செய்திகள்

சிறுநீரக நோய் பரவலை கண்டறிந்து சிகிச்சையளிக்க வீடு வீடாக சர்வே

மதுரை, மார்ச்.11–

சிறுநீரக நோய் பரவலை கண்டறிந்து சிகிச்சையளிக்க வீடு வீடாக சர்வே நடத்திட மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மீனாட்சி மிஷன் மருத்துவ மனையின் சிறுநீரகவியல் துறையின் தலைவர் டாக்டர்.கே.சம்பத்குமார், சிறுநீரக அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர்.ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் சிறுநீரகவியல் துறை நிபுணர் டாக்டர்.ஆண்ட்ரூ தீபக் ராஜிவ் ஆகியோர் இணைந்து மார்ச் 11 அன்று அனுசரிக்கப்படுகின்ற உலக சிறுநீரக தினம் 2021 நிகழ்வையொட்டி மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினர்.

கோவிட் வைரஸ் தொற்று சிறுநீரக நோயாளிகளில் 7-15 சதவிகிதத்தினரிடம் சிறுநீரக சேதத்தை விளைவிப்பதால் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் உள்ள தயக்கத்தை அகற்றுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். ஏற்கனவே சிறுநீரக பாதிப்புள்ள நோயாளிகளைப் பொறுத்தவரை கோவிட் தொற்று அவர்களுக்கு ஏற்படும்போது உயிரிழப்பு விகிதமானது 50% வரை அதிகமாக மாறுகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

சிறுநீரகவியல் துறையின் தலைவர் டாக்டர்.கே.சம்பத்குமார் பேசியபோது நாட்பட்ட சிறுநீரக நோய், இந்தியாவில் மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது என்று கூறினார்.

உலகளவில் உயிரிழப்பிற்கான ஆறாவது மிகப்பொதுவான காரணமாக அது இருக்கிறது. மேலும் உலகளவில் ஏறக்குறைய 70 கோடி மக்களை அது பாதிக்கிறது. சிறுநீரக செயலிழப்பு என்பது சப்தமில்லாமல் கொல்கின்ற நோய் என்றும் பாதிப்பு கடுமையாக இருக்கின்ற போது அவற்றை சிகிச்சையால் குணப்படுத்த இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே குறிப்பிட்ட கால அளவுகளில் சிறுநீரக பரிசோதனையை செய்து கொள்வதும் சிறுநீரக நோய்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த அல்லது தாமதிக்க உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணங்களை கட்டுப்படுத்துவதும் மாற்றியமைத்துக் கொள்வதும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

சிறுநீரில் புரதப் பரிசோதனை, இரத்தத்தில் புரதப் பரிசோதனை மற்றும் கிரியாட்டினின் பரிசோதனைகளை செய்வதன் மூலம் நோய் பாதிப்புள்ளதா என்பதை கண்டறிய முடியும் என்று அவர் தனது உரையில் கூறினார். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்கள், அவர்களது சிறுநீரக ஆரோக்கியத்தை தவறாமல் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், அவர்களுள் 30% பேருக்கு நீண்டகால அடிப்படையில் சிறுநீரக நோய் ஏற்படும் அதிக சாத்தியம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

சிறுநீரக நோய்களுக்கான காரணங்கள் நன்றாக தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், மனஅழுத்த மேலாண்மை மற்றும் நல்ல உறக்கம் ஆகியவற்றையும் உள்ளடக்குகின்ற எளிய வாழ்க்கைமுறை திருத்தங்களாக இந்நோய் வராமல் தடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கின்றன என்றார்.

சிறுநீரக அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர்.ஆர்.ரவிச்சந்திரன், சிறுநீரக கற்களின் பாதிப்பு குறித்து பேசுகையில், பொதுவான வாழ்க்கை முறை நோய்களுள் ஒன்றாக சிறுநீரக கற்கள் உருவெடுத்திருக்கிறது என்று கூறினார். இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 12%, அவர்கள் வாழ்நாள் காலத்தில் சிறுநீரக கற்கள் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர்களுள் சுமார் 50 சதவிகிதத்தினருக்கு ஏதாவது ஒரு வடிவத்தில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது என்றும் மதிப்பிடப்பட்டிருப்பதாக தனது உரையில் குறிப்பிட்டார்.

சிறுநீரக கல் என்றால் என்ன மற்றும் அதன் சிகிச்சை என்ன என்று விளக்கிக்கூறிய அவர் மிகக்குறைவான சிறுநீரில் மிக அதிக கழிவு இருக்கும்போது சிறுநீரக கற்கள் உருவாவதை அது விளைவிக்கிறது என்று கூறினார். இக்கற்கள் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் பை வரை, சிறுநீர் பாதையின் எந்தவொரு பகுதியையும் பாதிக்கக்கூடும். சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கு, அதிக உப்பு சேர்த்த உணவுகள், கேஃபைன், சர்க்கரை, மென்பானங்கள், சாக்லேட்டுகள் மற்றும் பருப்புகள் மற்றும் விலங்குகளின் புரதம் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிகளவு தண்ணீர் அருந்துவது, பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், சிறுநீர் பரிசோதனை, இரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் வழியாக சிறுநீரக கற்கள் இருப்பதை கண்டறிய முடியும் என்று கூறினார்.

சிறுநீரக கல் சிறுநீர் கழிப்பதன் மூலம் வெளியேறுவதற்கு அதிகளவு நீர் அருந்துவதும் சிகிச்சையில் உள்ளடங்கிய அம்சமாக இருக்கும். ஆனால், நிலைமையின் அவசர நிலையைச் சார்ந்து சிறுநீர் கல்லை அகற்ற அறுவைசிகிச்சையும் சிலருக்குத் தேவைப்படலாம் என்று அவர் கூறினார். சிறுநீரகவியல் துறை நிபுணர் டாக்டர்.ஆண்ட்ரூ தீபக் ராஜிவ், பல சிறுநீரக நோய்களுக்கான அறுவைசிகிச்சை சார்ந்த மற்றும் அறுவைசிகிச்சை சாராத சிகிச்சை முறைகளின் வெற்றி விகிதமானது, மாற்று சிறுநீரக சிகிச்சை உட்பட, 90 சதவிகிதத்திற்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது என்று தனது உரையில் கூறினார்.

சிறுநீரகத்தை தானமாக வழங்குபவர்களுக்கு இரத்த அழுத்த பாதிப்பு உருவாவதற்கு ஓரளவிற்கு அதிக இடர்வாய்ப்பு இருக்கிறது என்றாலும், உடலுறுப்பை தானமாக வழங்குவதன் மூலம் ஒரு உயிரை காப்பதில் கிடைக்கின்ற உணர்வு ரீதியான திருப்தி நிகரற்றது என அவர் கூறினார்.

உலக சிறுநீரக தினம் என்பது, உலகளவில் சிறுநீரக நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு பரப்புரை திட்டமாகும். மனித உயிருக்கு நாட்பட்ட சிறுநீரக நோய்கள் விளைவிக்கின்ற அச்சுறுத்தல் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்த இடர் காரணியை குறைப்பதற்கு வாழ்க்கையில் ஆரோக்கியமான மாற்றங்களை ஒருவர் எப்படி மேற்கொள்ளலாம் என்பதை எடுத்துரைப்பதும் இதன் நோக்கமாகும்.

உலக சிறுநீரக தினம் 2021-ன் கருப்பொருள், “சிறுநீரக நோய் பாதிப்புடன் சிறப்பாக வாழ்க்கை நடத்துவது” என்பதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. நோயின் அறிகுறிகளை சிறப்பாக மேலாண்மை செய்வதற்கு தேவையான விழிப்புணர்வை தருவதோடு உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் தங்களது வாழ்க்கையை நடத்த அவர்களை ஊக்குவிப்பது என்ற அடிப்படை இலக்கை கொண்டதாகவும் உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *