மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
டெல்லி, அக். 9–
இந்தியாவில் பெண் குழந்தைகளின் குழந்தை திருமணத்தில் மோசமான மாநிலமாக ஜார்கண்ட் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் இணைந்து, மக்கள் தொகை மாதிரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. கருவுறுதல், குழந்தை பிறப்பு, குழந்தை இறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடிப்படையாக வைத்து சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கணக்கெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் 6 சதவீதம்
இந்தியாவில் 18 வயதாவதற்கு முன்பே நடக்கும் பெண் குழந்தைகளின் திருமண விகிதம் 1.9 ஆக உள்ளது. கேரள மாநிலத்தில் இது 0.0 சதவீதமாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த சதவீதம் 5.8 ஆகவும் உள்ளது. அதேவேளை, 21 வயது ஆவதற்கு முன்பே பெண்களுக்கு திருமணம் நடக்கும் மாநிலங்களில் ஜார்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில், மொத்த பெண்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு செய்யப்படுவதும் அந்த கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது, 21 வயது ஆவதற்கு முன்பே பெண்களுக்கு திருமணம் ஆகும் விகிதமானது, நாட்டில் 29.5 சதவீதமாக இருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் 54.9 சதவீதமாகவும், ஜார்கண்டில் 54.6 சதவீதமாகவும் உள்ளது.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களால் பெருகி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்ட மக்கள் தொகை மாதிரி கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.