செய்திகள்

சிறுபான்மையினர் ஆணையத் துணைத்தலைவர் டாக்டர் மஸ்தான் மாரடைப்பால் காலமானார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

சென்னை, டிச. 22–

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் இன்று காலையில் மாரணடைப்பால் காலமானதை அறிந்து, திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அதிமுகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக டாக்டர் மஸ்தான் 1995ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 2001ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, பல்வேறு வாரியங்கள், ஆணையங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்ட நிலையில், துணைத் தலைவராக டாக்டர் மஸ்தான் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலையில் சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, டாக்டர் மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் இரங்கல்

அவரது மறைவை அறிந்த திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்தான் மறைவு எய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் மீது தனி மரியாதையும் பாசமும் பற்றும் கொண்டவராக, தொடர்ந்து திமுகவில் பயணித்து வந்தவர் என்பதுடன், என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பயணித்து வந்த செயல் வீரர் டாக்டர் மஸ்தான்.

திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளராக அந்த அணியின் பணி சிறக்க முழு மூச்சாக அர்ப்பணித்தவர். சமுதாய நலனுக்காக முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப் பணியாளரை இழந்து தவிக்கிறேன். மனித நேயராக, சமூக சேவகராக, கழக தொண்டராக பணியாற்றிய டாக்டர் மஸ்தான் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். டாக்டர் மஸ்தானை இழந்து வாடும் குடும்பத்தினர், கழகத்தினர், சிறுபான்மையின சகோதர சகோதரிகளுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மஸ்தான் மறைவிற்கு, மேலும் பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *