செய்திகள்

சிறுமியை பட்டினிபோட்டு கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை

ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு

ஜெர்மனி, டிச.2–

யாஸிடி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக, விலைக்கு வாங்கி கொடூரமாக கொலை செய்த ஐஎஸ் தீவிரவாத இயக்க முன்னாள் உறுப்பினருக்கு, ஜெர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஈராக்கின் வட பகுதியிலும் சிரியாவிலும் வசித்து வரும் குருதீஸ் மொழி பேசும் சிறுபான்மை சமூகம் தான் யாஸிடி. ஈராக் மற்றும் சிரியாவில் வலுவடைந்த ஐஎஸ் தீவிரவாத இயக்கம், யாஸிடி இனத்தைச் சேர்ந்த ஆடவரை சிறைப்பிடித்து கொடூரமாக கொல்வதுடன் அச்சமூகத்தைச் சேர்ந்த பெண்களை வீட்டு வேலைக்காக அடிமைகளாக விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்து இருந்தனர்.

ஆயுள் தண்டனை

இப்படி, சிரியாவில் அடிமையாக இருந்து உணவு, தண்ணீர் கொடுக்காமல் சித்ரவதைக்கு ஆளான சிறுமி, சங்கிலியில் கட்டிவைக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்தார். சர்வதேச சமூக அமைப்புகள் தெரிவித்த புகாரில் 2 ஆண்டுகளுக்கு முன் கிரீஸ் நாட்டின் தாகா அல் ஜூமெய்லியும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். உலகளாவிய நீதி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜெர்மனி நீதிமன்றம், இந்த இனப்படுகொலை வழக்கை விசாரித்தது.

2 ஆண்டுகளுக்கு முன் நாடு கடத்தப்பட்டு கணவன், மனைவி இருவரும் ஜெர்மனி கொண்டு வரப்பட்டனர். யாஸிடி இனத்தை அழிக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதால் இதனை இனப்படுகொலை என குறிப்பிட்டு, தாகா அல் ஜூமெய்லிக்கு ஆயுள் தண்டனை விதித்தது ஜெர்மனி நீதிமன்றம். அவரது மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் தாயாருக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *