செய்திகள்

சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு கேட்கிறது ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை, செப்.11-

சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து, புராதான சாமி சிலைகள் பல கொள்ளை அடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த சிலைக்கடத்தல் வழக்குகளை எல்லாம் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த சிலை கடத்தல் வழக்கில், அரசு தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உள்பட பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கைது செய்ய பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தமிழக அரசு திடீரென அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில், ‘இந்த சிலைக்கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக கூறி, அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர், அரசாணைக்கு தடை விதித்தனர். பின்னர், இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், ‘சி.பி.ஐ. விசாரணைக்கு அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு மாற்றியுள்ளது தொடர்பான சில ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளது’ என்றார்.
சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சி.பி.ஐ. இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் பரிசீலனையில் உள்ளன’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஒருவேளை சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. மறுத்து விட்டால், என்ன செய்வீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், ‘சி.பி.ஐ. மறுக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) உள்ளிட்ட சில ஆவணங்களை கேட்டு தான் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நாளை (புதன்கிழமை) தாக்கல் செய்கிறேன்’ என்றார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *