரு மனிதனா ரொம்ப நாகரீகமா யாசகம் கேட்கிறார்னு நினைச்சிட்டு இருந்தேன்.

ஆனால் இப்படி வாங்குற காசில் நீங்க பிராந்தி வாங்கி குடிக்கிறது தப்பு . அது உங்களுக்கு பணம் போட்டவர்களுக்கு வருத்தத்தைக் கொண்டு போய் சேர்க்கும். இதை இனிமேல் செய்யாதீங்க என்றான் கேசவன்.

இதைக் கேட்டு பதில் சொல்லாத பெரியவர் தன் கருப்புக் கண்ணாடி கண்களில் இருந்து கேசவனைப் பார்த்தார்.

பதில் ஏதும் சொல்லவே இல்லை அவர். பதில் சொல்லுவார் என்று காத்திடாத கேசவன் அந்த இடத்தை விட்டு விறுவிறுவென்று நடந்தான்.

மறுநாள் எப்போதும் போல அந்த வழியாக வந்தான் . அப்போதும் அந்தப் பெரியவர் வானத்தை நோக்கி தன் உள்ளங்கையில் வானத்தை நோக்கி வைத்தபடி அமர்ந்திருந்தார் .

இவ்வளவு சொல்லியும் இந்த பெரியவர் கேட்கலையே ? என்று வருத்தப்பட்ட கேசவன் அந்த பெரியவரிடம் வந்த போது அருகில் இருந்த ஒருவர் கேசவனை பிடித்து அமர வைத்தார்.

தம்பி நான் பண்ணது தப்புதான். எனக்கு கண்ணு தெரியாது. அதனால தான் நான் ஓடியாடி பிச்சை எடுக்க முடியல. என்கூட இருக்கிறவங்க எல்லாம் பிச்சையிலே வர்ற பணத்துல கொஞ்சம் பிராந்தி குடிக்கலாம். அப்படின்னு சொன்னாங்க . அதுதான் நான் தப்பு பண்ணிட்டேன். இனிமேல் இந்தத் தப்பு பண்ண மாட்டேன். என்னோட கண்ணத் திறந்துவிட்ட தம்பி இனிமே பிச்சை எடுக்கிற காசுக்கு என்னோட வயித்துக்கு போக மிச்சத்த என்ன மாதிரி இருக்கிறவங்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துவேனே தவிர இந்த மாதிரி தவறான செயல்களுக்கு பயன்படுத்த மாட்டேன். நன்றி தம்பி என்று கேசவனின் தலையைத் தடவினார்.

அந்தப் பெரியவர் பேசியதைக் கேட்டுப் பதில் எதுவும் சொல்லாத கேசவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

தன் உள்ளங்கையை வானத்தை நோக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர்..

கேசவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *