வளைகாப்பு விழா நடந்த அந்த இரவு களைத்துப் போய் படுக்கையில் விழுந்தாள், பாரிஜாதம்.
” சரி , அவள எதுவும் தொந்தரவு பண்ணாதீங்க. ரொம்ப டயர்டா இருப்பா . ஏதா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்”
என்று அப்பா தெய்வநாயகம் சொல்ல ,
“சரி “
என்றாள், தெய்வநாயகம் மனைவி கோதை.
வளைகாப்பு விழா முடிந்த இரவு பாரிஜாதத்தைத் தனியாக விட்டு சென்றிருந்தான், அவளின் கணவன் குமரன். ” வாயும் வயிறுமா இருக்கிற புள்ள தனியா படுத்திருக்கிறா, ஒரு எட்டு என்னன்னு கேட்டுட்டு வந்துடலாமா ? ” என்று தெய்வநாயகம் சொல்ல அவர்கள் அறையில் இருந்து பாரிஜாதம் அறைக்குச் சென்றார்கள். மூடியிருந்த கதவைத் தட்டினார்கள்.
” பாரிஜாதம்… பாரிஜாதம்…” என்று இரண்டு தடவைக்கு மேல் கதவைத் தட்டியும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
“விழா அசதியில் ரொம்ப களைப்பா இருந்திருப்பா, அதுதான் அவளால எழுந்திருக்க முடியல போல. சரி நாம போய் தூங்கலாம்” என்று தெய்வநாயகம் சொல்ல,
” எனக்கென்னமோ பயமா இருக்கு. ஒரு தடவை என்னா ஏதுன்னு கேட்டுட்டு வரலாமா? ” என்று கோதை சொல்ல
” இல்ல கோதை. எதுவும் நடக்காது. நீ தைரியமா இரு.”
என்று ஆறுதல் சொன்னார், தெய்வநாயகம்
” எனக்கு என்னமோ பயமா இருக்கு. நீங்க அவளுடைய செல்போனுக்கு கால் பண்ணுங்க ” என்று கோதை சொல்ல, “நீ சொல்றதும் நல்ல ஐடியா தான் “
என்ற தெய்வநாயகம், பாரிஜாதம் செல்போனுக்கு போன் செய்தார். முழுவதும் ரிங்கானது
” போன அவ எடுக்கலையே ஒருவேளை அசந்து தூங்கிட்டு இருப்பாளோ?” என்று அவர்களுக்குள்ளாகச் சமாதானம் செய்து கொண்டார்கள்.
” சரி இனிமே அவள தொந்தரவு செய்ய வேண்டாம். நாம காலையிலேயே பாத்துக்கலாம்”
என்று இருவரும் சொல்லிப் போனாலும் இருவரின் மனதும் ஒரு நிலையில் இல்லை.
” மாப்பிள்ள, அவங்க வீட்டுக்கு போயிட்டாரு. அவருடைய செல்போனும் எடுக்கல . வீட்ல இப்ப அவரும் இல்ல. இப்ப என்ன பண்றது? “
என்று நிம்மதி இல்லாமல் தங்கள் படுக்கை அறைக்கு வந்த தெய்வநாயகத்திற்கும் கோதைக்கும் கண்ணில் ஒரு துளி தூக்கம் இல்லை.
“அவ்வளவு அசதியா தூங்குறா போல. கதவும் தட்டிப் பாத்துட்டோம். திறக்க மாட்டேங்குற? போன் அடிச்சும் பாத்துட்டோம், எடுக்க மாட்டேங்கறா ? அப்படி என்ன அசதியான தூக்கம்?
என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரின் கண்களில் காலையில் நடந்த விழா காட்சியாக விரிந்தது.
வகை வகையான உணவு வகைகள் ஒரு பக்கம் .அடுக்கி வைக்கப்பட்ட வண்ணம் மாறாத குங்குமம், மஞ்சள். மறுபக்கம் தட்டில் இருந்த வகை வகையான பழங்கள். அரிசி, பருப்பு எத்தனை வகைகள் இருக்கிறதோ அத்தனையும் தட்டு நிறைய இருந்தன. சேலை, சட்டை என்று இன்னொரு பக்கம் விதவிதமான வண்ணங்களில் நிறைந்திருந்தன. பாரிஜாதத்திற்கு அன்று வளைகாப்பு விழா, அந்தத் தெரு முழுக்க நிறைந்திருந்தார்கள், ஊர் மக்கள்.
அத்தனையும் இருவரின் நினைவில் முடிய,
” என் புள்ள தனியா படுத்திருக்கா. மறுபடியும் ஒரு தடவ கதவத் தட்டிப் பாக்கலாமா ? என்ன ஏதுன்னு தெரிஞ்சாதான் நாம நிம்மதியா தூங்க முடியும்” என்று கணவனும் மனைவியும் எழுந்து போய் பாரிஜாதம் அறைக் கதவை மறுபடியும் தட்டினார்கள்.
” பாரிஜாதம்… பாரிஜாதம்… ” முன்னைவிட சத்தமாகப் பெயர் சொல்லிக் கதவைத் தட்டினார்கள். அப்போதும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை .பயந்து போன தெய்வநாயகமும் கோதையும்வீட்டில் இருந்தவர்களை எல்லாம் எழுப்பினார்கள்.
” என்ன ஆச்சுன்னு தெரியல. கதவத் தட்டுனா தெறக்க மாட்டேன்கிறா . போன் பண்ணா எடுக்க மாட்டேங்கிறா.எங்களுக்கு என்னமோ பயமா இருக்கு “
என்று அவர்கள் சொல்ல, வீட்டில் இருந்த அத்தனை உறவினர்களும் ஒன்று கூடினார்கள். அவர்களும் ஆளாளுக்கு கதவைத் தட்ட ,உள்ளே இருந்து எந்த பதிலும் தராமல் இருந்தாள் பாரிஜாதம்.
” இது என்னமோ வேற மாதிரி இருக்கிற மாதிரி தெரியுது. கதவ ஒடச்சிற வேண்டியதுதான் “
என்று ஒருவர் சொல்ல, சிறிது நேரத்திற்கெல்லாம் கதவு உடைக்கப்பட்டது. உடைக்கப்பட்ட அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு பாரிஜாதம் இல்லாமல் இருந்தாள்.
“என்ன இது? பாரிஜாதத்தக் காணாம் ?இங்கே தானே படுத்திருந்தா?
என்று எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்க்க , பாரிஜாதத்தை அந்த அறை முழுவதும் தேடினார்கள்.
” பாரிஜாதம்… பாரிஜாதம்…”
என்று பட்டென்று நினைவுக்கு வந்த தெய்வநாயகம், மருத்துவமனைப் படுக்கையிலிருந்து அதிர்ந்து எழுந்து
” பாரிஜாதம்… பாரிஜாதம் “
என்று கத்தினார் .
“என் மக பாரிஜாதத்த எங்க? ” அவள நான் பாக்கணும். அவள உடனே கூட்டிட்டு வாங்க “
என்று கத்திக் கொண்டிருந்தவரைச் சமாதானப்படுத்தினார், ஒரு மருத்துவர்.
” கூல்.. கூல்… தூங்குங்க… ஒன்னும் இல்ல… ஒன்னும் இல்ல “
என்று அந்த மருத்துவர் தட்டிக் கொடுக்க,
” இல்ல டாக்டர், என் மகள் பாரிஜாதத்த நான் பாத்தே ஆகணும் “
என்ற அடம் பிடித்தார், தெய்வநாயகம்.
” உங்களுக்கு உடம்பு சரியில்ல. நீங்க ஓய்வு எடுங்க .உங்க பொண்ண நான் அழைச்சிட்டு வரேன் “
என்று மருத்துவர் சொல்ல
” அதெல்லாம் முடியாது என் மகள இப்பவே நான் பாக்கணும். இல்ல இங்க இருந்து நான் ஓடிருவேன் “
என்று பயமுறுத்தினார் தெய்வநாயகம்.
” உங்க பொண்ணு பாரிஜாதம் இப்ப நிறை மாத கர்ப்பிணியா இருக்கிறா . அவளுக்கு வளைகாப்பு வைபோகம் வச்சிங்க. சொந்த பந்தங்களை எல்லாம் கூட்டி வந்து விழாவ சிறப்பா நடத்துனீங்க. விழா அன்னைக்கு உங்க பொண்ணு காணாம போயிட்டா. அவ்வளவு தான?
என்று தெய்வநாயகத்திடம் மருத்துவர் கேட்க,
” ஆமா…. நடந்தத ஒண்ணு விடாம அப்படியே சொல்றீங்க. என் பொண்ணக் கூட்டிட்டு வாங்க . நான் உடனே பாக்கணும் “
என்று படுக்கையில் கிடந்து அடம் பிடித்தார், தெய்வநாயகம். அவர் நினைவில் மறுபடியும் விரிந்தன , பழைய காட்சிகள்..
