பரபரப்பாக இருந்தது புழுதி பறக்கும் அந்தத் தெரு. ஓட்டமும் நடையுமாக இருந்தார்கள் அந்தத் தெருமக்கள். ‘ஊ’ என்று நாய் ஊளையிடும் சத்தம் அந்தத் தெருவில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதைக் கட்டியம் கூறியது. அந்த ஊர் மக்கள் எல்லாம் கன்னியப்பன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் . ஏற்கனவே வீட்டின் முன்னே நிறைய ஆட்கள் கூடியிருந்தார்கள். வந்திருந்தவர்களுக்கெல்லாம் காபி கொடுத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.
” அம்மா இங்க ரெண்டு காப்பிய குடும்மா. அங்க ரெண்டு பேர் உட்கார்ந்து இருக்காங்க. அங்க கொண்டு போய் காப்பி குடு” என்று ஒருவர் காபி கொடுக்கும் பெண்ணுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தார் .
” யாருக்காவது தண்ணி வேணுமா? வேணும்னா கேட்டு வாங்கிக்கங்க”
என்று இன்னொருவர் வந்தவர்களை மும்முரமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். கன்னியப்பன் வீட்டிற்குள் ஆட்கள் வெளியே உள்ளே என்று வருவதும் போவதுமாய் இருந்தார்கள்.
” இன்னைக்குப் போயிருமா?” ” ஆமா ,கண்டிப்பா இன்னைக்கு போயிரும்னு நினைக்கிறேன். இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துல கன்னியப்பன் செத்துருவாரு ?”
” என்ன சொல்றீங்க?”
“ஆமாங்க, அவருக்குச் சின்ன வயசா என்ன? நூறு வயசுக்கு மேல ஆகுது. இன்னைக்கு நேத்து பொறந்த ஆளா.
அவரு தவறிட்டா , அவரக் கொண்டாடுறத விட்டுட்டு நாம அழுகிறதில எந்தப் பிரயோஜனமும் இல்ல”
என்று கன்னியப்பன் குடும்பத்தார்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
” சுதந்திரப் போராட்டத் தியாகிக்கான ஓய்வூதியம் வாங்குறாரா ?
” அதெல்லாம் இல்லங்க. அத அவரும் எதிர் பாக்கல .எல்லாரும் ஓடி ஓடிப் போய் சுதந்திரப் போராட்ட தியாகிக்கான ஓய்வூதியத்துக்கு எழுதிக் கொடுத்தாங்க. ஆனா எங்க தாத்தா அதெல்லாம் எழுதிக் கொடுக்கல. அரசாங்கத்தில வேலை செஞ்சுட்டு அதில வர்ற ஓய்வூதியத்த வாங்கிச் சாப்பிட்டுட்டு மீத நாளக் கழிக்கிறதுங்கிறது சராசரி மனுச வாழ்க்கை. அந்த மாதிரி வாழச் கூடாதுங்கிறதில எங்க தாத்தா ரொம்பவே பிடிவாதமா இருந்தாரு.
அதனால ஓய்வூதியம் வாங்குறது இழுக்குன்னு அத வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. இந்தியா சுதந்திரம் அடைஞ்சதே பெரிய விஷயம். அப்படின்னு நினைச்ச ஆளு. இந்தியாவிலேயே மொத்தம் பதிமூணாயிரம் பேர் தான் ஓய்வூதிய வாங்கிக்கிட்டு இருக்காங்கன்னு புள்ளி விவரம் சொல்லுது. ஆனா இந்த எண்ணிக்கையில கூட எங்க தாத்தா இல்லவே இல்ல. எங்க தாத்தா மாதிரி நிறைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட இருக்கலாம்”
என்று கன்னியப்பன் காலடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவரது சுற்றார், உற்றார், உறவினர்கள். கன்னியப்பன் வயிற்றுக்கும் தொண்டைக்குமாக அவரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. எப்படியும் இன்று போய்விடுவார். என்று பாடைக்குச் சொல்லி ஆயிற்று .கொட்டு மேளம் சொல்லி ஆயிற்று. பந்தல் போடுபவர்கள் . தூரத்தில் இருப்பவர்கள் என்று அத்தனை பேருக்கும் செய்தி சொல்லியாகிவிட்டது. கன்னியப்பன் இன்று நம்மையெல்லாம் விட்டுச் சென்று விடுவார் என்ற தகவல் அந்தப் பகுதியில் தீயை விட மிக வேகமாகப் பரவியது. உள்ளூரிலிருந்த மாலைக் கடைகளில் எல்லாம் பெரிய பெரிய மாலைகள் கட்டத் தயாராக இருந்தனர்.
” நம்ம கிராமத்தில கன்னியப்பன் ஒருத்தர் மட்டும்தான் சுதந்திரப் போராட்டத் தியாகி. அவருடைய இறப்பைச் சீரும் சிறப்புமா கொண்டாடணும் .கொட்டுமேளம் பட்டாசுன்னு பட்டையக் கிளப்பணும் “
என்று அந்தத் தொகுதி அரசியல்வாதிகள் எல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள் .அடிக்கடி கன்னியப்பன் வீட்டு ஆட்களுக்கு போன் வந்து கொண்டே இருந்தது.
” இப்ப எப்படி இருக்கிறார்?”
” என்ன சொல்றது. பேச்சு மூச்சு இல்லாம அப்படியே தான் இருக்கிறாரு. கொஞ்சங் கூட கை காலெல்லாம் அசையல. அப்படியே வெறச்சுப் பாேய் தான் நிக்குது. எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள உயிர் போயிரும். நீங்க ஆக வேண்டிய வேலை எல்லாம் பாருங்க”
என்று கன்னியப்பன் வீட்டுக்காரர்களே முடிவு செய்து விட்டார்கள். வெளியூரில் இருக்கும் உறவினர்கள் கூட வரத் துவங்கி விட்டார்கள் .கோடித் துணி எடுப்பவர்கள் ஜவுளிக்கடைக்குச் சென்று யார் யாருக்கு என்னென்ன வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிக் கோடித் துணி எடுக்கத் தொடங்கினார்கள் .
“கன்னியப்பன் எங்க வம்சத்தைச் சேர்ந்தவரு எங்க கோடித் துணியப் போட்டுத் தான் புதைக்கணும் “
என்று ஒரு சாரார் சண்டையிட
” இல்ல … இல்ல… கன்னியப்பன் எங்க தகப்பன் வழிச் சொந்தம். எங்களுடைய கோடித் துணியப் போட்டுத் தான் புதைக்கணும் “
என்று இன்னொரு சாரார் சொல்ல அங்கு பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
“இல்லங்க அவர் சுதந்திரப் போராட்டத் தியாகி. எங்க ஓய்வு பெற்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அமைப்பச் சேந்த நாங்க தான் அவருக்குக் கொடித் துணி போடுவோம் என்று ஒரு பக்கம் சொல்ல இப்படியாக பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன.
அடிக்கடி கன்னியப்பன் மூச்சுவிட்டுக் கொண்டு இருக்கிறாரா? என்பதைப் பரிசோதனை செய்து கொண்டே இருந்தார்கள், அவரின் உறவினர்கள் .
‘சட்டுப்புட்டுன்னு முடிஞ்சா தானே அடுத்த வேலைக்கு போக முடியும் ‘
என்று உறவினர்களும் ஊர் மக்களும் கன்னியப்பனைப் பார்த்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். வெள்ளாமையை எதிர்பார்த்து நிற்கும் விவசாயியைப் போல கன்னியப்பன் மரணத்தை எல்லோரும் எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள்
” ச்சே… என்னய்யா … இது, இந்தக் கெழவன் உசுரு பட்டுன்னு போகாது போல “
என்று தன் வேட்டியை உதறிவிட்டு சென்றார் ஒரு உறவினர்.
அப்போது, திடீரென்று ஒருவர்
” இன்னைக்குச் சுதந்திர தினம். இவரும் சுதந்திரப் போராட்டத் தியாகி வேற. கடைசியா சாகறதுக்கு முன்னாடி இவருக்கு தேசியக் கொடியக் குத்தி விட்டுரலாமா? “
என்று ஒருவர் சொல்ல
“நீங்க சொல்றதும் நல்லா தான் இருக்கு. தேசியக் கொடிய அவர் சட்டையில குத்துங்க “
என்றதும் ஒருவர் கன்னியப்பனுடைய சட்டையின் மேற்புறத்தில் தேசியக் கொடியை குத்தினார். அதுவரையில் அசைவற்றுக் கிடந்த கன்னியப்பனின் உடல் லேசாக அசைந்தது. கண்களை லேசாக திரட்டித் திரட்டி விழித்தார். நிலைகுத்தி நின்ற கண்கள், மேலும் கீழுமாக அசைந்தன. இமைகளை அப்படியும் இப்படியும் அசைத்தார்.
“இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபத்தேழு ஆண்டுகள் கடந்தாலும், இன்னும் அதே உற்சாகத்தோடும் அதே சந்தோஷத்தோடும் தான் ஒவ்வொரு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் எல்லாம் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறாேம் “
என்று தொடர்ந்து சுதந்திர தின வாசகங்களும் பாடலும் ஒலிக்க ஆரம்பித்தன. இன்னும் ஒரு மணி நேரத்தில் செத்து விடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த கன்னியப்பனின்
உடல் மெல்ல அசைந்த கை கால்களை நெட்டி நீட்டினார். கண்களை உருட்டி உருட்டித் திரள திரளப் பார்த்தார். ஆட்கள் எல்லாம் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, மரணப்படுக்கையில் கிடந்த கன்னியப்பன் பட்டென்று எழுந்து அமர்ந்தார். பட்டென்று எழுந்து அமர்ந்த கன்னியப்பனைப் பார்த்த எல்லோருக்கும் ஒரு பக்கம் கவலை ,என்றாலும் மறுபக்கம் சந்தோசம்
” என்ன இந்தத் தாத்தா செத்துப் போவார்ன்னு நெனைச்சா இப்படி எந்திரிச்சு உட்கார்ந்து இருக்கிறாரே? என்னன்னு தெரியலையே? “
என்று எழுந்து உட்கார்ந்திருந்த கன்னியப்பனைப் பார்த்து, பயந்து போன சில பேர் அடித்துப் பிடித்து அந்த இடத்தை விட்டு ஓடினார்கள்.
உருக்குலைந்து கிடந்த கன்னியப்பனின் உடல் இப்போது ஒன்று சேர்ந்து முறுக்கேறி நின்றது. தன் சட்டையில் குத்திய தேசியக் கொடியைத் தொட்டுப் பார்த்து சுதந்திர தின வணக்கத்தையும் ஜெய்ஹிந்த் என்றும் சொல்லியது மட்டுமில்லாமல், ஊரின் நடுவில் இருக்கும் தேசியக்கொடிக் கம்பத்தை நோக்கி விரைந்தார்.
” என்னடா இது? பெரிய கூத்தா இருக்கு. இன்னும் ஒரு மணி நேரத்துல செத்துப்போக இருந்த கிழவன் தேசியக்கொடியக் குத்தவும், வீரம் வந்து எந்திருச்சு ஓடுறாரு. இந்தியா சுதந்திரம் அடைஞ்ச செய்தியைக் கேக்கவும், உசுர் புடிச்சு எந்திரிச்சிட்டாரே? ” என்று அதிசயப்பட்டனர், அந்த ஊர் மக்கள்.
“… வந்தே மாதரம்…… ஜெய்ஹிந்த் ….. ” என்ற வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக் கொண்டே மிக வேகமாக ஓடினார் கன்னியப்பன். அவரை முந்திச் செல்ல ,அந்தத் தெருவில் இருந்த ஒருத்தருக்குக் கூட திராணியில்லை.
கன்னியப்பனின் இறப்புக்காக அரைக்கம்பத்தில் தொங்க விடப்பட்டிருந்தது தேசியக் கொடி.
“கன்னியப்பன் சாதாரணமான ஆள் இல்லங்க. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் . நேதாஜி கூட நெருக்கமா இருந்தவரு. காந்தியோட காதலா இருந்தவரு. அகிம்சை போராட்டத்தில பங்கேற்கணும்னா காந்தியுடன் சேந்துக்கிவாரு .வன்முறையாக ஏதாவது செய்யணும்னா நேதாஜியுடன் சேந்துக்கிருவாரு. எது செஞ்சும் எப்படியும் இந்தியா சுதந்திரம் அடஞ்சிரணும்னு அக்கறையா இருந்தாரு. “
என்று அவரைப் பற்றிய விமர்சனத்தை ஒருவர் சொல்ல, ” சுதந்திரப் போராட்ட வீரர் ஐயா கன்னியப்பன் அவர்கள் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரை ஆற்றுவார் “
என்று ஒருவர் சொல்ல அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த தேசியக் கொடியை … சர….சர சர ….சர…வென்று ஏற்றினார், தேசியக் கொடியில் கட்டியிருந்த பூ முடிச்சு அவிழ்ந்து கன்னியப்பன் தலை மீது அட்சதையாக விழுந்தது.
அவரைப் பார்த்து வியந்து நின்றனர், ஊர்மக்கள் . நாடி நரம்புகள் புடைக்க ரத்தம் உடலெல்லாம் பரவ, சுதந்திர தாகத்தோடு இருந்த கன்னியப்பன் நிமிர்ந்து மேலே பார்த்து
” வந்தே மாதரம்…. ஜெய்ஹிந்த் …. ” என்று உணர்ச்சி பொங்கச் சத்தமிட்டார்.
சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்து தேசியக் கொடி. சிறப்பாக ஆரம்பமானது,
சுதந்திரதின விழா.
![]()





