சிறுகதை

சிறுகதை … வாலாட்டும் அன்பு…! … ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அந்தப் பகுதி மக்கள் எல்லாம் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள் .

“இது என்னது புதுசா இருக்கு? பயமாவும் இருக்கு .கதவைத் திறந்து வச்சுட்டு போக முடியல. இப்படி எல்லாம் நடக்குமான்னு தெரியாது. இது யாரோட நாய்?”

என்று அந்த நாயைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று மொத்தமாக முடிவெடுத்து அந்த நாயைத் தெருவை விட்டுத் துரத்துவது பற்றிப் பேசிக் கொண்டார்கள்.

அந்தத் தெருவில் உள்ள எல்லா வீட்டுக்குள்ளும் அழையாத விருந்தாளியாய் நுழைந்து அத்தனை பேரையும் பார்த்து வாலாட்டிக் கொண்டிருக்கிறது.

” எதற்காக இந்த நாய் இப்படிச் செய்கிறது என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அந்த நாயைப் பார்க்கிறவர்கள் எல்லாம் துரத்தி அடித்தார்கள். ஆனால் இது பற்றியும் எதுவும் கவலைப்படாமல் அந்தத் தெருவையே சுற்றிச் சுற்றி வந்தது. புதிதாக ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவிற்கு வேறு நாய் வந்தால், அந்த நாயை கடித்துக் குதறி வெளியே அனுப்புவதை குறியாக கொண்டிருக்கும் அந்த தெருநாய்கள். ஆனால் இந்தப் புதிய நாயை அந்த தெரு நாய்கள் ஒன்றுமே செய்யவில்லை. குரைக்கவில்லை . அதைத் துரத்த வில்லை. அப்புறப்படுத்த முயற்சி செய்யவில்லை. இது எப்படி ? “

என்று அந்தத் தெருவாசிகளுக்கு விளங்காமல் இருந்தது. இந்த நாயைத் துரத்தி விடுவதா? இல்லை வைத்துக் கொள்வதா? என்று அந்தத் தெருவில் உள்ளவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே, அந்த நாய் அங்கு வந்து வாலாட்டிக் கொண்டிருந்தது . பார்ப்பதற்கு சராசரி நாயை விட சற்று வித்தியாசமாக இருந்தது. சப்பாணி போல கால்கள் இருந்தன. வளைந்து நெளிந்து அங்கு வந்த நாய், சுற்றியிருந்தவர்களை எட்டி எட்டிப் பார்த்தது. இவர்கள் தம்மை தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தம்மைத் துரத்துவதற்கு தான் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எதுவும் அறியாத அந்த நாய் அறிமுகமே இல்லாத நபர்களுடன் நின்று தன் வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.

” இந்த நாயத்தான சொல்றீங்களா? “

என்று ஒரு பெரியவர் கைநீட்டி அந்த நாயைக் காட்ட, ஏதோ தம்மை சொல்கிறார்கள் என்று நினைத்த அந்த நாய் அந்த பெரியவரின் அருகில் போய் நின்றது. அந்த நாயைப் பற்றி குற்றம் சொன்னவர்கள் எல்லாம் அந்த நாயைப் பார்த்து வாயடைத்து நின்றார்கள். அத்தனை பேரிடமும் கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம் நின்று தன் உடம்பை வைத்து உரசி, வாலை ஆட்டித் தன் அன்பை வெளிக்காட்டி ஓரிடத்தில் படுத்துக்கொண்டது. அந்தத் தெருவின் தலைவர்

” நாய் பிடிக்கும் ஆட்களிடம் சொல்லி இதைப் பிடித்து போகச் சொல்லலாமா? இல்ல நாய் பிடிக்கும் வண்டிக்கு சொல்லி அரசாங்கத்தில் நாய் பிடிக்கிற வண்டிய வரச் சொல்லி அனுப்பி வைக்கலாமா?”

என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

தன்னைப் பிடிப்பதற்கும் இந்த தெருவை விட்டுத் துரத்துவதற்கும் தயாராக இருக்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாத அந்த நாய் எல்லோரையும் ஒருசேரப் பார்த்து பேசிக் கொண்டிருப்பவரையும் பார்த்துக் கொண்டிருந்தது.

” எவ்வளவு தைரியம் இருந்தா எல்லா வீட்டுக்குள்ளயும் போகும். அதிசயமா இருக்குங்க. ஆச்சரியமா இருக்குங்க. சர சர சரன்னு யார்கிட்டயும் கேக்காம வீட்டுக்குள்ள வருது. ஏதாவது சாப்பிட்டு போச்சுன்னா என்ன செய்றது?”

என்று ஒருவர் பூடகமாய் கேள்வி எழுப்ப,

” அப்படி எல்லாம் சொல்லாதீங்க அது வீட்டுக்குள்ள வருதே தவிர இதுவரைக்கும் எந்த உடைமையோ பொருளையாே சேதப்படுத்தல எதையும் சாப்பிடவே இல்ல. என்னவோ தெரியல. எல்லா வீட்டுக்குள்ளயும் போய் வரணும்கிறது தான் அந்த நாய்க்கு ஒரு எண்ணமோ “

என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நாயை அந்தத் தெருவை விட்டுத் துரத்தி விடுவது என்று நாய் பிடிக்கும் வாகனத்திற்கு போன் செய்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் நாய் பிடிக்கும் வாகனம் அந்த தெருவுக்குள் வந்தது.

ஓடிப்போய் அந்த வண்டி அருகில் நின்று தன் காலை வைத்து சுரண்டி ஏதோ சொல்லிவிட்டு நாய் பிடிக்க வந்த இரண்டு பேர்களில் காலடியில் போய் நின்று தன் வாலையாட்டி உரசியது.

” இந்த நாயைப் பிடிக்கத்தான் போன் பண்ணுனீங்களா?”

என்று விலாவாரியாக கேட்டான் நாய் பிடிப்பவன்.

” இந்த நாய் தான். பிடிச்சிட்டுப் போங்க”

“இது என்னங்க. இவ்வளவு பாசமா பழகிட்டு இருக்கு. இத நாங்க பிடிக்க முடியாதுங்க .நல்லா தான் இருக்குது”

என்று மறுத்தான் நாய் பிடிப்பவன்

” இல்லங்க இதனால ரொம்ப டார்ச்சர் . இந்த நாயை தூக்கிட்டு போய்டுங்க. எல்லா வீட்டுக்குள்ள நுழையுது. எங்களால காவல் காக்க முடியல”

என்று ஒருவர சொல்ல

“இந்த மொத்தத் தெருவையே தன்னுடைய வீடா நினைச்சுட்டு இருக்கிறதால தான், இவ்வளவு இடங்கள் இருக்கிற ஏரியாவ விட்டுட்டு, இந்த நாய் ஏன் உங்க தெருவுல தேர்ந்தெடுத்து இருக்குன்னு தெரியல. இதுல ஏதோ சூட்சுமம் இருக்கிறது மாதிரி எனக்கு தெரியுது. யாருகிட்டயும் சொல்லி இந்த நாய புடிச்சிட்டு போக வைக்காதீங்க. என்ன n இந்த நாய் தான் உங்களுடைய சாமின்னு நினைக்கிறேன். “

என்றான் நாய் பிடிப்பவன்.

“அது நான் இல்லைங்க. இந்த நாய்க்குள்ள ஏதோ இருக்குன்னு நினைக்கிறேன்”

என்றான் இன்னொருவன். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்ட அந்தத் தெருக்காரர்கள்

” உண்மையா இருக்குமோ? “

என்று சொல்லி அந்த நாயை அழைத்தார்கள். குடுகுடுவென ஓடி வந்து அந்த தெருத்தலைவர் அருகிலே நின்று வாலாட்டிக் கொண்டிருந்தது .

“சரி இந்த நாய எங்கேயும் பிடிச்சு கொடுக்க வேண்டாம். .நம்ம குடும்பத்தில ஒரு ஆளாவே இருந்துட்டு போகட்டும் . அவங்கவங்க வீட்டுல என்ன இருக்கோ அதக் குடுங்க. சாப்பிட்டு உசுரு வாழட்டும் “

என்று அவர் சொல்ல

” இவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்று கூடியிருந்த மக்களைத் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தது அந்த நாய் .

“இது நாய் இல்லங்க. நட்பு .இந்த நாய் இல்லாம நான் இருக்க முடியாது “

என்று ஒரு சிறுமி அழ, மொத்தச் சிறுவர் சிறுமிகளும் அந்த நாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

“சரி ..சரி …பிடிச்சு கொடுக்கல. இங்கே இருந்து போகட்டும் “

என்று அத்தனை பேரும் சொல்ல

ஒவ்வொருவராகப் போட்டி போட்டுக் கொண்டு, அந்த நாயைத் தங்கள் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம் எனப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

” இந்த நாய் ஒரு குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான நாய் இல்ல. நம்ம தெருவுக்கே சொந்தமான நாய். இத யாரும் நாம சொந்த கொண்டாட முடியாது .தினமும் ஒரு வீட்டில இருந்து சாப்பாடு சமைச்சு கொண்டு வந்து கொடுங்க. நமக்கு பொதுவான எடத்தில தான் இந்த நாய் இருக்கும். இது எல்லாருக்கும் பொதுவான நாய். நாம எல்லாரும் தான் இத வளக்கணும் “

என்று ஊரில் உள்ள பொதுவான இடத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். அத்தனை பேரையும் பார்த்து, வாலாட்டியபடியே சென்று கொண்டிருந்தது அந்த வாலாட்டும் அன்பு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *