சிறுகதை

சிறுகதை … பணிவு..! …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அந்தப் பிரதான ஓட்டலில் ஆட்கள் அங்கங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஜெய்யும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் .

அது ஒரு மதிய உணவு வேளை என்பதால் கூட்டம் கூடி இருந்தார்கள் . உள்ளே கெவின் வந்தான். ஓட்டல் முழுவதும் சுற்றி சுற்றிப் பார்த்தான். எங்கும் இடம் காலியாக இல்லாமல் இருந்தது. அவன் கண்ணில் பட்டது ஜெய் அமர்ந்திருக்கும் இடம் தான். ஆனால் அது ஒரு சிறிய மேஜை, இருக்கையாக இருந்தது. ஏற்கனவே ஜெய் ஆர்டர் செய்து வைத்திருந்த சாப்பாட்டைச் சுற்றி சின்ன சின்ன கிண்ணங்கள், சாம்பார் ,கூட்டுப் பொரியல் என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுற்றிப் பார்த்த ஜெய் தன் பக்கம் அத்தனையும் தள்ளி வைத்தான்.

இந்தச் சின்ன இடத்தில் எப்படி உட்காருவது ?

என்று நினைத்த கெவினுக்கு ஜெய் செய்தது ஆச்சர்யமாக இருந்தது.

அது மட்டுமில்லாமல் முன்னால் சிதறிக் கிடந்த உணவுப் பொருட்கள் , கூட்டுப் பொரியல் இவைகளை அங்கு கிடந்த டிஷ் சீட்டை எடுத்துத் துடைத்து சுத்தம் செய்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கெவினுக்கு ஜெய்யின் பணிவு, அவன் நடவடிக்கை ரொம்பவே பிடித்திருந்தது .

அதுவரையில் ஜெய்யை லட்சியம் செய்யாதவன். இப்போது லட்சியம் செய்தான் .

“நான் எவ்வளவோ தடவ இந்த ஓட்டலுக்கு சாப்பிட வந்து இருக்கேன் .ஆனா உங்கள மாதிரி யாரும் நடந்து இல்ல. இறுமாப்பா ஒக்காந்திருப்பாங்க. நாம தான் முதல்ல வந்து ஒக்கார்ந்தோம் அப்படின்னு எதிர்ல உக்காரவங்களுக்கு கொஞ்சம் கூட இடமில்லாம உக்கார்ந்து சாப்பிடுவாங்க . அடுத்து வர்றவங்க கஷ்டப்பட்டு தான் சாப்பிடணும் அப்படின்னு நினைப்பாங்க. இந்த இடத்துல நான் எத்தனையோ மனுஷங்க கூட சேந்து சாப்பிட்டு இருக்கேன். ஆனா நீங்க வித்தியாசமா இருக்கீங்க. இதுதாங்க பணிவு. அடுத்தவங்களுக்கும் வழிவிடணும் அப்படிங்கற பாங்கு . அது உங்ககிட்ட ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு “

என்று அறிமுகமே இல்லாத கெவின் ஜெய் இடம் பேசினான்.

” அதுக்கு என்னங்க. நீங்களும் என்ன மாதிரி மனுஷன் தானே ? நான் எப்படி சந்தோஷமா உக்கார்ந்து சாப்பிடுறேனோ ? அப்படித்தான் நீங்களும் சாப்பிடுவீங்க. அதையும் தாண்டி எனக்கு இங்க போதுமான இடம் இருக்குது. அதான் தள்ளி வச்சேன் என்று ஜெய் சொன்ன போது

கெவினுக்கு அவ்வளவு சந்தோஷம். இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள். செல்போன் நம்பர்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அறிமுகமே இல்லாத இரண்டு பேர்கள் அதற்குள் நல்ல நண்பர்களானார்கள். இருவரும் சாப்பிட்டு முடித்து பில் வந்தபோது

ஜெய் தனக்கான பில்லைக் கொடுக்கப் போனான்

“நோ …. நோ….உங்க பில்லயும் நான் தான் கொடுப்பேன்”

என்று ஜெய்யின் பில்லையும் வாங்கித் தானே கொடுத்தான் கெவின்.

அது வரையில் கெவினைப்போன்ற மனிதனைப் பார்த்திராத ஜெய்க்கு இது ஆச்சரியமாக இருந்தது.

” இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? வேண்டாம் ?

என்று எவ்வளவோ தடுத்துப் பார்த்தான்.

” இல்லங்க நான் போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன். மாதம் மூன்று லட்ச ரூபாய் எனக்கு சம்பளம் வருது. உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. உங்களுக்கு எப்பவாவது பணம் வேணும்னா என்கிட்ட கேட்கலாம்”

என்று சொல்லிய கெவின் ஜெய்க்கும் சேர்த்து பில் கொடுத்தான்.

” நான் உங்கள சார்ன்னு கூப்பிடுறத விட அண்ணன்னு கூப்பிடலாமா ? “

என்று கெவின் கேட்க

“தாராளமா கூப்பிடுங்க “

என்றான் ஜெய்

“அண்ணே வாரேன். நீங்க எப்ப வேணாலும் எனக்கு கால் பண்ணலாம். உங்களுக்கு எப்பவாவது பணம் தேவைப்பட்டா எனக்கு போன் பண்ணுங்க “

என்றான் கெவின். அப்போதுதான் கெவின் கால்களைப் பார்த்தான். அவன் கால்களில் செருப்பு அணிந்ததில்லை

“என்ன இது ஆச்சரியமா இருக்கே? எங்க செருப்பை மறந்துட்டீங்களா? “

என்று ஜெய் கேட்க, சிரித்துக் கொண்ட கெவின்

” நான் சொல்றது உங்களுக்கு ஆச்சரியமா இருக்கலாம்; .நான் சின்ன வயசுல இருந்து செருப்பே போட்டதில்லை”

என்றான் கெவின்.

” என்ன சொல்றீங்க? ” என்று ஜெய் கேட்க

” எனக்கு செருப்பு போட்டு பழக்கமே இல்லை . இந்த பூமியில எந்த உயிரும் சாகக்கூடாதுனு நினைக்கிறேன். .அதனால தான் செருப்பு போடறது இல்ல. இதுவரைக்கும் எந்தக் கல்லும் முள்ளும் என் கால்ல குத்துனது இல்ல”

என்று கெவின் சொல்ல அவனின் செய்கை மேலும் ஆச்சரியமாக இருந்தது.

நல்ல மனிதர்களின் கண்ணில் நல்லது மட்டும் தான் தெரியும். நாம செய்த செய்கை, கெவினுக்கு பிடிச்சிருக்கு போல. வேறொருவராக இருந்தா நாம அவருக்கு பயந்திட்டுத் தான் முன்னாடி இருக்கும் உணவுப் பாத்திரங்களைத் தள்ளி வச்சோம்னு நினைச்சிருப்பாங்க. ஆனா கெவின் நினைச்சது வேறு. இந்த மாதிரி நல்லவங்க கண்ணுக்கு நல்லது மட்டுமே தெரியும் .நன்றி “

என்று ஜெய் நினைத்தான்

வணக்கம் சொல்லி இருவரும் விடை பெற்றார்கள் .

அந்த இடம் முழுவதும் பரந்து விரிந்து கிடந்தது பண்பு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *