செய்திகள்

சிறுத்தை தாக்குதல் அச்சம்: திருப்பதிக்கு மலைப்பாதையில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது

திருமலை, ஆக. 19–

சிறுத்தை தாக்குதல் அச்சம் காரணமாக திருமலைக்கு மலைப்பாதை வழியாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 மலைப்பாதைகள் வழியாக தங்கள் குடும்பத்துடன் நடந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.

ஆனால் சமீப காலமாக, அலிபிரி பாதையில் சிறுவர்களை குறி வைத்து சிறுத்தைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த வாரம் நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா (6) என்ற சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றதால் பக்தர்களின் பீதி மேலும் அதிகரித்துள்ளது.

வனத்துறையின் கடுமையான சட்டங்களால் மலைப்பாதைகளில் உடனடியாக இரும்பு வேலி அமைக்க முடியவில்லை. இதனால் தற்போதைக்கு நிலைமையை சமாளிக்க நடந்து செல்லும் பக்தர்களுக்கு தடிகளை தேவஸ்தானம் கொடுத்து வருகிறது. இதனை பலரும் விமர்சித்த போதிலும் இத்திட்டத்தை கைவிட மாட்டோம் என தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கடந்த 50 நாட்களாக திருப்பதி வனப்பகுதிகளில் ஆங்காங்கே கூண்டுகள் அமைத்து இதுவரை 3 சிறுத்தைகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். ஆனாலும் இன்னும் 20-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. மேலும் கரடிகளும் யானைகளும் சுற்றித் திரிகின்றன. கைத்தடிகள் கொடுத்து அனுப்பினாலும், பக்தர்கள் பீதி காரணமாக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதைகளில் தைரியமாக செல்ல முன்வரவில்லை.

இதனால் இவ்விரு மலைப்பாதைகளிலும் நேற்று பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது. சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை செல்லும் மலைப்பாதைகளில் தற்போது 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை மட்டுமே செல்கின்றனர். மாறாக, பஸ், கார் போன்ற வாகனங்களில் அதிக பக்தர்கள் சென்று வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *