வர்த்தகம்

சிறுவர் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழ்நாடு அழைப்பு

சென்னை, ஜூலை.4–

சிறுவர்களுக்கான ஆடைகளைத் தயாரிக்கும் கேரளத்தின் பிரபல நிறுவனமான கைட்டெக்ஸ் நிறுவனத்தை தமிழ்நாட்டிலும் நிறுவ முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சருடன் நடத்திய விவாதத்தின் முடிவில் தமிழ்நாட்டில் நிறுவனத்தைத் துவக்க தமிழ்நாடு அரசு 40% மான்யம், இன்றைய சந்தை விலையில் பாதி விலைக்கு நிலம், முத்திரைத் தீர்வையில் 100% அளவுக்கு தளர்வு, 6 ஆண்டுகளுக்கு 5% வரிக்குறைப்பு, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்புக்கென 25% மான்யம், அறிவுசார் சொத்துரிமையில் 50% மான்யம், ஒவ்வொரு ஊழியருக்கும் பயிற்சி அளிக்க 6 மாதத்துக்கு தலா ரூ.4,000 உதவித் தொகை, மின்சார மான்யம்… உள்ளிட்ட பல்வேறு இலவசங்களைத் தரத் தமிழ்நாடு அரசு தயாராய் இருப்பதாக கீழக்கம்பளம் டெக்ஸ்டைல்ஸ் (கைடெக்ஸ்) நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

உடனடியாக இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும், தமிழக முதல்வரின் அழைப்பு குறித்து தீவிரமாக நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகில் சிறுவர்களுக்கென ஆடைகள் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் 2வது இடத்தை கைடெக்ஸ் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் ரூ.3500 கோடி மதிப்பிலான திட்டத்தை அங்கிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றும் முடிவுக்கு வந்திருக்கிறது கைடெக்ஸ் நிறுவனம். உள்ளூர் பிரச்சனைகளே, இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *