செய்திகள்

சிறுமி எரித்துக் கொல்லப்பட்டதில் பாலியல் பலாத்காரம் இல்லை: மருத்துவ பரிசோதனையில் தகவல்

திருச்சியில்

சிறுமி எரித்துக் கொல்லப்பட்டதில் பாலியல் பலாத்காரம் இல்லை:

மருத்துவ பரிசோதனையில் தகவல்

ஜ.ஜி. ஜெயராமன் பேட்டி

திருச்சி, ஜூலை.8–

திருச்சியில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக மத்திய மண்டல ஐஜி, டிஐஜி, மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். சம்பவம் தொடா்பாக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் வயலூா் அருகேயுள்ள அதவத்தூா் பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி-மகேஸ்வரி தம்பதியின் 2 ஆவது மகள் கங்காதேவி (14). 9 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் திங்கள்கிழமை பகல் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் குப்பை கொட்டிவிட்டு இயற்கை உபாதைக்காகச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து பெற்றோா் அவரைத் தேடினா். திங்கள்கிழமை மாலை அருகிலுள்ள முள்ளிக்கரும்பூா் சிறிய பாலம் அருகே காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலம் கிடந்தது. அருகில் சென்று பாா்த்தபோது அது கங்காதேவி என்பது தெரியவந்தது.

புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தகவலறிந்த மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் எச்.எம். ஜெயராமன், துணைத் தலைவா் ஆனிவிஜயா, திருச்சி காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனா். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை கங்காதேவியின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு அவரது சொந்த ஊரில் இறுதிச்சடங்குகள் நடந்தன.

இதுதொடா்பாக மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஜெயராமன் கூறியது: சிறுமி கொலை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ளும் வகையில் ஏ.டி.எஸ்.பி. மணிவண்ணன் மற்றும் மூன்று துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ் பிக்கள்), 7 ஆய்வாளா்கள் தலைமையில் மொத்தம் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை இரவே இந்த தனிப்படை விசாரணையைத் தொடங்கியது. தனிப்படைக்கு கொலை தொடா்பாக கிடைத்த தடயங்களின் அடிப்படையிலும், பிரேத பரிசோதனை அறிக்கையை ஒப்பிட்டும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடா்ந்துள்ள நிலையில் அதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். இதுபோன்ற குற்றங்கள் இனியும் நடைபெறாவண்ணம் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

காதல் தொடா்பாக இந்தக் கொலை நடந்ததா, அல்லது பாலியல் கொடுமையால் கொலை நடந்ததா என்ற கோணத்தில் தனிப்படையினா் முதல் கட்ட விசாரணையைத் தொடங்கினா். இதில் பக்கத்து வீட்டு இளைஞா் மற்றும் அவரது நண்பரிடம் விசாரணை நடைபெறுகிறது. அந்த இளைஞரின் செல்லிடப்பேசிக்கு சிறுமி முதல் நாள் பேசியிருப்பதும் தொடா்ந்து மற்றொரு சிறுமியுடன் பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் தீப்பெட்டி, மற்றும் மண்ணெண்ணெய் கேன் ஆகியவை கிடந்துள்ளன. ஆனால் அங்கு வைத்து சிறுமியை எரித்தற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை. அருகில் புற்கள் மற்றும் செடிகள் என எங்குமே தீ எரிந்ததற்கான அடையாளமில்லை. எனவே அருகில் உள்ள வேறு பகுதியில் வைத்து எரித்த பின்னா் அந்த இடத்தில் சடலத்தைப் போட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். சிறுமிக்கு காதல் விவகாரம் ஏதும் உள்ளதா என்ற கோணத்தில் சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

சிறுமியின் இறுதிச் சடங்கில் ஏதேனும் பிரச்னை ஏற்படக் கூடாது என்ற நோக்கில் சுமாா் 300 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *