சிறுகதை

சிறுகதை … பிஞ்ச தோசை..! … ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ராஜசேகர், இன்று ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி அவனைச் சுற்றி நூற்றுக்கணக்கான பேர் ஏவலாக இருக்கிறார்கள். அவன் சொன்னால் எதையும் செய்வதற்கு தயாராக இருக்கும் ஊழியர்கள் . அவன் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கும் மனிதர்கள்

என்று இன்று உயர்ந்த இடத்தில் இருந்தான்.

அன்று காலை உணவு சாப்பிடும் போது அப்படி ஒரு சிரிப்பு அவன் எதுக்காக சிரித்தான் என்பது அவரின் மனைவி சுந்தரிக்குத் தெரியாது. ஆனால் சிரித்துக் கொண்டே இருந்தான்.

” என்னங்க ஏன் சிரிக்கிறீங்க?”

என்று மனைவி கேட்க

“இல்ல நீ தோசை கொண்டு வந்து கொடுத்தயில்ல அதப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்துருச்சு” என்று சொல்ல

தோசையைக் கொடுத்துவிட்டு

” ஏன் சிரிப்பு வருது? எனக்கு ஒன்னும் புரியலையே?”

என்றாள்.

“சுந்தரி உனக்கு தெரியாது. நான் தோசை சாப்பிடும் போதெல்லாம் நினைச்சுக்கிடுவேன் . ஆனா இன்னைக்கு அடக்க முடியல. சிரிப்பு வந்துருச்சு”

என்றான் ராஜசேகர்

“ஏன் அத்தை வந்திருக்கிறதுனாலயா?”

என்று சுந்தரி கேட்க

” உனக்கு எப்படி தெரியும்?”

என்று ராஜசேகர் வியப்பாக கேட்டான்.

” ஏதோ தெரிஞ்சுது கேட்டேன்”

என்றாள் சுந்தரி

அதற்குள் டைனிங் ஹாலுக்கு வந்த ராஜசேகரின் அம்மா அனைத்தையும் பார்த்து சிரித்து விட்டாள்.

” அப்படினென்ன ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க நான் எது விளையாட்டுக்கு சொன்னேன். அப்ப தோசையில் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கு போல சொல்லுங்க?”

என்று சுந்தரி கேட்க

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா இன்னைக்கு ராஜசேகர் இருக்கிற இடம் உயரம் வேற. ஆனா அன்னைக்கு இருந்த நிலைமை வேற .அதெல்லாம் உனக்கு புரியாது .எங்களுக்குள்ள இருக்கக் கூடிய ஒரு சின்ன காமெடி தான் இந்த தோசை “

என்று சிரித்தும் சிரிக்காமல் சொன்னாள் ராஜசேகரின் அம்மா

” அப்படி என்னத்த காமெடி சொல்லுங்க ?”

என்று சுந்தரி விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

“நீ தோசை சுட்டு கொடுத்தே இல்லையா? அது பிச்சுத் தானே சாப்பிடுகிறான் ராஜசேகர். ஆனா சின்ன வயசுல சொந்த பந்தம் எல்லாம் உட்கார்ந்து நாங்க சாப்பிடும்போது, குழந்தையா இருந்த ராஜசேகருக்கு தோசை சுட்டு கொடுக்கும் போது, தோசை பிஞ்சு போச்சு .எனக்கு பிஞ்ச தோசை வேணாம் .அப்படின்னு அடம் பிடிச்சான் எவ்வளவாே சொல்லிப் பார்த்தேன். கேக்கல. எனக்கு முழு தோசை தான் வேணும் .முழு தோசை தான் வேணும். அப்பத்தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சான். சரி அப்படின்னு பிஞ்ச தோசை எடுத்து இன்னொரு குழந்தை குடுத்துட்டு பிய்யாத தோசைய முழுசா சுட்டு கொடுத்தேன். அப்படி சுட்டு கொடுத்துட்டு ஒரு கண்டிஷன் போட்டேன் .இந்தா பார் ராஜசேகர் நான் கொடுத்த பிஞ்ச தோசை நீ சாப்பிடல .பிஞ்ச தோசை வேண்டாம்னு சொல்லிட்ட. இப்போ இந்த தோசையை நீ பிக்காம தான் சாப்பிடணும்னு சொன்னேன். வேற வழி இல்லாம கேவிக் கேவி அழுதான் ராஜசேகர். இப்ப அதை நினைச்சு சிரிச்சிருப்பானு நினைக்கிறேன்”

என்று அம்மா சொல்ல சுந்தரி, ராஜசேகர் என்று அந்த நிகழ்ச்சியை நினைத்துச் சிரித்தார்கள்.

“பிஞ்ச தோசைக்கு பின்னால இவ்வளவு பிரச்சனை

இருக்கா ? “

சிரித்துக் கொண்டே அடுப்படிக்குச் சென்றாள் சுந்தரி

தோசைக்கல்லில் இருந்த தோசை எடுத்தாள். அது பிஞ்ச தோசையாக வந்தது. அதை எடுத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜ சேகரின் தட்டில் சிரித்துக் கொண்டே வைக்க ஆயத்தமாக வந்தாள். மேலும் சிரிப்புக் கூடி, அந்த இடமே சிரிப்பரங்கமாக மாறி சிலிர்த்துக் கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *