சிறுகதை

சிறுகதை .. மயிலிறகு …! …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

மயிலிறகை இரு கைகளிலும் ஏந்தி மயிலிறகு… மயிலிறகு… என்று விற்றுக் கொண்டிருந்தாள் மீனாட்சி. அது அறுபடை முருகனின் ஒரு திருத்தலம். பத்து வயது கூட நிரம்பாத மீனாட்சி தினமும் இந்தக் கோவிலுக்கு வந்து தான் மயிலிறகு விற்பாள்.

“அக்கா மயிலிறகு வாங்கிட்டு போங்க.. அக்கா மயிலிறகு வாங்குங்க.. அண்ணே மயிலிறகு வாங்குங்க “

என்று அவள் கூவிக் கூவி விற்கும் சத்தம் அந்தக் கோயில் வளாகத்தை என்னவோ செய்தது. அவள் மட்டுமல்ல அவள் வயதை ஒத்த சில குழந்தைகள், பெண்கள் , ஆண்கள் என்று மயிலிறகு விற்றுக் கொண்டிருந்தார்கள் .அது முருகன் கோவில் . அதுவும் செவ்வாய்க்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கொளுத்தும் வெயிலில் கால்கள் சுட்டு விடக்கூடாது என்பதற்காக தரையில் விரிக்கப்பட்டிருந்த தேங்காய் நார் விரிப்பில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண் .காலின் சூடு தாங்காமல் அரக்கப் பரக்க ஓடி வந்து தண்ணீர் குடித்த விரிப்பில் நின்றனர் பக்தர்கள்.

எழிலன்,திருமுருகன் இருவரும் அன்று முருகன் கோவிலுக்குச் சென்றிருந்தார்கள்.

அப்போது மீனாட்சி தன் கையில் வைத்திருந்த மயிலிறகைக் காட்டி,

” அண்ணே மயிலிறகு வாங்குங்க அண்ணே”

என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.

” இந்த மயிலிறக வாங்கிட்டுப் போயி நாங்க என்னம்மா பண்றது?”

என்று எழிலன் கேட்க

“அண்ணே மயில் சாமிண்ணே. முருகனுடைய வாகனம் மயில் தானே? அப்படின்னா மயிலுசாமி தானே அண்ணே ? மயிலோட இறகை வீட்டில வச்சா குடும்பத்துக்கு நல்லது வீட்ல வருமானம் கூடும் .பிள்ளைகளுக்கு படிப்பு வரும் .நோய் நொடி அண்டாது. வாங்கிட்டு போய் வீட்டில வையுங்கண்ணே”

என்று பாவமான குரலில் சொன்னாள் மீனாட்சி .

அவளிடம் எதுவும் பேசாமல் எழிலனும் திருமுருகனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

” இப்ப என்ன செய்றது திருமுருகன் ?

என்று எழிலன் கேட்க

” இந்தப் பொண்ணுக்காக இந்த மயிலிறகை வாங்குவோமா?”

என்று திருமுருகன் சொல்ல

” நாம இந்த ஊர் இல்லையே? வெளியூருக்கு போகணும். இவ்வளவு பெரிய மயிலிறக எடுத்துட்டு எப்படி பஸ்ல கொண்டு போறது ? அதான் யோசனையா இருக்கு?”

” சரி இப்ப என்ன பண்ணலாம்? சரி மயிலிறகை வாங்குவோம் “

என்று திருமுருகன் தீர்மானிக்க, அந்தப் பெண்ணிடமிருந்து மயிலிறகை வாங்குவது என்று முடிவு செய்தார்கள்.

” தங்கச்சி உன் பெயர் என்னம்மா?”

என்று திருமுருகன் கேட்க

“மீனாட்சிண்ணே “

என்று பளிச்சென பதில் சொன்னாள் , மீனாட்சி

“ஸ்கூலுக்கு போகலையா? ” என்று எழிலன் கேட்க

“இல்லண்ணே போகல. அப்பா செத்துட்டாரு .அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. நான் வீட்டுக்கு மூத்த பிள்ளை. என்ன தம்பி, பாப்பா வீட்ல இருக்காங்க .அம்மாவால வேலை வெட்டிக்கு போயி குடும்பத்தைப் பார்க்க முடியல .இந்த மயிலிறக வித்தாத்தான் சாயங்காலம் வீட்டில அடுப்பு எரியும். இல்லன்னா கஷ்டம்ண்ணே “

என்று சொல்லும் போதே மீனாட்சியின் கண்கள் கலங்கியிருந்தன.

” சரி இந்த மொத்த மயிலிறகும் எவ்வளவும்மா? என்று திருமுருகன் கேட்க

“ஆயிரம் ரூபாய்க்கு இருக்கும்ண்ணே”

” ம்…. மொத்த மயிலிறகையும் குடு”

என்று திருமுருகன் கேட்க

” நிஜமாவாண்ணே? “

என்று கண்கள் விரியக் கேட்டாள் மீனாட்சி.

” இந்த மயிலிறக வீட்டுக்கு வாங்கிட்டுப் போனா என்ன நடக்கும் மீனாட்சி ?”

என்று எழிலன் கேட்க

“அண்ணே மயிலிறக வீட்ல வச்சா வீட்டுக்கு நல்லது நடக்கும்ண்ணே; மயில் முருகனோட வாகனம். முருகன் சாமின்னா இந்த மயிலும் சாமி தானே அண்ணே ? இந்த மயிலிறக வாங்கிட்டு போய் வீட்டில் வச்சா வீடு விருத்தியடையும். நோய் நொடி வராது. குழந்தைகளுக்கு படிப்பு வரும். வீட்ல பணம் சேரும். செல்வம் கொழிக்கும் அண்ணே “

என்று வெள்ளந்தியாகச் சொன்னாள் மீனாட்சி ,

ஆயிரம் ரூபாயைக் கொடுத்து மொத்த மயிலிறகையும் வாங்கினர்.

” ரொம்ப நன்றிண்ணே “

என்று மீனாட்சி சொல்லும் போதே , அவளின் இரண்டு கண்களும் பொங்கி வழிந்தன .

“பாப்பா அழக்கூடாது “

என்று இருவரும் சொல்ல, தேம்பித் தேம்பித் அழுதாள் மீனாட்சி. அவளைத் தேற்றிய இருவரும்,

விலைக்கு வாங்கிய மயிலிறகைத் திரும்பவும் மீனாட்சியிடமே கொடுத்தனர்.

“அண்ணே நீங்க தான் மயிலிறக காசு கொடுத்து வாங்கிட்டீங்களே ? திரும்ப ஏன் என்கிட்ட குடுக்கிறீங்கண்ணே”

என்று மீனாட்சி வியப்பாகக் கேட்க

” முருகன் சாமின்னா, முருகனுடைய வாகனம் மயிலும் சாமி தானே மீனாட்சி? இந்த மயிலிறக வீட்டில வச்சா, படிப்பு வரும் . வீட்ல பணம் கொட்டோ கொட்டோன்னு கொட்டும். வீட்ல இருக்கிறவங்களுக்கு நோய் நொடி வராது. வீடு விருத்தியடையும். அது தான நீ எங்ககிட்ட சொன்ன மீனாட்சி”

” ஆமாண்ணே “

“நீ இந்த மயிலிறக கொண்டு போயி வீட்டுல வை. நீ எங்ககிட்ட சொன்ன எல்லாமே உங்க வீட்டுல நடக்கும் “

என்று திருமுருகன் சொல்ல ” அண்ணே ” என்றாள் மீனாட்சி.

அப்போது, கோயிலிலிருந்து பூஜைச் சத்தமும்கோயில் மணியோசையும் அந்தப் பகுதியையே நிறைத்தது..

எழிலனும் திருமுருகனும் தரிசனத்திற்காக கோயிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.

மகிழ்ச்சி பொங்கத் தன் வீடுநோக்கி ஓடினாள் மீனாட்சி.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *