டெல்லி, ஜன. 2–
புத்தாண்டான இன்று சிலிண்டர் விலை ரூ.25.50 காசு உயர்த்தப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதம் தொடங்கும்போது முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் புத்தாண்டான இன்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.25.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைநகர் டெல்லியில் ஒரு சிலிண்டர் ரூ.1,769 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ரூ.1,870 ஆகவும், சென்னையில் ரூ.1,917 ஆகவும் சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பரிசு
இந்த விலையுயர்வை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி , “புத்தாண்டுக்கான முதல் பரிசு இது” என்று விமர்சித்துள்ளார். மேலும், “இது வெறும் தொடக்கம்தான்” என்றும் கூறியுள்ளார்.
அதேபோல், கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சமையல் சிலிண்டர் விலை இந்த 8 ஆண்டுகளில் சுமார் 144 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமையல் சிலிண்டர் விலை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மானியத்துடன் கூடிய கேஸ் சிலிண்டரின் விலை ரூ.410 ஆக இருந்தது. இது கடந்த 2022 ஆம் ஆண்டு 1000 ஐ கடந்து விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.