வடபழனி பேருந்து நிலையப் பணிமனையில் இறங்கி அருகில் இருக்கும் வசந்த பவன் ஹோட்டலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான், திரவியம். பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஒரு சாலையின் பெயர் மாண்டலின் சீனிவாசன் சாலை என்று இருந்ததைப் பார்த்தபோது அவனுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்தச் சாலைக்கு முதலில் குமரன் காலனி பிரதான சாலை என்று தானே இருந்தது? யார் இந்த மாண்டலின் சீனிவாசன். எதற்காக அவரின் பெயரைச் சாலைக்கு வைத்திருக்கிறார்கள்? என்று யோசித்தான். ஏற்கனவே அவன் மாண்டலின் சீனிவாசனைப் பற்றி படித்திருந்ததால் அவனின் சிந்தனை படித்ததை நோக்கிப் பயணப்பட்டது.
மாண்டலின் சீனிவாசன், பிப்ரவரி 28, 1969–ல் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பால்காேல் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய முழு பெயர் உப்பலப்பு ஸ்ரீனிவாஸ். சிறுவயதிலேயே அதாவது தனது ஆறாவது வயதிலேயே, கிளாரினெட் வாசிக்கும் தனது தந்தை உ. சத்யநாராயணாவின் மாண்டலின் கருவியின் மீது ஆர்வம் கொண்டார் அவருடைய தந்தை உ. சத்ய நாராயணா ஒரு வயலின் மற்றும் கிளாரினெட் இசைக் கலைஞர்.
தந்தையின் மாண்டலினை எடுத்து வாசிக்கத் தொடங்கிய போது, மகனின் திறமையை உணர்ந்து அவருக்குப் பயிற்சி அளித்தார். அவருக்கு முறையாக மாண்டலின் வாசிக்கக் கற்றுக் கொடுக்க யாரும் இல்லாததால் அவரது தந்தையே கர்நாடக இசையின் பாடல்களைப் பாடிக் காட்டி ஸ்ரீனிவாசனை உயர்ந்த இசையை வாசிக்க வைக்கப் பழக்கினார்.
மாண்டலினில் கர்நாடக இசையை வாசித்து முற்றிலும் தனக்கே உரிய பாணியை உருவாக்கினார். தனது ஒன்பதாவது வயதில் 1978 ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள குடிவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனை விழாவில் தனது முதல் கர்நாடக இசை மாண்டலின் கச்சேரியை நிகழ்த்தினார். மேற்கத்திய இசையை முதன் முதலில் கர்நாடக இசைக்கு வெற்றிகரமாகக் கொண்டு வந்தார். கர்நாடக இசையின் நுணுக்கமான கமகங்கள் மற்றும் ராகங்களுக்கு ஏற்றவாறு வாசிப்பதற்காக பாரம்பரிய மாண்டலினில் மாற்றம் செய்து எட்டு ஒற்றை நாண்களுக்குப் பதிலாக ஐந்து ஒற்றை நாண்களைக் கொண்டு மின்சார மாண்டலினைப் பயன்படுத்தினார்.
1980களில் சென்னை இசைக்குழுவில் நுழைந்தவர் ,குறுகிய காலத்திலேயே உலக அளவில் புகழ்பெற்றார். தன் 13 வது வயதில் பெர்லின் ஜாஸ் விழாவில் வாசித்தது அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தை தந்தது. ஜான் மெக்லாலின், ஜாஹிர் உசேன், ஹரிபிரசாத் செளராசியா, சிவமணி போன்ற உலக புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்து ரிமம்பர் சக்தி என்ற இசைக் குழுவில் பயணித்தார். 1998 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 2009–ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதும் கலைமாமணி விருதும் மாண்டலின் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. மாண்டலினின் சகோதரர் ராஜேஷ். இவரும் மாண்டலின் கர்நாடக இசை வாசிப்பதில் வல்லவர். அண்ணனுடன் சேர்ந்து சீனிவாஸின் பல கச்சேரிகளில் இவரும் இணைந்து வாசித்திருக்கிறார்.
மாண்டலின் சீனிவாசன் தனது 12, 13 வயதில் சென்னையில் பிரபலமாக இருந்தார். அவரது அசாதாரண திறமை எல்லோரையும் ஈர்த்தது. மாண்டலினில் கர்நாடக இசையை வாசிக்கும் பாணி அனைவரையும் கவர்ந்தது . அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர், கலை மற்றும் கலாச்சாரம் மீது இருந்த ஆர்வம் உள்ளவர். குறிப்பாக திறமையானவர்களை அரவணைப்பதில் வல்லவர். சீனிவாசன் திறமையைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர், அவரைச் சந்திக்க விரும்பினார்.
