அறைகள் சொல்லும் கதைகள் கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … புதுமனைப் புகுவிழா ….! விழா 10 …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அத்தனை அழகோடு இருந்தது அந்தப் புதுவீடு.

சுற்றிலும் தென்னை மரங்கள். இயற்கை சூழ்ந்த அந்தப் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான வீட்டைக் கட்டி இருந்தார் வீரமணி. அவருக்கு நிறைய வீடுகள் இருந்தாலும் இந்த வீடு அத்தனை அறைகள் கொண்ட மிகப்பெரிய வீடாக இருந்தது.

அந்தப் பிரம்மாண்டமான வீட்டிற்குப் புதுமனைப் புகுவிழா அன்று நடந்து கொண்டிருந்தது. அழகான வண்ணங்கள் பூசப்பட்ட சுவர்கள் . அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய ஜன்னல்கள் என்று புத்தம் புதிதாக இருந்தது , அந்த வீடு. வீட்டின் முன்னால் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு, வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. நேற்று இரவே தொடங்கிய புதுமனைப் புகுவிழா கொண்டாட்டம் மறுநாள் காலை பால் காய்ச்சிக் குடியேற ஆயத்தமானது. வீட்டின் நடுவே செங்கல்கள் அடுக்கப்பட்டு மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வீரமணியின் மனைவி மணிமேகலை, புதுமனைப் புகுவிழாவிற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தாள். சொந்த பந்தங்கள், உற்றார், உறவுகள் நண்பர்கள் என்று அத்தனை பேரும் புதுமனைப் புகுவிழாவிற்கு வந்து கொண்டு இருந்தார்கள்.

” எப்படியும் வீடு கட்டுன காசுக்கு மொய் வாங்கி, வீடு கட்டுன பணத்த திருப்பி எடுத்திருவான் போல ” என்று சிலர் பேசிக் கொண்டிருந்தாலும்

“ஏங்க அவருக்கு இல்லாத சொத்து பத்தா. எந்த நல்ல விஷயத்துக்காக இந்த வீடு கட்டுனார்ன்னு தெரியல. இவரெல்லாம் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த மாதிரி செய்கிற ஆள் கெடையாது. “

என்று புதுமனைப் புகுவிழாவிற்கு வந்த உறவினர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

” என்ன வீரமணி ஏற்கனவே நிறைய வீடு இருக்குது. புதுசா எதுக்கு இந்த வீடு ? காசு நிறைய இருக்குன்னு பணத்தை எல்லாம் இப்படி கட்டிடமாக்குறீங்களா? “

என்று புதுமனைப் புகு விழாவிற்கு வந்த ஒருவர் கேட்க

” அப்படியெல்லாம் இல்லங்க. பணம் இருந்தா, அது வங்கிக் கணக்கில இல்ல லாக்கர்ல, இல்ல ஏதோ ஒரு வடிவத்தில அது சும்மா தான் இருக்கும். எனக்கு அதில இருந்து கொஞ்சம் வட்டிப் பணம் வேணும்னா வரலாம். ஆனா, இந்த மாதிரி இருப்பிடங்களக் கட்டும்போது, அதுக்கான மரியாதையே வேற மாதிரி இருக்கும் ” என்று வீரமணி சொல்ல

” உங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க; நீங்க, உங்க அம்மா, அப்பா எல்லாம் சேர்ந்து ஒரு அஞ்சு, ஆறு பேர் இருப்பீங்களா? அதுக்கு ஏற்கனவே ரெண்டு மூணு வீடு இருக்கு. திரும்பவும் இந்த வீட்ட எதுக்காக கட்டணும் ? என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்கலாமா ? ” என்று ஒருவர் கேட்க,

“மனுசனுக்கு உணவு, உடை, இருப்பிடம் இந்த மூணும் தான் அத்தியாவசியமான தேவை. இந்த தேவைகள்ல ஒன்னு குறைஞ்சாலும் மனுச வாழ்க்கையில பிரச்சனை இருக்கும். அதனால தான் இந்த வீட்ட நான் கட்டிட்டு இருக்கேன். இந்த வீட்டக் கட்டி இருக்கிறது கூட ஏதோ ஒரு வகையில நல்லதுக்கு தான்னு நினைக்கிறேன்” என்று வீரமணி சொல்ல

“ஆமா வீரமணி, நீங்க சொல்றது சரிதான். இந்த வீட்டப் பாக்கும் போது எனக்கு ஆச்சரியமா தான் இருக்கு . ஏன்னா எல்லாரும் மரத்தை வெட்டித் தான் ஜன்னல் கதவு செஞ்சு வைப்பாங்க. நீங்களும் மரத்தில ஜன்னல், கதவு செஞ்சு வச்சு இருக்கீங்க. ஆனா ஒரு மரத்தையே வீட்டுக்குள்ள வச்சு அத வெட்டாம அதோட சேத்து வீடும் கட்டி இருக்கிறீங்க. அதுதான் பெரிய விஷயமா இருக்கு” என்று அங்கு வந்திருந்தவர்கள் கேட்க

” நான் வீடு கட்டுற இந்த இடத்தில தான் இந்த மரமும் இருந்துச்சு.. இந்த மரத்த வெட்டுறதுக்கு எனக்கு மனசு வரல. இந்த மரத்தில ஏற்கனவே குருவிகள் கூடு கட்டி இருந்தது. வேற வழியில்ல, மரத்த வெட்டிட்டு தான் வீடு கட்டணும்னு சொன்னாங்க. நாம குடியிருக்க மத்த உசுருகளோட கூட்டக் கலைச்சிட்டுத் தான் நாம வீடு கட்டணுமா அது நியாயமில்லன்னு தோணுச்சு ? இந்த மரத்தையும் சேத்து தான் வீடு கட்டணும்னு நினைச்சேன். மரத்தோட கிளைகள் எங்கெங்க போகுதோ அது எதையும் தொடாம , அது போக்குல விட்டுட்டு ,இப்ப நான் வீடு கட்டிருக்கேன். இப்ப பாருங்க எனக்கும் குடியிருக்க வீடு கிடைச்சிருச்சு . இந்தக் குருவிகளுக்கும் குடியிருக்க கூடு கெடச்சிருக்கு. இந்த மரத்துக்குள்ள குருவிகளும் வாழ முடியும். இந்த வீட்டுல நாங்களும் வாழ முடியும்” என்று வீரமணி சொல்ல

” என்னங்க ஆச்சரியமா இருக்கு. மனுசங்களையே மதிக்காத இந்த உலகத்துல இந்த குருவிகள மதிச்சு அதுகளுக்கும் இடம் குடுத்து மரத்த வெட்டாம இந்த மரத்தைச் சுத்தியே வீடு கட்டி இருக்கிறிங்க. உங்க மனசு ரொம்ப பெருசுங்க ” என்று அங்கு வந்திருந்தவர்கள் சொல்ல,11

” இன்னொன்னு சொன்னா நீங்க ரொம்ப ஆச்சரியப்படுவீங்க. நான் கட்டின இந்த வீட்டுக்கு மட்டும் புதுமனைப் புகுவிழா இல்ல. இந்த மரத்துல புதுசா ரெண்டு மூணு பறவைகள் கூடு கட்டி இருக்கு. அந்த குருவிக்கூடுகளுக்கும் இன்னைக்கு தான் புதுமனைப் புகுவிழா. அதுக்கும் சேத்து கொண்டாடத்தான் இந்த விழாவையே நான் வச்சேன்” என்று வீரமணி சொல்ல

” இந்த மாதிரி மனுசங்க இருக்கிறதுனால தான் இந்த பூமி கொஞ்சமாவது குளிர்ச்சியா இருக்கு. “

என்று வீரமணியைப் புகழ்ந்தார்கள்.

புதுமனை புகுவிழாவிற்கு மஞ்சள், உப்பு சகிதம் கொண்டு வந்த உறவினர்கள் வீட்டைச் சுத்தி பார்த்தனர். வீட்டைச் சுத்திப் பார்த்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். வீட்டை விட வீட்டுக்கு நடுவில இருக்கிற மரத்த வெட்டாம அந்த மரத்துக்கும் வாழ்வு கொடுத்து மரத்தில இருக்கும் பறவைகளுக்கு கூடும் கொடுத்து வீடு கட்டிய வீரமணிக்கு பெரிய மனசுங்க. ” என்று வீரமணியையும் அவர் கட்டிய வீட்டையும் வெகுவாக பாராட்டினார்கள்.

“சில நேரங்களில் நம்மை விட நம்மைச் சார்ந்து இருப்பவர்கள் நன்றாக இருந்தால், நாம் நன்றாக இருப்போம் “என்பதற்கு வீரமணி தான் உதாரணம் ” என்று மஞ்சள் உப்பு வாங்கி வந்த கையோடு வீரமணி வீட்டின் மரத்தில் கூடு கட்டி இருக்கும் குருவிகளுக்கும் கம்பு, தினை வாங்கி வந்து கொடுத்தார்கள்.

வீரமணி கொடுத்த பத்திரிகையைத் திருப்பி பார்த்த ஒருவர் , குடியிருக்கும் வீட்டிற்கு இன்று புதுமனை புகுவிழா மட்டுமல்ல. எங்க வீட்டின் மரத்தில் கூடு கட்டிக் குடியிருக்கும் பறவைககளுக்கும் புதுமனை புகுவிழா என்று பத்திரிகை அடித்திருந்தார் வீரமணி

சில மனிதர்கள் தனக்காக வீடு கட்டி வாழ்கிறார்கள். சில மனிதர்கள் வீடு கட்டிப் பிறருக்காக கொடுக்கிறார்கள். இவர் மரத்திற்கும் அதில் கூடு கட்டிக் குடியிருக்கும் குருவிகளுக்கும் வாழ்வு கொடுத்திருக்கிறார் வீரமணி என்றனர், விழாவிற்கு வந்தவர்கள்.

வீட்டின் உள்ளே இருந்த மரத்தின் கூட்டிலிருந்து கீச்… கீச்.. என்று கத்திக் கொண்டிருந்தன புதுமனைப் புகுவிழா கொண்டாடிய குருவிகள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *