மதுரை, ஜூன் 12–
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தைக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் கூலித்தொழிலாளி செல்வக்குமாரை (வயது 32) அந்த பெண் 2-வது திருமணம் செய்தார். 2 பிள்ளைகளையும் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தனர்.
கொரோனாவுக்கு பின்பு 2 பிள்ளைகளும் இவர்களின் வீட்டிலேயே இருந்தனர். வீட்டில் இருந்த அந்த பெண்ணின் 8 வயது மகளுக்கு செல்வக்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த தகவல் சிறுமியின் தாயாருக்கு தெரியவந்தது. அவர் தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வளர்ப்பு தந்தையான செல்வக்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சிராணி ஆஜரானார். விசாரணை முடிவில், செல்வக்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. எனவே அவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி முத்துக்குமரவேல் நேற்று தீர்ப்பளித்தார்.