இந்தச் சந்திப்பு எம்ஜிஆர் இல்லத்தில் அல்லது அலுவலகத்தில் நடைபெற்றது. எம்ஜிஆர் சீனிவாசனை அன்புடன் வரவேற்றார். அவரின் இசைத் திறமையை வெகுவாக பாராட்டினார். எம்.ஜி.ஆரின் வேண்டுகோளின் பேரில் சீனிவாசன் அவர் முன்னால் வாசித்துக் காட்டினார். சீனிவாசனின் வாசிப்பால் பெரிதும் கவரப்பட்ட எம்ஜிஆர், அவரைப் பாராட்டி ஒரு தொகையை வழங்கினார்.
மேலும் அவரின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.காஞ்சி காமகோடி பீடம், காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கௌரவ ஆஸ்தான வித்வானாகவும் பணியாற்றினார். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் சார்பாக இந்த கவுரவம் வழங்கப்பட்டது.தமிழக அரசின் கலைமாமணி விருது .இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்று புகழுடன் வாழ்ந்தார், மண்டலின் சீனிவாசன்” என்ற மாண்டலின் சீனிவாசனின் நினைவுகள் திரவியத்துக்குள் நீண்டன.
வடபழனியில் இருந்த பழைய பெயரான குமரன் காலனி பிரதான சாலையை மாண்டலின் சீனிவாசனின் புகழைப் போற்றும் விதமாக அவர்கள் குடும்பத்தார்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆந்திராவில் பிறந்திருந்தாலும் சிறு வயது முதல் சுமார் 6 வயது முதல் வடபழனியில் உள்ள குமரன் காலனியில் வசித்ததால் அவர் வசித்த அந்தச் சாலைக்கு அவரின் பெயரை சூட்டலாமென்று அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். அதன்படி செப்டம்பர் 19ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள் இந்தப் புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார் “
என்ற செய்தியும் திரவியம் மனதில் பரவ, சீனிவாசனின் நினைவு மறுபடியும் பெருகியது.
மாண்டலின் ஸ்ரீனிவாசன் தன் 17வது வயதில் காஞ்சிபுரம் மகா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதியின் முன்னிலையில் கச்சேரி செய்து அவரின் ஆசிகளைப் பெற்றார். இது அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் திரைப்படமாக்கப்பட்ட போது அதற்கு ஸ்ரீனிவாஸ் தான் இசையமைப்பாளராக இருந்தார். சீனிவாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கர்னாடிக் மாண்டலின் என்ற இசைப் பள்ளியை நிறுவினார்.
இதன் மூலம் பல மாணவர்களுக்கு மாண்டலின் கர்நாடக இசையைக் கற்றுக் கொடுத்தார். இப்படிப் புகழுடன் வாழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாசன், செப்டம்பர் 19–ம் தேதி 2014–ம் வருடம், தனது 45 வது வயதில் கல்லீரல் செயல் இழப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
இளம் வயதில் புகழின் உச்சத்தில் இருந்த ஒருவர் இறந்ததை பிரதமர் மோடி அவர்கள் மாண்டலின் ஸ்ரீனிவாசனின் அர்ப்பணிப்பு மற்றும் இசை உலக நெடிய சேவைக்காக அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார் என்று இரங்கலைத் தெரிவித்தார். கர்நாடக இசையில் துருவ நட்சத்திரமாக இருந்த மாண்டலின் ஸ்ரீனிவாசனின் மறைவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்தார்.
சிறிய வயதிலேயே இவ்வளவு பெரிய சாதனைகள் செய்து, தன் இறுதி மூச்சு வரை இசைக்ககவே வாழ்ந்தார். தனது 45 ஆண்டுகால வாழ்க்கையில் சுமார் 35 ஆண்டுகள் இசை உலகின் ஒரு சக்தியாகத் திகழ்ந்து, கர்நாடக இசை வரலாற்றில் அழியாத முத்திரை பதித்தார்.இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடந்த இசை விழாக்கள் அனைத்திலும் பங்கேற்றுள்ளார். அவருடைய பல இசை ஆல்பங்கள் ஜாஸ் மற்றும் ரிமெம்பர் சக்தி போன்ற நிறுவனங்களால் பெரும் புகழ் பெற்றது.
தனது பனிரெண்டாவது வயதில் இசைஞானி இளையராஜாவிடம் தனது தந்தையுடன் சென்ற மாண்டலின் ஸ்ரீனிவாசன், அவர் முன்னால் மாண்டலின் இசையை வாசித்தார். அவரின் இசையைக் கேட்ட இளையராஜா ‘நீ பெரிய இசையமைப்பாளராக வருவாய்’ என்று கணித்து அப்போதே அவரை வாழ்த்தினார்’ என்று மாண்டலின் ஸ்ரீனிவாசன் பற்றிய அத்தனை வரலாறுகளையும் நினைத்துக் கொண்டே குமரன் காலனி பிரதான சாலை என்ற பழைய சாலையில் இப்போது உள்ள மாண்டலின் சாலையில் நடந்து கொண்டிருந்தான், திரவியம். அந்தச் சாலையில் மிதந்து வந்தது, மாண்டலின் இசை.
![]()





