அத்தனை அச்சர சுத்தமாகப் பாடுவாள் சோபனா. ஆங்கிலமும் இந்தியும் கொலோசியிருக்கும் ஹாங்காங்கில் அவளின் தமிழுக்கு என்று தனி இடம் உண்டு. எத்தனையோ மொழிகள் அவளுக்குத் தெரிந்திருந்தாலும் தமிழில் பாடுவதைப் பெருமையாக நினைப்பாள்.
அவளின் தமிழ்ப் பாட்டை கேட்பதற்கும் தலையாட்டுவதற்கும் ஒரு கூட்டம் அங்கு இருந்து கொண்டு தான் இருக்கும். நவீனக் கலாச்சாரங்கள் எத்தனையோ ஹாங்காங்கில் முளைவிட்டிருந்தாலும் இவளின் தமிழ் அங்கு படர்ந்து விரிந்திருந்தது.
சீனுவுடன் அடிக்கடி உரையாடுவாள். அந்த உரையாடல்கள் தனித் தமிழில் தான் இருக்கும். அதுவும் தேன்குழைத்த தித்திப்பில் இருக்கும். அவளின் அந்தத் தீந்தமிழ், அவ்வளவு அழகாக இருக்கும். அப்படித் தமிழ் பேசும் தேவதையை அவன் கண்டதில்லை. அதுவரை அவளை சீனு சந்தித்ததும் இல்லை என்றாலும் இருவரையும் தமிழ் சேர்த்து வைத்தது. தவறியும் வேறு மொழியில் அவனுடன் பேச மாட்டாள் சோபனா. தனித் தமிழில் தான் பேசுவாள் . சில நேரங்களில் பாடுவாள்: அந்தப் பாடல் அவன் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.
அவளுடன் பேசி முடித்த பிறகு அவளின் தமிழை நினைத்து ரொம்பவே பெருமைப்படுவான். இருவரும் உரையாடும்போது தமிழே மேலோங்கி நிற்கும் . வேற்று மாநிலத்தில் தமிழைத் தாங்கிப் பிடிக்கும் தோணியாக இருந்தாள் சோபனா.
தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, தமிழ்க் கலாச்சாரத்தை மறந்து தாங்கள் எல்லாம் அந்தரத்தில் பிறந்து குதித்து வந்தவர்கள் போல பேசுவோருக்கு மத்தியில் ஹாங்காங்கில் இருந்து கொண்டு தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் பேணிக் காக்க வேண்டும். தமிழைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று பேசும் சோபனாவின் தமிழ்ப் பெருமை சீனுவுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
” நாம எப்ப மீட் பண்ணலாம்?”
” கண்டிப்பா சந்திக்கலாம்”
சோபனா சொல்லும் போதே தமிழ் தெறிக்கும்.
” எனக்கு ஒரு வருத்தம் இருக்குங்க ” என்று அடிக்கடி சொல்வாள் சோபனா என்ன ? என்று சீனு கேட்டால்
“நான் தமிழ் பேசுற மாதிரி, என் குழந்தைகள் தமிழ்ல பேசுறதில்ல. பாடுறதில்ல. அவங்களுக்கு தமிழ் தெரியல. கலாச்சாரம் புரியல. ரொம்ப கஷ்டமா இருக்கு “
என்று அடிக்கடி புலம்பி கொண்டே இருப்பாள் சோபனா
” நீங்க சொல்றது ரொம்ப சரி. இப்ப யாரும் தமிழ்ல பேசுறத தரக் குறைவா நினைக்கிறாங்க. வேற மொழியப் படிக்க வச்சு , தங்கள மேட்டுக்குடி மனுசங்களா நினைக்கிறவங்களுக்கு மத்தியில நீங்க வித்தியாசம்ங்க”
என்று சீனு சொல்ல
” ஆமா.இன்னும் ரெண்டு மாசத்தில குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவு விடுறாங்க. குழந்தைங்கள தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னுட்டு இருக்கேன். ரெண்டு மாசம் தமிழ்நாட்டுல தங்குனா, குழந்தைகளுக்கு தமிழ் நல்லா வரும் . தமிழ் நல்லா புரியும். தமிழ் நல்லா தெரியும் . அவங்களுக்குத் தமிழ் கலாச்சாரம் தெரியணும். அதுதான் என்னோட ஆசை” என்று உயிர் உருக பேசினாள் சோபனா.
” அடடே என்ன ஒரு தமிழ்ப் பற்று? என்ன ஒரு தமிழ் மீதான பாசம்? நீங்கள் அல்லவோ தமிழ் மகள். தமிழ் படித்து தமிழால் வளர்ந்து, தமிழே தெரியாதவர்கள் போல் பெருமை பீத்திக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மத்தியில் வேற்று மொழிகள் பல தெரிந்தும் தமிழைத் தூக்கிப் பிடிக்கும் உங்கள் ஈடுபாடு எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. கண்டிப்பாக ரெண்டு பேரும்
சந்திக்கலாம். ” என்று சீனுவும் உரிமையோடு சொன்னான்.
” நான் என்னோட குழந்தைகள தமிழ்நாட்டுக்கு கூட்டி வாரது தமிழ் கலாச்சாரத்தப் படிக்கத்தான் “
என்று மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தாள் சோபனா.
“கண்டிப்பா வாங்க . தமிழ்நாடு உங்களை அன்போடு வரவேற்கிறது” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது
“இதோ என் பையன் வந்துட்டான். என் பையன் கூடப் பேசுறீங்களா?” என்று சோபனா சொல்ல
” கண்டிப்பா பேசுறேன் குடுங்க”
என்று எதிர் திசையில் இருந்த சீனு சொல்ல
” ஹலோ வணக்கம். நான் சீனு பேசுறேன் . என்ன பண்றிங்க. சாப்பிட்டிங்களா? என்று அழகு தமிழில் சீனு பேச
” ஹலோ… ஐ அம் சுஜித் ஹவ் ஆர் யூ?
என்று ஆங்கிலத்தில் பேசினான் அந்தச் சிறுவன்
” உங்களுக்குத் தமிழ் தெரியுமா?
என்று சீனு கேட்க
“ஐ டோன்ட நோ தமிழ் “
என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னான் சுஜித்
” ஏன் உங்களுக்கு தமிழ் தெரியல?
என்று சீனு கேட்க
” எஸ். ஐ டோன்ட் நோ தமிழ் . ஐ லேர்ன் இங்கிலீஷ் மீடியம். ஸோ ஐ கேன் நாட் ஸ்பீக் அண்டு ரீடு தமிழ்
என்று ஆங்கிலத்திலேயே பதில் சொன்னான் சுஜித்
” என்ன இது, நாம தமிழ்ல பேசினா இந்தப் பையன் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறானே? “.என்று நினைத்தான், சீனு
சுஜித்திடமிருந்த செல்பாேனை வாங்கிய சோபனா
” இதுதாங்க பிரச்சனை .தமிழ்ல பேசினா , என் குழந்தைகளுக்கு தமிழ் புரியும் . ஆனா தமிழ்ல பேச முடியாது. ஆங்கிலத்தில்தான் பதில் சொல்றாங்க. அதனாலதான் நான் தமிழ்நாட்டுக்கு வாரேன். அவங்க தமிழ் படிக்கணும். அவங்களுக்குத் தமிழ் தெரியணும்”
என்று மறுபடியும் தமிழ் சார்ந்த ஈரத்தில் பதில் சொன்னாள் சோபனா .
அவளின் ஹாங்காங் தமிழ் எனக்கு இனித்தது . தமிழில் அவள் பாடுவது. தமிழில் அவள் பேசுவது போலவே, அவளின் குழந்தைகளுக்கும் நம் தாய்த் தமிழ் கிட்ட வேண்டும்
என்று மனதிற்குள் வாழ்த்தினான் சீனு.
–––––––––––––––––––