தெய்வநாயகத்தின் வீட்டின் முன்னால் ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. மாப்பிள்ளை வீட்டார்கள். தெய்வநாயகம் வீட்டார்கள் ,உறவினர்கள் எல்லாம் ஒன்று கூடினார்கள். தாய் மாமன் முறைக்கு ஆட்களும் அங்கு குழுமியிருந்தார்கள் . பாரிஜாதத்தின் முன் கையில் இருந்து பின் கை வரை நிறைந்திருந்தன, கண்ணாடி வளையல்கள் .இரண்டு கன்னங்களிலும், அப்பப்பட்டிருந்து சந்தனம் பாரிஜாதம் கணவன் சர்வேஸ்வரனும் உடன் அமர்ந்திருந்தான். உற்றார் உறவினர்கள் ,சொந்த பந்தங்கள் எல்லாம் உறவு சொல்லி சந்தனத்தைத் தொட்டு பாரிஜாதத்தின் இரு கன்னங்களிலும் அப்பினார்கள். நெற்றி முழுவதும் நிறைந்த குங்குமம் , அவள் கன்னங்களில் வழிந்தோடி அவள் இரு கன்னங்களையும் சிவப்பாக்கியது. வயிறை விட்டு வெகு தூரம் எழும்பி இருந்தது , அவளின் வயிறு .உள்ளே இருப்பது ஆண் குழந்தையா ? பெண் குழந்தையா ? என்ற பட்டிமன்றம் அங்கு நடந்து கொண்டிருந்தது .
“ஆண் குழந்தை என்றால் ஒரு லட்ச ரூபாய் பரிசு “
“பெண் குழந்தை என்றால் அம்பதாயிரம் ரூபாய் பரிசு “
என்று கிரிக்கெட் விளையாட்டில் பந்தயம் வைப்பது போல பாரிஜாதம் வயிற்றில் இருந்த குழந்தைக்குப் பந்தயம் வைத்தார்கள், உறவினர்கள் .
” வயிறு பெருசா இருந்தா அது ஆம்பள புள்ள தான் .வயிறு உள்ளடக்கி இருந்தா அது பொம்பள புள்ள . ஆனா இது ரெண்டுக்கும் நடுவுல இருக்குதே ? என்ன புள்ளன்னு கண்டுபிடிக்க முடியலையே ? “
என்று பாரிஜாதத்தின் வயிற்றைத் தொட்டுப் பூடகம் போட்டாள், அந்தத் தெருவில் இருந்த ஒரு பெரிய மனுசி.
“இந்தா பாரு ஆண் பிள்ளையோ? பெண் பிள்ளையோ பொறக்க போறது ஒரு உசுரு அது நல்லபடியா தாய் வயித்த விட்டு வெளியே வந்தா போதும் .ஒரு தாய் இல்லாம ஒரு குழந்தை பிறக்காது. அப்படின்னா, ஒரு பொண்ணு வேணும் .ஒரு தகப்பன் இல்லாம ஒரு குழந்தை உருவாகாது அப்படின்னா, ஒரு ஆண் வேணும். அதனால இந்த பூமியில ஆணும் பெண்ணும் சேர்ந்தது தான் வாழ்க்கை. கடவுள் எந்தப் புள்ளையக் கொடுக்கிறாரோ அத வாங்கிட்டுச் சந்தோஷமா குடும்பம் நடத்துறது தான் புத்திசாலித்தனம். .அத விட்டுட்டு ஆம்பள புள்ள வேணும் .பொம்பள புள்ள வேணும்னு பட்டிமன்றம் நடத்துறது தப்பு “
என்று வளைகாப்புக்கு வந்திருந்தவர்களைத் திட்டினாள், ஒரு கிழவி.
” கெழவி சொல்றதும் சரிதான். எந்த புள்ளையா இருந்தா என்னா கடவுள் கொடுத்தது தான் பரிசு. அதை ஏத்துக்கிட்டு வாழ்றதுதான் நம்ம மனசு “
என்று சமாதானம் சொன்னார்கள், விழாவிற்கு வந்திருந்தவர்கள் . வந்தவர்கள் எல்லாம் பாரிஜாதத்தை உச்சி மோந்து வாழ்த்துச் சொன்னார்கள். பிறக்கும் குழந்தை நல்லபடியா பிறக்கணும். தாயும் சேயும் நலமுடன் இருக்கணும் என்று வாய் நிறைய வாழ்த்தினார்கள். குங்குமப்பூ கலரில் இருந்த சேலை, நெற்றியில் வைத்த குங்குமம் பட்டுப் பட்டு செங்குங்குமமாய் சிவந்து நின்றது.
“இது எத்தனாவது மாசம் ? ” என்று ஒருத்தி சந்தேகமாக கேள்வி கேட்க
” இது எட்டாவது மாசம் ” என்றாள் பாரிஜாதத்தின் அம்மா கோதை.
“ஆம்பளப் பிள்ளைன்னா பத்து மாசத்துக்கு முன்னாடியே பெறந்திரும். பொம்பளப் பிள்ளைன்னா மட்டும்தான் கரெக்டா பத்து மாசம் ஆகும். அதுல கூடப் பாருங்க ஆம்பளப் பிள்ள அவசரப்பட்டு தாய் வயிற்றிலிருந்து வெளியே வந்துடும். பொம்பள தான் பத்து மாசம் பொறுமையா இருந்து வெளியே வரும். பிறக்குறதுலிருந்தே ஆம்பளைக்கு அவசர புத்தி இருக்குன்னு கடவுள் காமிச்சிட்டான். பத்து மாசம் பொறுமையா இருந்து வெளிய வாரதுனால தான் பொம்பளைங்களுக்கு பொறுமை ஜாஸ்தி அப்படின்னு பிறப்புல எழுதி வச்சிட்டான்” என்று பிறப்பின் தத்துவம் சொன்னாள் ஒருத்தி
விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கெல்லாம் வணக்கம் சொல்லிச் சொல்லியே பாரிஜாதத்திற்கு இரண்டு கைகளும் வலி கண்டது . அவளுடன்அமர்ந்திருந்த சர்வேஸ்வரன் தான் ஆண் என்ற அடையாளத்தை நிறைவேற்றி விட்டதாக இறுமாப்பு கொண்டு அமர்ந்திருந்தான்.
வளைகாப்பு விழாவிற்குக் கொண்டு வந்திருந்த உணவு வகையில் வகைக்கொன்றாய் இருந்த உணவு வகையில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து, பாரிஜாதத்திற்கு சாப்பிடக் கொடுத்தார்கள்.
” போதும்… எனக்கு போதும்..!”
என்று சொல்லிக் கொண்டிருந்த பாரிஜாதம் பட்டென கீழே சாய்ந்தாள். மேலே சொருகின கண்கள். நுரை தள்ளியது வாய்.
” யம்மா… பாரிஜாதம்… பாரிஜாதம்… ” என்ற அழுகுரல் அந்தப் பகுதியையே நிறைத்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள், பாரிஜாதம். ஒவ்வாத உணவு , மூச்சுத் திணறல் என்று எல்லாபரிசோதனைக்கும் உள்ளாக்கப்பட்டவளின் உயிர் பிரிந்ததாகச் சான்றிதழ் அளித்தது மருத்துவமனை.
இது நடந்து வருடங்கள் ஆறு ஆகியும், அந்த நிகழ்வு இன்னும் தெய்வநாயகம் நெஞ்சை விட்டு அகலவே இல்லை. இதயத்திலும் மூளையிலும் ஒட்டிய அந்த நிகழ்வை அழிக்க முடியாமல் இப்போது நடந்ததாக நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார் தெய்வநாயகம்.
” தெனமும் இப்படித்தாங்க. பாரிஜாதம் எங்க ? என் மகள் பாரிஜாதம் எங்கன்னு புலம்பிக்கிட்டே இருக்காரு . நாங்க என்ன சொன்னாலும் கேக்கிறது இல்ல. இப்பப் பாருங்க மறுபடியும் இப்பிடி புலம்ப ஆரம்பிச்சிட்டாரு” என்று மனைவி கோதை சொல்ல
” அதாங்க தகப்பன் பாசம். பாரிஜாதத்த பெத்த நீங்க உங்க புள்ளைய மறந்திட்டிங்க. கட்டின புருசன் தன்னோட பொண்டாட்டிய மறந்திட்டான். ஆனா, ஒரு தகப்பன் தன் மகளோட மறைவ மறக்க முடியாம தவிக்கிறார் “
என்று மருத்துவர் சொல்ல
” எங்க , என் பாரிஜாதம் ? அவளுக்கு கண்டிப்பா ஆம்பள பிள்ள தான் பிறக்கும் “
என்றார் தெய்வநாயகம்.
” ஆமா, அப்படித்தான் டாக்டரும் சொல்லியிருக்காங்க . நம்ம பாரிஜாதத்துக்கு ஆம்பளப் பிள்ளை தான் பிறக்குமாம் “
என்று சுற்றியிருந்த உறவினர்களும் தெய்வநாயகத்திடம் சொல்ல,
” ம்… இப்பவே என் மகள் பாரிஜாதத்தப் பாக்கணும் “
என்று மறுபடியும் அழ ஆரம்பித்தார், தெய்வநாயகம். அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களுக்கு இப்போது என்ன சொல்லி அவரைத் தேற்றுவதென்று தெரியவில்லை.