நவநீத கிருஷ்ணன் குடும்பமே அழுது கொண்டிருந்தது.
” இப்படி நடந்திருக்கக் கூடாதுதான்; நடந்துருச்சு. என்ன பண்ணலாம்? அடுத்த வேலையப் பாக்கலாமே? போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சா?”
என்று அங்கு இருந்த ஒருவர் கேட்க வாய் திறந்து பேசாமல் தலையை மட்டும் ஆட்டினார் நவநீதகிருஷ்ணன் . எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்தபடியே அழுது கொண்டிருந்தாள் நவநீதகிருஷ்ணனின் மனைவி
“ரொம்ப நூதனமா இந்த வேலைய செஞ்சிருக்கான். யாருக்கும் தெரியாம சத்தமே இல்லாம ரொம்ப திறமையா இத செஞ்சிருக்கான்”
என்று பேசிக் கொண்டிருக்கும் போதே போலீஸ்காரர்கள் வந்தார்கள்.
” எந்த வீடு? “
என்று சீருடை அணிந்த ஒரு போலீஸ்காரர் கேட்டார்.
“இந்த வீடு தான் சார்” என்று கை காட்டினார்கள் சுற்றி இருந்தவர்கள் .
” இவ்வளவு வீடு இருக்கு; எந்த சத்தமும் இல்லாமல் இந்த வேலையப் பாத்து இருக்கானே? இந்த மாதிரிப் பண்ணி இருக்காங்கன்னா அவன் செகஜால கில்லாடியாத் தான் இருப்பான் ” என்று போலீஸ்காரர் தன் தொப்பியை சரி செய்தபடியே பேசினார்.
” நீங்க அன்னைக்கு ராத்திரி எங்க போயிருந்தீங்க? “
” கோயிலுக்கு போயிருந்தோம் சார் என்று நவநீத கிருஷ்ணன் துயரக் குரலில் பேசினான்.
” சரியான நேரம் பார்த்து தான் பண்ணி இருக்கானுக. யார் மேலயாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கா ?
என்று போலீஸ்காரர்கள் கேட்டார்கள்.
” இல்லை’’ என்றே தலையாட்டினார்.
” என்னென்ன பொருள் போச்சு?”
“பத்து சவரன் நகை. அஞ்சு லட்ச ரூபாய் ரொக்கம் அத்தனையும். போச்சு”
” எவ்வளவு தைரியமாக இந்த வேலை செஞ்சிருக்காங்க . இத சும்மா விடக்கூடாது” என்ற போலீஸ்காரர்கள்
“இதுல பிரச்சனை என்னன்னா அக்கம் பக்கம் இருக்கிற வீட்டுக்காரங்க யாருக்குமே சத்தமே இல்லாம இது நடந்திருக்கு. இதுதான் பெரிய ஆச்சரியம் .இதுல கைதேர்ந்த ஒருத்தன் தான் இதை செஞ்சிருக்கணும். இதுக்கு முன்னாடி இந்த மாதிரி தப்பு நடந்து இருக்கா? ” என்று போலீஸ்காரர் கேட்டார்.
” இல்லை” என்று தலையாட்டினாள் நவநீதகிருஷ்ணனின் மனைவி.
” ஒருத்தன் மேல எங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கு “
என்றாள் நவநீதகிருஷ்ணன் மனைவி
“யாரும்மா சொல்லு?”
“கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க வீட்டோட சாவியை தொலைச்சிட்டோம். தேடித் தேடி பாத்தோம்.கிடைக்கல .வேற வழி இல்ல. பூட்ட ஒடச்சிரலாம் கதவை ஒடச்சிரலாம்னு இருக்கும் போது தான்,
எங்க வீட்டுக்காரர் வேண்டாம் விலை ஒசந்த தேக்கு மரத்த போய் உடைக்க சொல்றியே? தப்பு. அப்படின்னுசொல்லி
ஒரு ஆள கூட்டிட்டு வந்தாரு.
அந்த ஆளு கம்பியை வச்சு எப்படியோ இந்தக் கதவ திறந்துட்டான்.ஒருவேளை அவன் திறந்து திருடி இருப்பானோ?” என்று நவநீதகிருஷ்ணன் மனைவி சந்தேகத்தைச் சொல்ல
” எங்களுக்கு முன்னாடியே களவாணிப் பயல நீங்க தான் கரெக்டா புடிச்சீங்க. அவன் தான் திருடன் . அவ எங்க இருக்கான்னு பாருங்க” என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள் காவல்துறையினர்.
” நல்ல கதவுங்க .இதை போயி உடைக்க சொல்றீங்க. கதவோட பூட்டு இருக்கிறதுனால இதை உடைச்சோம்னா .கதவு கெட்டுப் போயிடும் “நான் உங்களுக்கு எந்த சேதாரம் இல்லாமல் திறந்து தாரேன்”
என்று கம்பியை நூதனமாக வளைத்து காணாமல் போன சாவிக்கு பதிலாக ஏதோ ஒரு வீட்டில் கதவைத் திறந்து கொண்டு இருந்தான் நவநீதகிருஷ்ணன் வீட்டில் திருடிய திருடன் .
அவனைப் பிடிக்காமல் விடக்கூடாது என்று திருடர்கள் எங்கோ சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
” ரொம்ப நல்லா தான் போச்சுங்க நீங்க இல்லன்னா இந்த கதவ நாங்க உடைச்சிருப்போம் “
என்று ஒரு வீட்டுக்காரர்கள் சொல்ல
“அப்படி எல்லாம் செய்யக்கூடாது தவறு. எவ்வளவு விலை ஒசந்த கதவு. இதப் போய் உடைக்கிறேன்னு சொல்றீங்களா? இந்த மாதிரி என்னைக்காவது சாவி காணாம போச்சுன்னா நீங்க என்ன தாராளமா கூப்பிடுங்க. நான் வந்து திறந்து விடுகிறேன்”
என்று சொல்லிச் சென்றான் நவநீதகிருஷ்ணன் வீட்டில் திருடிய திருடன்
தன்னைத்தான் போலீஸ் தேடுகிறது என்று தெரியாமலேயே….