சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பொங்கல் விழா…! …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ஐந்து நாட்கள் நடக்கும் பொங்கல் திருவிழாவிற்காக வெளியூரிலிருந்த ஆட்கள் எல்லாம் கிராமத்தில் வந்து குவிந்தார்கள். தொடர் விடுமுறை என்பதால் எல்லோருக்கும் கொண்டாட்டம். உற்சாகம். காப்புக்கட்டில் ஆரம்பிக்கும் பொங்கல், காணும் பொங்கல் முடிவடையும் வரை அந்த ஊரே சந்தோசமாக இருக்கும். கட்டுக்கட்டாகக் கரும்புகள், வீட்டுக்கு வீடு பொங்கல் என்று யார் எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் விருந்து போல சாப்பிட்டு விட்டு வரலாம் என்ற விருந்தோம்பலில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது.

ஐந்து நாட்களுக்கும் ஐந்து புது விதமான உடைகள். ஐந்து நாட்களுக்கும் பத்து புது உடைகள் என்று அவரவர் வசதிக்கு ஏற்ப பொங்கல் புத்தாடைகளை வாங்கி வைத்திருந்தார்கள்.

ஊர்ச்சாவடியில் பந்தல் போட்டு வேப்பிலை, வாழை மரங்கள் கட்டி பக்திப் பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள் தெருவில் இருந்த ஆன்மீகவாதிகள். ஐந்து நாட்களுக்கும் முழுக்க முழுக்கப் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடிக்கொண்டிருக்கும். யாராவது சினிமா பாடல்களைச் சினேகித்துக் கேட்டால், அவ்வளவுதான் அந்த ஊரே இரண்டு பட்டுப் போகும்

“ரெக்கார்ட் டான்ஸ் ஆடுறதுக்கா அந்த மாதிரிச் சினிமா பாட்டெல்லாம் போடச் சொல்றீங்க. பொங்கல் விழா, மாடு, மனுஷன் இதுகளை எல்லாம் வணங்குவதற்காகத் தான் நாம இந்தப் பொங்கல் விழாவைக் கொண்டாடுறோம். சாமிய கும்பிடுகிற நேரத்துல சல்லித்தனமான பட்டெல்லாம் போடக்கூடாது “

என்று வயிற்றெரிச்சலின் உச்சிக்குப் போன ஒருவர் பக்தியின் பரவசத்தில் பேசினார்.

” சரிங்க நீங்க மாரியாத்தா, காளியாத்தா, தொட்டிச்சி சாமி பாட்டா போடுங்க. எங்களுக்கு சினிமா பாட்டு வேணாம். நமக்குச் சாமி தான் முக்கியம்” என்று ஒரு பக்கம் வருத்தம் இன்னொரு பக்கம் நியாயமாகப் பேசுவது போல் பேசினார்கள், தெருவில் இருந்த இளசுகள். அவ்வளவு சந்தோசம் பொங்கிக் கிடக்கும், ஊரில் இரண்டு மூன்று வீடுகள் மட்டும் சோகத்தில் மூழ்கிக்கிடந்தன. பொங்கல் வந்தால் போதும். நடந்து முடிந்த விஷயம் அவர்களுக்குள் எஞ்சி விடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும். இந்த வருட பொங்கலுக்கும் அப்படித்தான். பழைய கண்ணீர் புதிய தண்ணீராய் வீரலட்சுமி, ரேவதி விழிகளில் இருந்து வழிந்தது .யார் சொல்லியும் கேட்காமல் அழுது கொண்டே இருந்தார்கள்.

” வீரலட்சுமி விடும்மா. எவ்வளவு வருசம் அழுதாலும் நம்மள விட்டுப் போனது திரும்ப வரப் போறது இல்ல. நடந்ததையே நினைச்சு நினைச்சு அழுதா மேலும் மேலும் நாம துக்கத்துக்குல தான் போவோம். அதனால நடந்தத மறந்துட்டுப் புது வாழ்க்கைக்கு மாறுறது தான் புத்திசாலித்தனம் “

என்று வீரலட்சுமிக்கும் ரேவதிக்கும் ஒருவர் ஆறுதல் சொன்னார்.

” எப்படிங்க மறக்கச் சொல்றீங்க? எதை மறக்க சொல்றீங்க? வாழ வேண்டிய வயசுல வெட்டியா போனானுங்களே ? அவனுங்கள மறக்க சொல்றீங்களா? எப்படி மறக்கிறது சொல்லுங்க? என்று ரேவதி கேட்க

” நீங்க சொல்றதெல்லாம் சரிதாம்மா. நடந்தது நடந்து போச்சு அதையே நாம பேசிப் பிரயோஜனம் இல்லை .அடுத்து நடக்க வேண்டியதத் தானே பார்க்கணும்.”

என்று அந்த ஊர்ப் பெரியவர் சொன்ன உடனே கோபம் வந்த ரேவதி, வேடிக்கை பார்க்கிற உங்களுக்கு வேதனை தெரியாது ஐயா. இழந்திட்டு நிக்கிறவங்களுக்குத் தான் அதோட வலி தெரியும் . “

” நீ சொல்றது சரிதாம்மா. நாம என்ன செய்ய முடியும்? ஊர் சம்பந்தமான விஷயம் . மரத்தில இருக்கிற ரெண்டு மூணு இலை உதிர்ந்ததுக்காக மரத்தையே வெட்டிச் சாய்க்க முடியுமா? உதுந்தது உதுந்து போச்சு. இனி வாழ வேண்டிய வாழ்க்கையத் தான பாக்கணும்.

அதுக்காக நாமளும் ஒரு மூலையில குத்த வச்சு அழுதுகிட்டு இருந்தா, தெய்வக் குத்தம் ஆயிரும்மா. ஒவ்வொரு வருசமும் பொங்கலுக்குப் படையல் போட்டு, பொங்கல் வச்சு, சாமி கும்பிடணும் அதோட ஜல்லிக்கட்டும் நடக்கணும்கிறது தானே ஐதீகம். காலங்காலமா நடந்துகிட்டு வர்ற இந்த விஷயங்களை எப்படி நாம மாத்துறது? ” என்று ஒரு பெரியவர் சொல்ல…

” மாத்தித் தாங்க ஆகணும். உசுரோட விளையாடுற , இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு எதுக்கு? மனுசனுக்கு மனுசனே பேசி ஜெயிக்க முடியல. நமக்கு பின்னாடி ஏதேதோ பேசிக் குழி தோண்டி நம்மளக் கவுக்குற மாதிரி தான் இருக்கிறானுக. மனுஷனுக்கு மனுஷனை உதவி செய்யாத இந்த உலகத்துல நம்ம விட குறைவான அறிவு இருக்கிற மாடுகள் கிட்டச் சண்டைப் போட்டு ஜெயிச்சு, நாம என்ன பண்ண போறோம்? அந்த மாடும் நான் மனுசன ஜெயிச்சிட்டேனு வாய்விட்டுச் சொல்லப் போகுதா?

இல்ல நான் இவன்கிட்ட தோத்துட்டேன் அப்படின்னு பிடிபட்ட மாடு வாய்விட்டு அழப் போகுதா ? இல்ல, அந்த மாட்டோட சொந்தக்காரங்க எல்லாம் வந்து ஜல்லிக்கட்டில ஜெயிச்ச மாட்டுக்குப் பாராட்டு விழா வைப்பாங்களா? இங்க எல்லாமே மாயை. ஜல்லிக் கட்டு வேணாம்னு என் புருஷன்கிட்டச் சொன்னேன். அவன் கேக்கல.

மாடு புடிக்கிறேன் புலியப் புடிக்கிறேன்னு போயி, இப்ப உசுர விட்டது தான் மிச்சம். இப்ப அந்த மாடு நல்லா இருக்கு. என் புருஷன் தான் செத்து போயிட்டான். வீரம்ங்கிறத மனுசனுக்கு மனுசன் தான் காட்டணும். விலங்கிட்ட போயிக் காட்டி என்ன செய்ய? அப்படி அந்த விலங்க அடக்குறதுனால அந்த விலங்குக்கு நாம தோத்துட்டோம்னு விளங்குமா ? ஏதோ பழங்காலத்தில அவங்க வீரத்தை காட்டணும்ங்கிறதுக்காக வேற வழியில்லாமல மாட்ட அடுக்கி காட்டுனாங்க .அப்படி மாட்ட பிடிக்கிறவனக்கு நம்ம பொண்ணக் கல்யாணம் பண்ணி கொடுத்தா எந்த எதிர்ப்பு வந்தாலும் நம்ம பொண்ண கை விட மாட்டான்.

காப்பாத்துவான் அப்படிங்கறத சிம்பாலிக்கா சொல்றதுக்கு தான் இந்த ஜல்லிக்கட்டு . இது அந்தக் காலத்தில தமிழரின் பாரம்பரியம் பண்பாடா இருந்தது. ஆனா இப்ப அப்படி இல்ல. எல்லாம் கம்ப்யூட்டர் மயம். ஒக்காந்த இடத்தில இருந்தே எல்லாம் பண்ணலாம். அத விட்டுட்டு இன்னும் பழைய விசயத்தப் பிடிச்சுத் தொங்குறது நியாயமில்ல. என் புருஷன் மாதிரி ரேவதி புருஷனும் ஜல்லிக்கட்டுல மாடுபிடிக்கப் போயித் தான் இறந்து போயிருக்கிறாங்க.

ஏதோ கொஞ்சம் நிவாரணம் கொடுத்து எங்கள சமாதானப்படுத்தினாலும் நிரந்தரமா எங்க கூட குடும்பத்த நடத்துறதுக்கு எங்களுக்கு வீட்டுக்காரங்க இல்லையே ? ஜல்லிக்கட்டு இல்லன்னா எந்த உயிருக்கும் எந்த சேதமும் வந்திருக்காது. இப்ப பாருங்க .அந்த மிருகத்தை ஜெயிக்க முடியலன்னு என்னோட வீட்டுக்காரர் ஆத்மா அலைஞ்சுக்கிட்டு இருக்கும். ஆனா என் புருஷன ஜெயிச்சதா எந்த மாடும் எங்கேயும் போயிச் சொல்லி சந்தோஷப்படுறதில்ல. இதுதான் உண்மை. ஜெயிக்க வேண்டிய விசயம்.

இந்த உலகத்தில நிறைய இருக்கு. அத விட்டுட்டு மாட்டுக்கிட்டயும் ஆட்டுக்கிட்டயும் நம்ம வீரத்தக் காமிச்சிட்டு இருக்கோம். இது தப்பு. இத மாத்தியாகணும். இந்த நாகரீக உலகத்துல ஜல்லிக்கட்டுல மாடு பிடிக்கிறது, அவசியமில்லாத ஒன்னு தான். மனுசனுக்கும் மிருகத்துக்கும் என்னங்க விளையாட்டு? இதில என்ன வெற்றி, தோல்வி. ஐஏஎஸ், ஐபிஎஸ் பரிட்சையில போட்டி போட்டு வெற்றி பெறலாம். இன்னும் எவ்வளவோ தேர்வுகள்ல நாம போட்டி போட்டு ஜெயிச்சு முன்னுக்கு வரலாம் .அதை விட்டுட்டு மாடு புடிச்சு என்னங்க செய்ய போறோம்? என்று ரேவதியும் வீரலட்சுமியும் ஒரு சேரச் சொன்னார்கள். பொங்கல் திருவிழாவிற்கு வந்தவர்கள் இருவர் பேசியதையும் கேட்டு யோசிக்க ஆரம்பித்தார்கள்.

‘ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை அமர்க்களமாக ஆரம்பமாகும்.

மாடு பிடி வீரர்களும் மாட்டின் உரிமையாளர்களும் தவறாது அலுவலகத்தில் வந்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்’

என்று ஒருவன் ஜல்லிக்கட்டு பற்றி, விலாவாரியாக வெளியிட்ட அறிவிப்பு, அங்கு கட்டியிருந்த குழாய் ரேடியாேவில் கேட்டுக் கொண்டிருந்தது. நடந்து சென்று கொண்டிருந்த வீரலட்சுமியும் ரேவதியும் திரும்பிப் பார்த்தார்கள்.

‘ ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ஒரு காரும் இரண்டாம் பரிசாக ஒரு பைக்கும் மூன்றாம் பரிசாக ஸ்கூட்டியும் வழங்கப்படும் ‘

என்ற அறிவிப்பு குழாய் ரேடியோவில் மறுபடியும் வந்து கொண்டிருந்ததைக் கேட்ட வீரலட்சுமிக்கும் ரேவதிக்கும் ஆறாகப் பெருகியது, கண்ணீர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *