சிறுகதை

சிறுகதை .. வார்த்தைகள்..! … ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

மதியழகனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது. இவ்வளவு காலம் இப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வந்ததே இல்லை. நீங்க வாய வச்சிட்டு சும்மா இருந்திருக்க மாட்டீங்க..? இப்போ வாங்கிக் கட்டிட்டு உட்கார்ந்து இருக்கீங்க. இது தேவையா? என்று மனைவி சுகன்யா சொல்லிக் கொண்டிருந்தாள்.

” நான் என்ன செஞ்சேன். தப்பு என் மேல இல்லை? என்று வாதாடினார் மதியழகன்

“நீங்க செஞ்ச தப்ப என்னைக்கு ஒத்துக்கிட்டீங்க. இப்போ மெமோ வாங்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க” என்று சுகன்யா சொல்ல மதியழகனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மண்டையைப் பிடித்துக் கொண்டு கீழே உட்கார்ந்தார்.

“இனிமே யார்ட்டயும் இப்படி நடந்து கொள்ளாதப்பா. இது தப்பு. நானும் உன் புள்ள தானே? என்கிட்ட வேற யாராவது இப்படி பேசியிருந்தா நீ சம்மதிப்பயா? உன்னுடைய வேலைய மட்டும் நீ பாரு. உன் கிட்டயும் தப்பு இருக்குதுப்பா. நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் அப்பா” என்று மதியழகன் மகள் ஷாலினியும் அப்பாவிடம் பேசினாள்.

” அது சரிதான்மா. கோபம், ஆத்திரம், என்ன செய்றது?. அதான் பேசிட்டேன். “

” அதுக்கு தான். இப்போ மெமோ வாங்கிட்டு உட்காந்து இருக்கீங்க” என்று சுகன்யா சொல்லிக்கொண்டு அடுப்படிக்குப் போனாள்.

அப்போது மதியழகன் செல்போன் அலறியது. “அப்பா யாரோ உனக்கு போன் பண்றாங்க” என்று ஷாலினி சொல்ல “வேண்டா வெறுப்பாக போய் போனை எடுத்தார் மதியழகன்.

” நீங்க பேசுனது தப்பு. நீங்க பேசுனது பஸ்ல இருந்த கேமராவுல பதிவாயிருக்கு. பொதுமக்கள்கிட்ட வேலை பாக்கிறவங்க பொதுவா ஈரமுள்ள மனுஷனா இருக்கணும். நம்ம அவங்களுக்கு சேவை செய்யத்தான் வந்திருக்கோம். பஸ்ல ஏறினா, அந்தப் பஸ் டிரைவருக்கும் கண்டக்டருக்கும் சொந்தமும்னு நினைக்க கூடாது. மக்களுடைய வரிப்பணத்தில அது வாங்குனது. மக்களோட வரிப்பணத்தில் தான் நீங்க சம்பளம் வாங்கிட்டு இருக்கீங்க. அத விட்டுட்டு இந்த பஸ் ஓனர் மாதிரியே நீங்க நடந்துக்கிட்டது பெரிய தப்பு.

ஒங்களுக்கு மெமோ கொடுத்து இருக்கோம். வீட்டில இருந்துட்டு வாங்க. இதுக்கு மேல ஏதாவது பொதுமக்களிடம் பேசினீங்கன்னா உங்கள டிஸ்மிஸ் செய்ய வேண்டி இருக்கும்” என்று உயர் அதிகாரி மதியழகனைத் திட்ட, எதுவும் பேசாமல் போனைக் கட் செய்தார்.

” என்னப்பா ஏதாவது பிரச்சனையா?” என்று ஷாலினி கேட்க, எதுவும் பேசாமல் தலையை மட்டுமே ஆட்டினார், மதியழகன்.

” அப்பா இவ்வளவு மௌனமா இருக்கியே? என்னைய வேற யாராவது அப்படி பேசி இருந்தா நீ சும்மா இருந்திருப்பியா? என்று ஷாலினி கேட்க,

” அவனைக் கொன்ற மாட்டேன் ” என்று கோபம் கொண்டு எழுந்தார், மதியழகன்.

” அப்படித்தானே அந்தப் பொண்ண பெத்த அப்பா அம்மாவுக்கும் இருந்திருக்கும். நீ பஸ்ல ஏறுனா பயணிகள் கிட்ட போய் டிக்கெட் வாங்கணும். அதை விட்டுட்டு உக்காந்த இடத்தில் உட்காந்து டிக்கெட் குடுக்குற? உன்னுடைய டிக்கெட் மெஷின அந்தப் பொண்ணு தெரியாம தான தட்டி விட்டுச்சு” அதுக்காக

” அப்படி என்ன வேக மயிரு? ” இப்படி ஒரு வார்த்தைய நீ கேட்டது ரொம்ப தப்புப்பா. பெண் குழந்தைகள பத்திரமா பேசணும். பாதுகாப்பா பேசணும். உன்னுடைய மகளுக்குன்னா ஒன்னு. அடுத்தவங்க மகள்ன்னா ஒன்னா யாரையும் தவறா நினைக்காதப்பா ? எல்லா பெண் குழந்தையும் உன்னுடைய மகள்ன்னு நினைச்சுக்கப்பா ” என்று ஷாலினி சொல்ல அப்போதுதான் தன்னுடைய தவறை உணர்ந்தார், மதியழகன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *