சினிமா செய்திகள்

சிலம்பரசன் – த்ரிஷா நடித்த குறும்படம்: 2 நாளில் யூ–டியூப்பில் 52 லட்சம் ரசிகர்கள் பார்த்து சாதனை

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ – தொடர்ச்சியாக கவுதம்மேனன் இயக்கத்தில்

சிலம்பரசன் – த்ரிஷா நடித்த குறும்படம்:

2 நாளில் யூ–டியூப்பில் 52 லட்சம் ரசிகர்கள் பார்த்து சாதனை

 

சென்னை, மே 23–

பிரபல டைரக்டர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் – த்ரிஷா இருவர் மட்டுமே நடித்திருக்கும் குறும்படம்: கார்த்திக் டயல் செய்த எண். இப்படத்தை யூ–டியூப்பில் 2 நாட்களில் சுமார் 52 லட்சம் ரசிகர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இந்த சாதனையைக் கண்டு கவுதம்மேனன் – யூனிட் மிரண்டு போயிருக்கிறார்கள்.

கசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் (சிலம்பரசன்) – ஜெசியின் (த்ரிஷா) காதல் பயணம், வெள்ளித் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது.

ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று.

‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கவுதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த 12 நிமிட குறும்படம், 48 மணி நேரத்தில் 52 லட்சம் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறது. புதிய சாதனையும் படைத்திருக்கிறது.

இன்ப அதிர்ச்சியில் திளைத்திருக்கும் கவுதம் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்று கூறினார்.

12 நிமிடமும் சிலம்பரசன் – த்ரிஷா இருவக்குமிடையில் நடக்கும் உரையாடல் தான் இந்தக் குறும்படம்.

‘‘ஜெசி, நீ எப்படி, உன் இரட்டைக் குழந்தைகள் எப்படி? உன் காதல் கணவன் எப்படி?’’ என்று குசலம் விசாரித்து விட்டு, தன் நிலையை விரக்தியோடு வெளியிடும் சிலம்பரசனின் பேச்சு, கடந்த கால நினைவுகள்… ஒவ்வொன்றுக்கும் ரத்னச் சுருக்கமாக பதில் தரும் த்ரிஷா.

ஒரு கட்டத்தில்…. ‘ஜெஸ்சி… சொல்றதுக்கு நா ஒண்ணும் வெக்கப்படல்லே… ஒன் கையைப் பிடிக்கணும். ஒன் கையில் நா கிடக்கணும். ஒன்னோட காலடிலே வாழணும்… நீ ஒரு பொண்ணா எனக்கு வேணும் ஜெஸ்சீ…’ என்று உணர்ச்சிப் பிழம்பாய் சிலம்பரசன் காதல் பரிதவிப்பில் மாறி,மாறி நகரும் காட்சிகள்.

“ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். முந்தைய வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது’ என்றார் கவுதம்மேனன்.

சிலம்பரசன் – திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.

அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா..? இது குறித்து கேட்டபோது, புன்னகையுடன் “இந்தப் பயணம் தொடரும்” என்றார்.

‘கமலும் காதம்பரியும்’ அடுத்த படம் சூசகத் தகவல்

சிலம்பரசன் தன்னுடைய லேப்டாப்பில் ‘கமலும் காதம்பரியும்’ என்று ஒரு தலைப்பை அடிப்பார். இது தான் கவுதம்மேனன், அடுத்து இயக்கப்போகும் தன் படத்தின் தலைப்பு என்பதை சூசகமாக ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம்.

‘உயிர்க்கொல்லி’ கொரோனா உலகையே பலாதித்து அவரவர்களை வீட்டுக்கு உள்ளேயே போட்டிருக்கும் இன்றைய சூழலில் வீட்டில் இருந்தபடியே, த்ரிஷா– சிலம்பரசனை அவரவர்கள் இல்லத்திலேயே இருக்க வைத்து நடிக்க வைத்திருப்பதும், முழு நீள உரையாடலிலேயே மாற்றி மாற்றி இருவரையும் காட்டி கவுதம் மேனனின் சாமர்த்தியம்.

அதோடு, ஒரு சினிமா தியேட்டருக்கு வராமல் போனால் என்ன? நேரடியாக அமேசான்… உள்ளிட்ட இணைய தளங்கள் இருப்பது அறிவியல் தொழில்நுட்பத்தின் புதிய பரிணாம வளர்ச்சி என்பதையும் தெளிவுபடுத்தி வரவேற்றிருக்கிறார்.

அடுத்து கவுதம் மேனனின் கூட்டு – சூர்யாவோடு இருக்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *