போரூர் செல்வதற்காக ஓலாவை புக் செய்தான் ராமச்சந்திரன். இரண்டு மூன்று வாகனங்கள் என்று தள்ளிப் போய்க் கொண்டிருந்த அவனது வாகனப் பதிவு சுகுமார் என்ற பெயருடன் இருசக்கர வாகனத்தைக் காட்டி நின்றது .
ராமச்சந்திரன் இருக்கும் இடத்திற்கும் சுகுமார் வந்து கொண்டிருக்கும் இடத்திற்கும் ஐந்து நிமிடம் காட்டியது. அதனுடைய வழித்தடம் கூகுள் மேப்பில் தெரிந்து கொண்டிருந்தது. இரு சக்கர வாகன எண்ணும் ஓ டி பி எண்ணும் காட்ட சுகுமார் அதை ஆமோதித்து ராமச்சந்திரனுக்கு வருவதாக பதில் அனுப்பினான்.
அது இரவு நேரம் என்பதால் இந்த வண்டியைத் தவிர வேறு வண்டி இருக்க வாய்ப்பில்லை என்று ராமச்சந்திரன் அதை கேன்சல் செய்யாமல் அப்படியே விட்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இரு சக்கர வாகனம் நகர்ந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அப்படியே நின்றது.
” என்ன இது? அஞ்சு நிமிஷம் தான் காட்டுச்சு .அதுக்குள்ள நின்னு போச்சே ?”
என்று கூகுள் மேப்பை பார்த்துக் கொண்டிருந்தான் ராமச்சந்திரன். ஐந்து நிமிடம் காட்டிக் கொண்டிருந்தது. பின்னர் அப்படியே இருந்தது. வாகனம் நகரவே இல்லை. வேறு வாகனம் புக் செய்தால் கேன்சல் கட்டணம் நம்மிடத்தில் வசூலிப்பார்கள் என்று நினைத்த ராமச்சந்திரன் அதை கேன்சல் செய்யாமல் அப்படியே விட்டிருந்தான். எப்படியும் இந்த வண்டி தான் நமக்கு வந்தாக வேண்டும் இதை கேன்சல் செய்யக்கூடாது
என்று நினைத்துக் கொண்டு கூகுள் மேப்பையே பார்த்துக் கொண்டிருந்தான் .
சிறிது நேரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மெல்ல நகர்ந்து வந்தது. அது நகர நகர இதோ வந்துவிட்டது .இதோ வந்துவிட்டது என்று தனக்குத்தானே சந்தோஷப்பட்டான் ராமச்சந்திரன். ஒரு வழியாக ராமச்சந்திரன் இருப்பிடத்திற்கு வந்ததது, இருசக்கர வாகனம், இருசக்கர வாகனத்தின் நம்பரை பார்த்த ராமச்சந்திரன் ஓ டி பி நம்பரைச் சொல்லி வாகனத்தில் ஏறப் போனான். அந்த இருசக்கர வாகனத்தில் கீரை, காய்கறி ,பழங்கள் என்று ஏற்றி இருந்தன.
” என்ன கீரை, காய்கறிகள் எல்லாம் வாங்கி இருக்கீங்க ?
என்று ராமச்சந்திரன் கேட்க
“வீட்டுக்குப் போகும்போது அப்படியே வாங்கிட்டு போலாம்னு தான் “
என்று சுகுமார் சொன்னான்
“அதுதான் பத்து நிமிஷம் லேட்டா ? “
என்று கேட்க
“ஸாரி சார் .ராத்திரி நேரம் கடை அடைச்சிருவாங்க .அதான்வீட்டுக்குப் போகும்போது. இந்த காய்கறி எல்லாம் வாங்கிட்டேன்”
என்று சுகுமார் சொல்ல
“ஓ நீங்க போரூர் போற வழியில தான் இருக்கீங்களா?”
என்று ராமச்சந்திரன் கொஞ்சம் கனிவாய் விசாரிக்க
“ஆமா சார். போரூருக்கு அடுத்த நிறுத்தம் தான் .என்னுடைய வீடு “
என்று வண்டி ஓட்டிக்கொண்டே சொன்னான் சுகுமார்.
” நீங்க என்ன வேலை பாக்குறீங்க?”
என்று ராமச்சந்திரன் கேட்க
“ஒரு கம்பெனியில வேலை பாக்கிறேன் சார். அந்த வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போகும்போது, ஏதாவது சவாரி இருந்தா ஏத்திட்டு போயிருவேன் .அதேபோலத்தான் அங்கிருந்து வரும்போதும் ஏதாவது சவாரி இருந்தா ஏத்திட்டு வந்துருவேன்” என்று பேசிக்கொண்டே போன சுகுமார்
“ஸாரிசார் . மறந்துட்டேன் ஹெல்மெட் இந்தாங்க “
என்று பெட்ரோல் டேங்க் முன்னால் இருந்த ஹெல்மெட்டை எடுத்து ராமச்சந்திரன் கொடுக்க, சுகுமார் அதை வாங்கி தலையில் போடாமல் தன் தொடையில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்
“சார் ஹெல்மெட் போடலைன்னா போலீஸ் பிடிச்சுரும் “
என்று சுகுமார் பயமுறுத்த
“இந்த நேரம் யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க ஓட்டிட்டு போங்க”
என்று சுகுமாருக்கு பதில் சொன்ன ராமச்சந்திரன்
“அப்ப நீங்க வரும்போதும், போகும்போதும், உங்க பெட்ரோல் செலவையும் உங்க பணத்தையும் மிச்சப்படுத்துறீங்க அப்படித்தானே?”
என்று ராமச்சந்திரன் கேட்க ,சிரித்துக் கொண்டே சமாளித்த சுகுமார்.
“அப்படி இல்ல சார். ஏன் சும்மா போகணும் .ஒரு ஆள் இருக்கை சும்மாதானே இருக்குது .அப்படின்னு தான் ஏத்திட்டு வருவேன் போவேன்”
” நீங்க சும்மா ஒன்னும் ஏத்திட்டு போகலயே? பணத்துக்கு தானே ஏத்திட்டு போறீங்க ?
என்று ராமச்சந்திரன் சொல்ல, அதற்கு பதில் சொல்ல முடியாமல் இருந்தான் சுகுமார் .
“அப்போ பணத்துக்கு பணமும் ஆச்சு. பயணத்துக்கு பணமும் ஆச்சு. அப்படித்தானே ? “
என்று சொல்ல
“அப்படித்தான் சார், இந்த சென்னையில் வாழனும்னா எதையாவது ஒன்னு சம்பாதித்து தான் ஆகணும். வேற வழி இல்ல”
என்று சுகுமார் சொல்லிக் கொண்டு தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். அதற்குப் பிறகு ராமச்சந்திரன் எதுவும் பேசவே இல்லை .தன் நிறுத்தம் வந்தது. அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு
“ரொம்ப நன்றி “
என்று இறங்கி கொண்டான். மறுநாள் யோசித்தான் ராமச்சந்திரன் .
சில நாட்களில் இரு சக்கர வாகனத்தை வாங்கினான். ஓலா, ஊபரில் தன்னைப் பதிவு செய்தான்.போரூரில் இருந்து தான் பணிபுரியும் அலுவலகம் வரைக்கும் ஏதாவது தன் வாகனத்தை புக் செய்கிறார்களா? என்று பார்த்தான்
யாரோ ஒருவர் அவர் இரு சக்கர வாகனத்தைப் புக் செய்து இருந்தது தெரிந்தது .அவன் வீட்டிற்கு அருகிலேயே அவர் இருந்தார். அவரைத் தேடிச் சென்றான் ராமச்சந்திரன்.
“நீங்கதான் ஓலா புக் பண்ணீங்களா? என்று கேட்டான்
“எஸ் சார்.”
என்று சொல்லி ஓடிபி நம்பரை வாங்கி அவரை ஏற்றிக்கொண்டு, தன்னிடமிருந்த ஹெல்மெட்டை அவரிடம் கொடுத்தான்.
” நீங்க எந்த ஏரியா ?”
“நான் எக்மோர்ல வேலை பார்க்கிறேன். “
“நீங்களும் எக்மோர்க்கு தான் பைக் புக் பண்ணி இருக்கீங்க?”
” ஏன் சும்மா போகணும் ?அதுதான் உங்க சவாரிய ஏத்திக்கிட்டேன் “
என்ற ராமச்சந்திரன் சொல்ல ,
“அதுவும் சரிதான் சார். எதுக்கு சும்மா போகணும் ?உங்களுக்கு பெட்ரோலுக்கு பணமும் வந்துருச்சு. உங்க பயணத்துக்கு பணமும் வந்துருச்சு அப்படித்தானே?”
என்றார் அந்தப் பயணி
“ஆமா சார். அப்படின்னு தான் வச்சுக்கங்க “
என்று சொன்னான் ராமச்சந்திரன். பின்னால் அமர்ந்திருந்தவருக்கும் ஒரு யோசனை வந்தது .
“நாமளே ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கி, நம்ம அலுவலகம் வரும் போதும், போகும் பாேதும். ஏன் இப்படி ஆளுக ஏத்தக்கூடாது?”
என்று யோசித்துக் கொண்டே போனான், அந்தப் பயணி. இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தான் ராமச்சந்திரன்.
பணம் தான் முக்கியம் என்றாகி விட்ட நிலையில் எப்படியும் சம்பாதிக்கும் வழி தெரியும். யாரையும் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் .பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் சென்னை அம்பத்தூரிலிருந்து.
கைபேசிஎண்:7854838739.