சென்னை மத்திய சிறையில் இருந்த கைதிகளெல்லாம் இப்போது மனிதர்களாக இருந்தார்கள் .அவர்களைப் பார்ப்பதற்கு இவர்களா குற்றம் செய்து வந்தவர்கள்? என்று கேட்கும் அளவிற்கு அவ்வளவு நல்லவர்களாக மாறி இருந்தார்கள்.
சிறை காவலர் சுந்தரமூர்த்திக்கும் இது வியப்பாகவே இருந்தது. எப்படி இது சாத்தியம் சட்டமும் தண்டனையும் திருத்தாத இந்த கைதிகளை யார் திருத்தியது ? இவர்களை எல்லாம் ஜெயிலிலே அடைத்து வைத்திருப்பது தவறு என்று சுந்தரமூர்த்திக்கு தோன்றியது.
இருந்தாலும் அவர்கள் செய்த தவறு பெரிதாக இருந்ததால் அவர்களை வெளியே விடுவதற்கு சட்டமும் தண்டனையும் மறுத்தன் இருந்தாலும் இவ்ளோ பெரிய மாற்றத்திற்கு யார் காரணம் ?என்று சுந்தரமூர்த்தி புரிந்து கொள்ள முடியவில்லை .
கைதிகளெல்லாம் இப்போதுநூலகத்திலேயே அடைந்து கிடந்தார்கள். புத்தகம் படிப்பவன் எவனும் தப்பான வழிக்கு செல்லமாட்டான் என்பது சுந்தரமூர்த்திக்கு தெரிந்திருந்தது.
இதைச் சிறையில் வேலை பார்க்கும் காவலர்களுக்கு எல்லாம் செய்தியாய் சாெல்லியிருந்தார் சுந்தரமூர்த்தி. அங்கு பணிபுரியும் காவலர்கள் கூட கைதிகளிடம் ஏற்பட்ட மாற்றத்தை ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
முன்பெல்லாம் கைதிகளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தி பிரச்சனைகள் செய்து அது காெலை வரை கூட சென்று இருக்கிறது .
ஆனால் இப்போது இவர்கள் எல்லாம் எப்படி திருந்தினார்கள் ? எப்படி நல்ல மனிதனாக மாறினார்கள்? என்று சிறையில் இருந்தவர்களுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது.
அதில் சிறை கைதி கணபதியை பிடித்து கேட்டார் ஒரு காவலர்.
உங்களுக்கான இந்த மாற்றம் எப்படி வந்தது? என்று .
அவர் சற்று யோசிக்காமல் சொன்னார் புத்தகம் என்றார்.
இன்னொரு கைதியான துரை சிங்கத்தை கேட்டார்.
அவரும் புத்தகம் என்றார்.
இப்படி அங்கு இருக்கும் கைதிகள் எல்லாத்தையும் பிடித்து விசாரித்த போது அத்தனை பேரும் தங்கள் திருந்தியதற்கு புத்தகங்கள் தான் காரணம் என்று சொன்னார்கள்
அந்தப் புத்தகங்கள் எல்லாம் பெரிய எழுத்தாளர்களிடமிருந்தும் புத்தகத்தை தானமாகக் கொடுக்கும் மனிதர்களிடமிருந்து பெறப்பட்டவை.
அத்தனை புத்தகங்களையும் வாங்கி சிறையில் நூலகமாக அமைத்திருந்தார்கள் .அந்த புத்தகங்கள் தான் இப்போது இந்த கைதிகளை எல்லாம் நல்லவர்களாக மாற்றி இருக்கின்றது என்று சிறைத் துறையை சார்ந்த காவலர்களுக்கு தெரிந்தது.
சட்டமும் தண்டனையும் செய்ய முடியாத நல் ஒழுக்கத்தை நல்ல மனிதர்களை புத்தகங்கள் உருவாக்குகின்றன என்று நினைத்தார்கள் அதிகாரிகள்.
அன்று முதல் அவர்கள் இபிகோ செக்ஷன் எல்லாம் படிப்பதில்லை. ஒரு மனிதனைத் திருத்த வேண்டும் என்றால் நல்ல புத்தகங்களை வாங்கி கொடுத்தாலே போதும் என்று முடிவெடுத்து லத்தியையும் தொப்பியும் கழற்றி வைத்துவிட்டு புத்தகங்கள் சேகரிக்க ஆரம்பித்திருந்தார்கள் காவலர்கள்.