தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் பற்றிய அறிவுள்ளவரைக் கூப்பிட்டு வியூகம் வகுத்து வெற்றி பெறுவது எப்படி? என்று அரசியல்வாதிகள் செய்வதைப் போல அந்த நிறுவனம் முழுவதும் கணினிமயமாக்கிய பிறகு என்ன செய்யலாம்? என்று யோசித்தார் முதலாளி.
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் போல, ஸ்ரீ என்பவர் அலுவத்திற்கு வந்தார். அந்த நிறுவனத்தில் நிறைய சீனியர் ஊழியர்கள் பணியில் இருந்தார்கள். ஆனால், தற்போதைய கணினி அறிவு அவர்களுக்கு இல்லாமல் இருந்தது. அனுபவத்திலும் அறிவிலும் முதிர்ச்சி பெற்றவர்கள் தான் , தற்போதைய தொழில் நுட்பத்திற்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதையெல்லாம் பார்த்த ஶ்ரீ நிறுவன முதலாளிக்கு ஒரு ஆலோசனையைக் கூறினார்.
” சார், நம்ம நிறுவனத்தில இளைஞர்கள சேத்து வேல செஞ்சோம்னா, நம்ம நிறுவனம் இன்னும் சிறப்பா
இருக்கும் ” என்று ஸ்ரீ சொன்னார்.
“எப்படி ? “என்று முதலாளி கேட்க,
” சார், நான் சொல்றது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம். ஆனா, இத செஞ்சா நம்ம நிறுவனம் முன்னுக்கு வரும். “
” என்ன பண்ணனும் சொல்லுங்க ஶ்ரீ “
” நம்ம நிறுவனத்தில இருக்கிற சீனியர் ஆட்கள வேலைய விட்டு நீக்கிட்டு, இளைஞர்கள சேத்தம்னா நல்லதின்னு நினைக்கிறேன் . இன்னைக்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவிருக்கு. ஆனா சீனியர்களுக்கு நிறைய அறிவு இருக்கு .கம்ப்யூட்டர் அறிவில்லை .இன்னைக்கு கைபேசி,கம்ப்யூட்டர்ல இருந்து தான் உலகம் கரைஞ்சிக்கிட்டு இருக்கு .இதுல சிறப்பா இருக்கக் கூடிய இளைஞர்கள நீங்க வேலைக்கு வச்சீங்கன்னா அஞ்சு மணி நேரத்தில செய்ய வேண்டிய வேலையை அரை மணி நேரத்தில செஞ்சு
முடிச்சிடுவாங்க’ .
” ம் “
அதை விட சீனியர்களுக்கு மாசம் ஒரு லட்சம் அம்பதாயிரம்ன்னு சம்பளம் கொடுக்கிறத விட இந்த இளைஞர்களுக்கு வெறும் பத்துல இருந்து பதினைந்தாயிரம் ரூபா சம்பளம் கொடுத்தா போதுமானது. அப்போ சீனியர் ஆட்களுக்கு குடுக்கக் கூடிய சம்பளத்தில கால்வாசி குடுத்தா மட்டும் போதும் வேலையும் சீக்கிரமா நடக்கும். நமக்கு பணமும் மிஞ்சமாகும். அதனால சீனியர் ஊழியர்கள நீங்க வீட்டுக்கு அனுப்பிவிட்டு இளைஞர்களை வேலைக்கு சேருங்க உங்களுக்கு பணத்துக்கு பணமும் மிச்சம் .வேலையும் சீக்கிரம் நடக்கும் “
என்று யோசனை சொன்னார், ஸ்ரீ
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நிறுவனத்தின் முதலாளி
“நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, நிறுவனம் ஆரம்பிச்சதில இருந்து நிறைய நஷ்டம், கஷ்டங்களப் பாத்தவங்க இந்த சீனியர் ஊழியர்கள் . எங்க கூடவே ஒரு குடும்பமா வந்திட்டு இருக்காங்க. அவங்கள அனுப்பிட்டு இந்த இளைஞர்கள சேக்கிறதில எனக்கு விருப்பம் இல்லை”
என்று முதலாளி சொல்ல
“அப்படின்னா நீங்க இன்னும் பின்னுக்கு தான் போவீங்க”
என்று சாடை மாடையாகச் சொன்னார் ஸ்ரீ
“அப்படி இல்லைங்க. எப்பவுமே ஏத்திவிட்ட ஏணிய கீழ தள்ளி விடக்கூடாது. சீனியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது அதிகம் தான் :புதுசா வர்ற இளைஞர்களுக்கு நாம சம்பளம் குறைவாக கொடுக்கலாம். ஆனா, அவங்களுடைய ஒவ்வொரு வியர்வைலயும் இந்த நிறுவனம்
வளர்ந்திருக்கு . அவங்கள திடீர்னு அனுப்புறதில எனக்கு உடன்பாடு இல்ல. ஒன்னு செய்யலாம் சீனியர்களோட அறிவப் பயன்படுத்தி ஜூனியர்கள ஜாயின் பண்ண வைக்கலாம். இந்த இளைஞர்கள் கிட்ட இருக்கிற கம்ப்யூட்டர் அறிவ பயன்படுத்தி, சீனியர்களாேட அனுபவத்தையும் அறிவையும் சேத்துக்கிட்டம்னா இந்த நிறுவனம் சரியா வளரும்னு நினைக்கிறேன்”
என்று சொன்னார் முதலாளி
“சரி சார், அது உங்க இஷ்டம். நான் சொல்றது வியாபாரம் . நீங்க சொல்றது மனிதநேயம் .நான் எப்பவுமே வியாபாரத்தை முன் நிறுத்தி தான், பேசுவேன். வேலை செய்வேன். மனிதநேயம்ங்கிறது நாம காட்டுற அன்பு பரிவுல இருக்கு. தொழில்ல இருக்கக் கூடாது . அப்பிடிங்கிறது தான் என்னுடைய எண்ணம் “
என்று ஸ்ரீ சொல்ல
“உங்களுக்கு வேணும்னா, எல்லாம் வியாபாரமா இருக்கலாம் . ஆனா எனக்கு மனிதநேயம் கலந்த தொழில் அறிவு தான் எனக்கு பிடிக்கும் .அதனால சீனியர்களும் நம்ம நிறுவனத்தில இருப்பாங்க. ஜூனியர்களும் இருப்பாங்க .அறிவுள்ள சீனியர்கள்கிட்ட இருந்து அனுபவத்தையும் அறிவையும் வாங்கி, இந்த ஜூனியர்களை நாம பயன்படுத்தினாேம்னா இந்த நிறுவனத்த மேலும் முன்னுக்கு கொண்டு வர முடியும் “
என்று சொல்லிய முதலாளியைக் கை எடுத்து கும்பிட்டு விட்டு
” நான் இந்த நிறுவனத்தில் பணி புரிகிறதா இல்ல சார். நான் கிளம்புறேன் “
என்று கிளம்பினார் ஸ்ரீ
” உங்களுக்கு என்ன வயசு ஆகுது ஸ்ரீ ?
என்று முதலாளி கேட்க
” எனக்கு 50 வயது ” என்றார் ஸ்ரீ
” எனக்கு 72 வயசு. நானே இந்த நிறுவனத்துக்கு சீனியர் தான் .முதல்ல நான் தான் இந்த நிறுவனத்த விட்டு வெளியில போகணும் .நீங்க சொல்ற இளைஞர்கள நிறுவனத்தில வைக்கணும்னா, நான் இளைஞர்
இல்லையே ? முதல்ல வெளியே போக வேண்டிய ஆள் நான் தான். என்னுடைய சொத்து அப்படிங்கறதுக்காக வயசான ஆளான நான் இங்க இருக்கலாமா ? இது தப்பில்லையா ?
என்று முதலாளி சொல்ல எதுவும் பேசாமல் விழித்தார் ஸ்ரீ.
“சார், நம்ம நிறுவனத்துக்கு, ஒரு பெரிய கொட்டேஷன் வந்திருக்கு . அனுப்பலாமா?”
என்று அனுபவம் மிகுந்த ஒரு சீனியர் ஊழியர் சொல்ல
” தம்பி, சார் சொல்றத என்னனு கேளுங்க .அவர் சொல்றபடி கேளுங்க “
என்று முதலாளி ஜூனியர் ஊழியரிடம் சொல்ல,
” எஸ் சார்.. சொல்லுங்க “
என்று சீனியர் ஊழியர்களிடம் கேட்டு, கணிப்பொறியில் பதிவு செய்து கொண்டிருந்தனர் ஜூனியர் ஊழியர்கள்.
இதைப் பார்த்த ஸ்ரீ க்கும் இது சரியெனப்பட்டது.
” ஸ்ரீ…அறிவார்ந்த சீனியர்களும் கணிப்பொறியில அறிவார்ந்த ஜூனியர்களும் சேந்தா தான் எந்த நிறுவனமும் வெற்றி பெறும் என்றார் முதலாளி
” எஸ் சார்.. ” என்றார் ஸ்ரீ.
நிறுவனம் வேகமாக இயங்க ஆரம்பித்தது.